தில்லி பா.கண்ணன்
'நோய் நொடியற்ற, சுகாதாரமிக்க கிராமச் சூழ்நிலையில் வளரும், கல்வியறிவைப் பெறும் சிறார்கள் பின்னாளில் தங்கள் சமூகத்தைச் சீர்திருத்துவார்கள். அதற்கேற்ப நாம் நடக்க வேண்டும். இங்கும் அதே மனப்பான்மை வளரப் பாடுபடுவோம்.
'டாம்' காலணியை வாங்கும்போது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்களால் எங்கோ இருக்கும் ஓர் அநாதையான குழந்தைக்கு கால்களில் அணிய காலணிகள் கிடைக்கின்றன. தொற்றுநோயிலிருந்து அது காப்பாற்றப்படுகிறது. இதுமட்டுமின்றி சுயமரியாதையும் பெறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 5-ஆம் தேதியை காலணிகள் இல்லாமல் நடக்கும் நாளாக 'டாம்' அனுசரிக்கிறது' என்பதே பிலேக் மிளாக்ஸியின் குறிக்கோளாகும்.
அமெரிக்காவில் 2006-இல் உருவானதே 'ஒன்றுக்கு ஒன்று' என்ற இயக்கம். இதற்கு அடித்தளமிட்ட பிளேக் மிகாஸ்கி, வட அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆர்லிங்டன் நகரில் 1976-இல் பிறந்தவர்.
இவரது தந்தை மருத்துவராகவும், தாய் எழுத்தாளராகவும் விளங்கினார். சேவையிலும், சாகசம் நிறைந்த சுற்றுலாப் பயணத்திலும் விருப்பம் உள்ளவர்.
ஒருமுறை லத்தீன் (தென்) அமெரிக்க நாடான அர்ஜென்டினாவுக்குச் சென்ற இவர், கடைத்தெருவில் சுற்றி வருகையில் பலரும் நைந்த ஆடைகள், காலணிகள் ஏதுமில்லாமல், கடைகளில் விளம்பர அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.
இந்தச் சமூக நிலையைத் தீர்க்க எண்ணமிட்ட அவர், ஏழைச் சிறுவர்களுக்கு இலவசமாக காலணிகளை வழங்கி ஊக்குவித்து வந்த ஒரு தன்னார்வல இயக்கத்துடன் இணைந்தார். பல கிராமங்களுக்குச் சென்று அவர் ஆராய்ந்தபோது, எண்ணற்றோர் வெறும் காலுடன் சுற்றுவதால் ஏற்படும் கொப்புளங்கள், சேற்றுப் புண்கள், அவற்றால் உண்டாகும் தொற்று நோய்களுக்கு ஆளாகுவதைக் கண்டார்.
இவர் தன்னார்வலர்களுடன் இணைந்து, 'டாம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் அல்ல; ஒன்று வாங்கினால் ஒன்று தானமாகக் கொடுப்போம்' என்றார். அதாவது, 'ஒரு காலணி வாங்கினால், அதே வகை மற்றொன்றைத் தேவைப்படுவோருக்கு எந்தப் பிரதிபலனும் பாராமல் அளிப்போம்' என்ற வாக்குறுதியே அது.
தொடங்கிய ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலணிகள் தானம் கிடைத்தன. 2013 வரை 'டாம்' சுமார் 100 லட்சத்துக்கும் மேல் காலணிகளைத் தேவைப்படுவோருக்கு வழங்கியுள்ளது. நிறுவனத் தொண்டர்கள் பல இடங்
களுக்குச் சென்று, காலணிகளைச் சேகரித்து, அங்குள்ள வறியோருக்குத் தங்கள் கைகளாலேயே காலணிகளை அணிவித்து, அவர்கள் முகம் மலர்வதைக் கண்டு களிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
2011-இல் கண் அறுவைச் சிகிச்சை செய்தவர்களுக்குக் கண்ணாடி, குடிநீர் உள்ளிட்டவற்றையும் 'டாம்' நிறுவனத்தினர் வழங்கினார். தொழில் முனைவோர்களுக்காகத் தான் எழுதிய புத்தக விற்பனையிலிருந்து கிடைத்த வருவாயைக் கீழ்த்தட்டு மக்களுக்காகவே செலவழித்தார்.
ஆண்டுதோறும் மக்கள் விருப்பத்துக்கேற்ப புதுவிதமான பிரிண்ட், கம்பளி வகைகள், வசீகரப் புள்ளிகள் கொண்ட காலணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இங்கும் பெரிய அங்காடிகளில் (மால்) 'டாம்' காலணிகள் கிடைக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.