'தக் லைஃப்' படத்தின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அந்தப் பேட்டியில் அவர், 'மற்றொரு 'நாயகன்' படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நாங்கள் இருவரும் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம் தான், மன்னித்து விடுங்கள்.
மீண்டும் அதே பாணியில் படம் எடுப்பது எங்களின் நோக்கம் ஒருபோதும் இல்லை. அப்படி ஏன் செல்ல வேண்டும்? நாங்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு படைப்பை உருவாக்க விரும்பினோம்.
இங்கு அதிகப்படியான எதிர்பார்ப்பை விட மற்றொரு எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது. பார்வையாளர்கள் எங்களிடமிருந்து வேறு வடிவிலான ஒரு படைப்பை எதிர்பார்த்தார்கள்.' எனக் கூறியிருக்கிறார்.
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், இந்தப் படம் வெற்றி அடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மேலும் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேசவேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார். எனவே நான் இனி அதிகம் பேசப் போவதில்லை. குறைவாகத்தான் பேசப் போகிறேன்' எனப் பேசியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள மார்கன் படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறது படக்குழு. அப்போது விஜய் ஆண்டனியிடம் நடிகர் ஸ்ரீகாந்த்தின் போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், 'சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்று இல்லை. நீண்ட காலமாகவே இருக்கிறது. புகை பிடிப்பதும் போதைப் பழக்கம்தான். அதன் அடுத்த கட்டம்தான் போதைப்பொருள் பழக்கம். நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். உண்மை என்னவென்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது' என்று கூறியிருக்கிறார்.
2005-ம் ஆண்டு சிம்புவின் 'தொட்டி ஜெயா' படத்தில் ஆரம்பித்த கார்த்தி நேத்தாவின் சினிமா பாடல்கள் எழுதும் பயணமானது, 'தாமிரவருணியில் நீந்தி வந்த', 'என் தாரா, என் தாரா!
நீயே என் தாரா', 'போறானே', 96 பாடல்கள், 'இதுவும் கடந்துபோகும்', மெய்யழகன், இப்போது மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் வந்த 'அஞ்சு வண்ணப் பூவே' என இருபது ஆண்டுகளில் நூறாவது படம், நூற்றுச் சொச்சம் பாடல்கள் எனக் கவனிக்கத்தக்க முக்கியமான தமிழ் கவிஞர்கள், பாடலாசிரியர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க பாடலாசிரியராகவும் உயர்ந்து விட்டார் கார்த்திக் நேத்தா.
அதர்வாவின் நடிப்பில் வெளிவந்துள்ள 'டி. என். ஏ.' படத்துக்கு பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.
இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அதர்வா, 'படம் முடியும்போது நன்றாக வேலை செய்திருக்கிறோம் என்று தோன்றியது.
எங்கள் படத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்தத் தருணத்தில் நான்தான் உலகத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கும் மனிதர் என்று சொல்லுவேன். நிறைய விஷயங்களை இந்தப் படத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்' என்று பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.