ஞாயிறு கொண்டாட்டம்

எஸ்.ஏ.பி. 100: அப்பாவும், நானும்..

1924-ஆம் ஆண்டில் காரைக்குடியை அடுத்துள்ள கோட்டையூரில் பிறந்தவர் 'குமுதம்' நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை.

எஸ். சந்திரமெளலி

1924-ஆம் ஆண்டில் காரைக்குடியை அடுத்துள்ள கோட்டையூரில் பிறந்தவர் 'குமுதம்' நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை. இது அவரது பிறந்த நூற்றாண்டு. இந்தத் தருணத்தில் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் அவரது மகனும் அமெரிக்காவின் பிரபல இதய நோய் மருத்துவருமான எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன்.

அவர் கூறியது:

'இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரமுகர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களிலேயே மிகவும் எளிமையானவர் ஒருவர் என்றால் அது என் தந்தை எஸ்.ஏ.பி.அண்ணாமலைதான். தோற்றத்தில் மட்டுமல்ல; உள்ளத்திலும் அவர் மிகவும் எளிமையானவர்.

உள்ளூர் விஷயங்கள் முதல் சர்வதேச நடப்புகள் வரை அனைத்தையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்வார். எல்லாவற்றிலும் அவருக்கென்று தனிப்பட்ட கருத்து இருக்கும். ஆனால் அந்தக் கருத்தை மற்றவர்கள் மீது அவர் திணிக்கவே மாட்டார்.

சுவாமி விவேகானந்தர் மீது அவருக்கு அபரிமிதமான மதிப்பும், மரியாதையும் உண்டு. ஒரு காலத்தில் அவர் விவேகானந்தர் குறித்து சொற்பொழிவுகளையும் செய்திருக்கிறார். ஆனால், பத்திரிகைப் பணியால் சொற்பொழிவாற்றுவதை அவர் நிறுத்திக் கொண்டார்.

நான் பதினான்கு வயதிலேயே விவேகானந்தர் பற்றிய புத்தகங்கள் நிறைய படித்து, அவரது போதனைகள் மீது பெரும் நாட்டம் கொண்டேன். இந்த நேரத்தில், 'நீ பள்ளி மாணவன். நல்ல விஷயங்களைப் படிப்பதும், தெரிந்துகொள்வதும், கடைப்பிடிப்பதும் நல்லதுதான். ஆனால் உனது வாசிப்பு என்பது பல்வேறு விஷயங்கள் சார்ந்த பரவலான வாசிப்பாக இருக்க வேண்டும்' என்று என் தந்தை ஆலோசனை கூறி, எனது வாசிப்பை விசாலப்படுத்தினார்.

அவருக்கு பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மீது பெரும் அபிமானமும், மரியாதையும் உண்டு. நேருஜி சென்னையில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு, என்னையும் கூட அழைத்துகொண்டு செல்வார். நேருவின் மீதான பேரபிமானத்தின் காரணமாகவே எனக்கு ஜவஹர் பழனியப்பன் என்று பெயர் வைத்தார்.

மோதிலால் நேருவுக்கு ஜவஹர்லால் நேருவைத் தவிர விஜயலட்சுமி, கிருஷ்ணா என்று இரண்டு மகள்கள் உண்டு. எனக்கு ஜவஹர் என்று பெயர் வைத்ததைப் போலவே, எனது மூத்த சகோதரிக்கு விஜயலட்சுமி என்றும், இளைய சகோதரிக்கு கிருஷ்ணா என்றும் பெயர் வைத்தார் என் தந்தை அண்ணாமலை.

ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர் என் தந்தை. வீட்டு பூஜை அறையில் பல சுவாமி படங்கள் இருக்கும். ஆனால் அவர் விரும்பி வணங்கியது என்றால், பாலசுப்ரமணியரைத்தான். ஒருநாள், 'இந்தப் படம் மட்டும் உங்களை மிகவும் கவர்ந்ததன் காரணம் என்ன?' என்று நான் கேட்டேன்.

அவர் புன்சிரிப்புடன், 'நாம்தான் கடவுளைக் கும்பிடணும். கடவுள் அருள் வழங்குகிற மாதிரிதான் எல்லாப் படமும் இருக்கும். ஆனால் இதில் பாலசுப்பிரமணியர், கும்பிடற நம்மை மதிச்சு தானும் தன் இரு கரங்களைக் கூப்பி, பதில் வணக்கம் செலுத்தி, அன்போட பேசற மாதிரி ஒரு நெருக்கம் இருக்கு. அதனாலதான் இந்தப் படம் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு' என்றார்.

நான் பள்ளிப் படிப்பை முடித்தபோது, எம்.பி.பி.எஸ். சேர விரும்பினேன். அந்த நேரத்தில் எனது தந்தை, ' மருத்துவம் வேண்டாம். பிசினஸ், பத்திரிகைத் துறை சார்ந்து படி' என்று ஆலோசனையை கூறாமல், எனது விருப்பப்படியே மருத்துவம் படிக்க அனுமதித்தார். பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்று, மேற்படிப்புக்கு அமெரிக்கா செல்வதாகச் சொன்னபோதும் அனுமதித்தார். நான் அமெரிக்காவில் படிப்பை முடித்து, அங்கே பணியாற்ற வாய்ப்பு வந்தபோது, அதனை ஏற்றுக் கொள்வேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், இந்தியாவுக்குத் திரும்பி வரும்படி அவர் என்னை வற்புறுத்தியதே இல்லை.

அமெரிக்காவில் எனது வீட்டுக்கு பலமுறை வந்து தங்கியிருக்கிறார். தினமும் காலையில் ஒன்பது மணிக்குத் தயாராகி, பகல் ஒரு மணி வரை எழுத்து, பத்திரிகைப் பணிகளைக் கவனிப்பார். மதிய உணவுக்குப் பிறகு ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்வேன்.

'இங்கே நிறைய தேவாலயங்களைப் பார்க்க முடிகிறது. மக்களுக்கு இறை நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா என்றாலே செல்வச் செழிப்பு, படாடோபம், வேகம், ஆர்ப்பாட்டம்.. என்று ஒரு இமேஜை ஹாலிவுட் படங்கள் ஏற்படுத்திவிட்டன. இங்கே நேரில் வந்து பார்க்கிறபோதுதான் அது நிஜமான அமெரிக்காவின் பிம்பம் இல்லை' என்று அவர் சொல்லுவார்.

அவருக்கு மிகவும் பிடித்தமான நகரம் லண்டன். அவர் விரும்பினார் என்பதற்காக, சில வாரங்களுக்கு லண்டனில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவருடன் தங்கி, பல்வேறு இடங்களுக்கும் அவரை அழைத்துச் சென்றேன். ஷேக்ஸ்பியர், ஷெல்லி ஆகிய இருவர் வசித்த வீடுகளுக்கும் சென்று பார்த்தோம். அந்த மாமனிதர்களின் கையெழுத்துப் பிரதிகள், பயன்படுத்திய பொருள்கள் என அவர்கள் தொடர்பானவைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவதற்றை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்.

'இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் ஏராளமான தலைசிறந்த இலக்கியவாதிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கூட இப்படி ஒரு ஏற்பாட்டினை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று அப்பா குறிப்பிட்டார்.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நவம்பரில் 'குமுதம்' பத்திரிகையை எனது தந்தை துவக்கினார். அடுத்த நாற்பத்தேழு வருடங்கள் அதன் ஆசிரியராக இருந்து பத்திரிகைத் துறையில் பல சாதனைகளைப் புரிந்தார். ஏராளமான புதுமைகளைப் புகுத்தி, குமுதத்தின் விற்பனையை ஆறு லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக உயர்த்தினார்.

1994 ஏப்ரல் 14-இல் மறைந்தார். அவர் மறைந்தவுடன் அவரது புகைப்படம் முதல் முறையாக குமுதத்தில் பிரசுரமானது. சக மனிதர்களை நேசித்த அந்த எளிமையான சாதனையாளரது நூற்றாண்டினை வரும் டிசம்பரில் தக்க முறையில் கொண்டாடவிருக்கிறோம்'' என்கிறார் ஜவஹர் பழனியப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT