விவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர். தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திருப்பூர் குருவி'.
உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இசக்கி ராஜா, கே.எம்.ஆர், விஜயன், சரவணன், ரஞ்சன், தர்ஷினி, திருக்குறளி, இந்து, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பிரத்யேகக் காட்சி திரைப் பிரபலங்களுக்காகத் திரையிடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட இயக்குநர் வி.சேகர் பேசுகையில், சிறிய அளவில், சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்கள். 10 நாள்களில் ஒரு படம் முடிப்பது என்பது பெரிய விஷயம். அதை இந்த குழுவினர் செய்திருக்கிறார்கள்.
இயக்குநரும் தனக்கு எது தேவை, என்ன சொல்லப் போகிறோம், என்பதில் மிக தெளிவாக இருந்து படத்தை முடித்திருக்கிறார். இதுபோன்ற சிறிய படங்களை ஊடகங்கள் இனம் கண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும். ரூ.15 லட்சத்தில் நான் படம் தயாரித்தேன். அந்தப் படம் வெற்றி பெற்றதற்கு ஊடகங்கள்தான் காரணம்'' என்றார்.
படத்தின் இயக்குநர் ஜெயகாந்தன் ரெங்கசாமி பேசுகையில், நான் ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன். மற்றொரு படம் எடுத்து தயாராக வைத்திருக்கிறேன், வெளியாகவில்லை.
நான் திருப்பூரில் பணியாற்றியபோது அங்கு நடக்கும் சில சம்பவங்களை கவனித்திருக்கிறேன். அவற்றை மக்களிடம் சொல்ல வேண்டும், என்று அப்போதே எனக்கு தோன்றியது.
பிறகு நான் இயக்குநர் ஆன பிறகும் அந்த கதையை எடுக்கவில்லை. என்னுடைய முந்தைய படம் வெளியாகவில்லை, அடுத்து ஒரு படம் செய்யலாம் என்று முடிவு செய்த போது, திருப்பூரில் நடந்த கதையை இயக்கலாம் என்று தோன்றியது.
உடனே தொடங்கி விட்டேன். ரசிகர்களின் ஆதரவுக்காகக் காத்திருக்கிறோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.