சிறப்புமிக்க ஸ்காட் படைப்புகள்..!
கதைப் பாடல்கள், சுறுசுறுப்பான கவிதை, சரித்திர நவீனங்கள் ஆகிய மூன்று துறைகளில் இலக்கிய முக்கியத்துவம் பெற்றவர் 'சர் வால்டர் ஸ்காட்' .
கதைப் பாடல்கள், சுறுசுறுப்பான கவிதை, சரித்திர நவீனங்கள் ஆகிய மூன்று துறைகளில் இலக்கிய முக்கியத்துவம் பெற்றவர் 'சர் வால்டர் ஸ்காட்' . இவர் சுகவீனப்பட்ட நிலையில் சொல்லச் சொல்ல பிறர் எழுதியவை இன்றும் புகழோடு பேசப்படுகின்றன. சரித்திர நவீனங்களை உருவாக்குவதில் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இவருடைய மிகப் புகழ் பெற்ற நவீனம் 'ஐவன்ஹோ'. 1819-இல் வெளியான மூன்று நாவல்களில் இதுவும் ஒன்று. இந்த மூன்று நவீனங்களையும் அவரால் உட்கார்ந்து எழுத முடியாதபடி, வாத நோயால் தாக்கப்பட்டு உடல்சுகவீனப்பட்ட நிலையில், அவர் சொல்லச் சொல்ல பிறர் எழுதியவைதான். அவர் கைப்பட எழுதியவை ஒன்றுமே கிடையாது.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகரில் 1771-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-இல் பிறந்தார் கவிஞரும் நூலாசிரியருமான சர் வால்ட் ஸ்காட். சிறு வயதில் இளம்பிள்ளைவாதம் தாக்கி, அவரை வாழ்நாள் முழுவதும் முடமாக்கியது. வலுவுள்ளவராக உரிய சிகிச்சை பெற வேண்டி, அவரது தாத்தாவிடம் அனுப்பப்பட்டார். அங்கு அவரது அத்தை, கதைகளைச் சொல்லியும், பாட்டுகளைப் பாடியும், நாட்டுப் பாடல்களாலும் ஸ்காட்லாந்தின் வீரர்கள் வரலாற்றையும் கூறி ஸ்காட்டை வளர்த்தார்.
சர் வால்டர் ஸ்காட்டின் படிப்பு அநேகமாக வீட்டிலோ, டியூஷன் மூலமாகவோ நடைபெற்றது. 1783-இல் எடின்பரோ சர்வகலாசாலையில் சேர்ந்தார். ஸ்காட் சட்டம் படிக்கத் தொடங்கியபோது, நண்பர்களுடன் பழங்காலக் கோட்டைகளுக்கும், போர்க்களத் திடல்களுக்கும் போய் வந்தார். எல்லாவற்றையும் ஆய்ந்தார்.
பிற்காலத்தில் ஹிடன் டேல் ஜில்லாவின் எல்லையில் உள்ள பள்ளத்தாக்குகளையும் மலைகளையும் ஆராய்ந்து அங்கு மக்களிடையே வழங்கும் கதைப் பாடல்களைச் சேகரித்தார்.
1797-இல் சார்லட்டி மேரி கார்ப்பென்டர் என்ற பெண்ணை மணம் செய்துகொண்டார். ஸ்காட் வழக்குரைஞராகப் பணியாற்றினாலும், கதைப் பாடல்களையும், கவிதைகளையும் சேகரிப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிட்டார்.
1799-இல் இவரை செல்கிர்க்ஷயர் நகருக்கு துணை ஷெரீப்பாக நியமித்தனர். குறைவான வேலையும், நிறைவான ஊதியத்தையும் பெற்றார். இதனால் அவர் தனது மூன்று பாகங்கள் கொண்ட நூலான 'மினிஸ்டர்லி ஆஃப் தி ஸ்காட்ஸ்' என்ற நூலைப் பதிப்பிக்க முடிந்தது. இது 1802 மார்சில் வெளிவந்தது.
1805-இல் ஸ்காட்டின் நீண்ட கவிதை நூலான 'தி லே ஆஃப் தி லேக்' பிரமாதமாகச் சாதனை படைத்தது. இந்த நூல்கள் எல்லாம் சுற்றுலாப் பயணிகளை ஸ்காட்லாந்துக்கு வர வைக்கும் வகையில் இருந்தது.
அற்புதமான நூல்களால் உலகப் புகழ் பெற்ற ஸ்காட்டுக்கு 'பிரபு பட்டம்' என்ற உயரிய பட்டத்தை ஸ்காட்லாந்து மன்னர் 1820-இல் வழங்கினார்.
1826-இல் நூல் வெளியீட்டுத் துறையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், பெரும் தோல்வியைக் கண்டார். ஏராளமாகக் கடன்பட்டதால், கடனைத் தீர்க்க கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
இவரது மற்றுமொரு நூலான 'லைஃப் ஆஃப் நெப்போலியன் போன பார்ட்' என்ற நூல் விற்பனையில் சாதனையைப் படைத்துப் புகழ் பெற்ற முதல் சரித்திர நூல்.
இவர் 1831 செப்டம்பர் 21-இல் மறைவுற்றார்.
ஸ்காட்டின் புகழ்பெற்ற நவீனமான ஐவன்ஹோ பற்றிய சுருக்கமான செய்தி:
'ஆங்கிலேயர்களின் வாழ்க்கையைக் கருவாகக் கொண்டு ஸ்காட் உருவாக்கிய முதல் நவீனம் ஐவன்ஹோ. இந்த நூல் சாக்ஸானியர்களுக்கும், நார்மானியர்களுக்கும் எழுந்த பகையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஸெட்ரிக் என்ற சாக்ஸானிய வீரரின் மகன் வில்பர்ட் ஐவன்ஹோ. இவரே கதை நாயகர். இரு இனத்தாருக்கும் தீராத போர். ஐவன்ஹோ பல சாகசங்களைப் புரிகிறார். ரோவனா, ரெபக்கா என்ற இரு பெண்கள், ஐவன்ஹோவைக் காதலிக்கின்றனர். கடைசியில் ரெபக்கா தன் காதலைத் தியாகம் செய்கிறாள். ரோவனா ஐவன்ஹோவை மணம்புரிகிறாள். மன்னர் ரிச்சர்டு வருகையால் சாக்ஸானியரும் நார்மானியரும் பகையை மறந்து ஒன்றுபட்டனர். ஒற்றுமையாயினர்' என்பதே அந்த நவீனம் சொல்லும் கருத்தாகும்.
, சத்தியமங்கலம்.