கொச்சியைச் சேர்ந்த எழுபத்து ஐந்து வயதான குரியன் ஜேக்கப், தைவானின் தைபேயில் அண்மையில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் இரண்டு தனிநபர் தங்கம் உள்பட ஒன்பது பதக்கங்களை வென்றுள்ளார்.
சாதனைகள் குறித்து அவரிடம் பேசியபோது:
'கேரளம் காஞ்சிரப்பள்ளிக்கு அருகே திடநாடு தான் எனது சொந்த ஊர். என் வீட்டின் ஓடிய ஆற்றில்தான் நீச்சலை நான் கற்றேன். ஓய்வு பெறும் வரை நீச்சல் ஒரு தொழிலாகவும், பொழுதுபோக்காகவும், உடல் பயிற்சியாகவும் ஏற்க வேண்டும் என்று சிந்திக்கவேயில்லை. அது எவ்வளவு தவறு என்று தற்போது உணர்கிறேன்.
கடந்த பல மாதங்களாக நீச்சல் பழக்கத்தைப் புதுப்பித்துகொண்டிருக்கிறேன். குளங்கள், ஆறுகள், திறந்த கடலில் 3 கி.மீ. தூரம் நீச்சலைத் தொடர்ந்து பயிற்சி செய்தேன், இதனால் கடுமையான நீரோட்டங்களை எதிர்கொள்ளும் அனுபவம், தைரியம், உடல் வலிமை கிடைக்கின்றன. இந்த அனுபவம்தான் உலக மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டியில் கை கொடுத்தது. அந்தப் போட்டியில், 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 3 கி.மீ, நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்றேன். 100 மீ., 400 மீ. ஃப்ரீஸ்டைல், 200 மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக், ஆண்களுக்கான தொடர் நீச்சல், கலப்பு தொடர் நீச்சல் போட்டியிலும் பதக்கம் கிடைத்தது.
கொச்சியில் 2017-இல் குடியேறினேன். அதற்கு முன்பு பல ஆண்டுகள் வெளிநாட்டில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் பணியாற்றியுள்ளேன். 2019-இல் எனது நண்பர்கள் வட்டத்தில் இருந்த முதியவர்கள் நீச்சல் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வருவதைக் கேள்விப்பட்டு நானும் நீச்சல் பழக்கத்தைப் புதுப்பிக்கத் தீர்மானித்தேன்.
நான் முதன்முதலில் ஒரு தொழில்முறை நீச்சல் போட்டியில் பங்கேற்றபோது எனக்கு அறுபத்து ஒன்பது வயது. அங்கு பெற்ற வெற்றிகள் என்னை தேசிய அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்றன. அங்கு எனக்குப் பின்னடைவு ஏற்பட்டது. எனது நீச்சல் அனுபவம் போதுமான அளவுக்கு இல்லை என்று உணர வைத்தது. அங்கு நான் அடைந்த தோல்விகள் என்னை முடுக்கிவிட்டு சாதனைகள் நிகழ்த்த உந்து சக்தியாக அமைந்தது.
உரிய பயிற்சியாளரைக் கண்டுபிடிக்கத் தேடினேன். கிடைக்கவில்லை. எனது நீச்சல் திறனை மேம்படுத்த நான் ஒவ்வொரு நாளும் யூடியூப்பில் தொழில்முறை நீந்தல் பயிற்சி வீடியோக்களைப் பார்த்தேன். அதன் நுட்பங்களை அடையாளம் கண்டு, நீச்சல் குளத்தில் பயிற்சி செய்தேன். இந்தப் பயிற்சிதான் இதுவரை 107 பதக்கங்களை வெல்லும் சாதனை படைக்க உதவியது .
எனது அடுத்த இலக்கு ஜப்பானில் நடக்கவிருக்கும் 2027 உலக மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டி. எனது பயிற்சிக்கு ஊக்கம் தருபவர்கள் மனைவியும், குடும்பத்தினர்.
நான் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நீச்சல்'' என்கிறார் குரியன் ஜேக்கப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.