ஞாயிறு கொண்டாட்டம்

சாதனை படைப்பேன்...

'என் பெயரைச் சொல்லி அழைத்த போதும், மேடையில் நின்று பதக்கம் அணிவித்தபோதும் ஆன நிமிடங்கள், பல மாதங்கள் உழைப்பை அர்த்தமாக்கிய தருணங்கள்.

தினமணி செய்திச் சேவை

பொ.ஜெயச்சந்திரன்

'என் பெயரைச் சொல்லி அழைத்த போதும், மேடையில் நின்று பதக்கம் அணிவித்தபோதும் ஆன நிமிடங்கள், பல மாதங்கள் உழைப்பை அர்த்தமாக்கிய தருணங்கள். சுருக்கமாகச் சொன்னால், சாதனை என்பது கனவில் தொடங்கி, உழைப்பில் நிறைவேறும். எதிர்காலத்தில் சர்வதேச அளவிலும் சாதனை படைப்பேன்' என்கிறார் எ.காவியா எழில்.

அருணாசல பிரதேசத்தில் உள்ள இடாநகரில் நடைபெற்ற 69-ஆவது தேசிய அளவிலான 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான பளு தூக்கும் போட்டியில், தமிழ்நாடு அணிக்கு 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. ஒட்டுமொத்த மாணவிகளுக்கான பிரிவில் 2-வது இடம் கிடைத்தது.

போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி எ.காவியா எழில் கூறியது:

'திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மன்னார்குடியே என்னுடைய சொந்த ஊர். தற்போது வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறேன். மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன்.

2025-ஆம் ஆண்டு அக்டோபர் 25-இல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டியில் 77 கிலோ எடைபிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றேன்.

அந்த வெற்றியின் மூலம், கண்டிப்பாக தேசியப் போட்டியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. என்னுடைய வெற்றி என்பது தனிநபருக்கான மகிழ்ச்சி மட்டுமல்ல. அது குடும்பம் முதல் மாநிலம் வரை கொண்டாடும் மகிழ்ச்சி.

பளுதூக்குதல் என்பது உடல் வலிமை, மன உறுதி, பொறுமை, தன்னம்பிக்கை ஆகிய அனைத்தையும் இணைக்கும் நம்பிக்கை பாலம். நாள்தோறும் வியர்வையுடன் கூடிய பயிற்சி, உடல் வலியை தாண்டிய முயற்சி, சில தோல்விகளை எதிர்கொண்ட தருணங்கள் இவை அனைத்தையும் கடந்து வந்துதான் தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன்' என்கிறார்.

இவர்களை வழிநடத்திச் சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குநர் நா.ராகேஷ் கூறியது:

'2016-ஆம் ஆண்டில் தெலங்கானாவில் நடைபெற்ற போட்டியில் 1 தங்கம், 1வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. 2024-இல் தில்லியில் நடைபெற்ற போட்டியில் பெரும் முயற்சி செய்தும் பதக்கம் பெற முடியவில்லை. அதே ஆண்டில் மணிப்பூரில் நடைபெற்ற போட்டியில் 1 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்களை வென்றோம்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை உத்தரவின்பேரில், தற்போது அருணாசலப் பிரதேசத்துக்கு 16 மாணவர்களை அழைத்துச் சென்றோம். என்னுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் த.பிரமிளா, எம்.எஸ்.கலையரசி உள்ளிட்டோர் வந்தனர்.

17 வயதுக்கு உள்பட்டோருக்கான மாணவியர் பிரிவில் மகாராஷ்டிர அணி 186 புள்ளிகள் பெற்று முதலிடமும், தமிழ்நாடு அணி 176 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடமும் பெற்றன.

ஒட்டுமொத்த அணியின் சார்பில் 324 புள்ளிகள் பெற்று மகாராஷ்டிர அணி முதலிடமும், 319 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு அணி 2-ஆவது இடமும் பிடித்தன' என்றார் ராகேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT