சென்னையைச் சேர்ந்த விமல் தியாகராஜன், 'கார்ப்பரேட் உலகத்தை வெல்ல 12 விதிகள்' என்ற ஆங்கில நூலை அண்மையில் வெளியிட்டிருக்கிறார்.
பொறியாளரான இவர், வணிக நிர்வாகத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். கார்ப்பரேட், தனியார், அரசுத் துறைகளில் உள்ள நிபுணர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் பயனுள்ள ஆவணமாக இந்த நூல் அமைந்துள்ளதோடு, உயர்கல்வி பயிலும் மாணவர்கள், வேலை தேடுவோருக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளது. இந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் அவரிடம் பேசியபோது:
'பன்னாட்டு நிறுவனங்களில் 16 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, , தொழில்முனைவோராக 9 ஆண்டுகளை இருந்துவருகிறேன். வணிக நிர்வாகத்தில் பட்டயக் கணக்கு படிக்கும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தரும் சொற்பொழிவுகள், இணையப் பயிற்சி வகுப்புகள், பயிற்சிகளை 7 ஆண்டுகளாக அளித்து வருகிறேன். இந்த அனுபவமே இந்த நூலை எழுதச் செய்தது.
வாழ்க்கையில் நான் சந்தித்த சவால்கள், அவற்றை சமாளித்து கண்ட வெற்றிகள், முயற்சியில் செய்த தவறுகள், அடைந்த தோல்விகள்... என அனைத்தையும் நூலில் பதிவு செய்துள்ளேன். வாழ்க்கையில் 'செய்ய வேண்டியவை', 'செய்யக்கூடாதவை' என்று தலா 6 என மொத்தம் 12 யோசனைகளை விளக்கங்கள், எடுத்துக்காட்டுகளுடன் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
மதிப்பைக் கூட்டுங்கள், பாதுகாப்பு வளையத்தை உடையுங்கள், ஒரு பிராண்ட் அம்பாசிடரை போல பேசுங்கள், சிறிய லட்சியங்களைத் தவிர்த்து பெரியதற்கு குறி வையுங்கள், உங்களை, பிறரை உற்சாகப்படுத்துங்கள், உங்களைக் கண்டுபிடியுங்கள் ஆகியவை செய்ய வேண்டியவையாகும்.
முக்கிய விஷயங்களைத் தவிர்க்காதீர்கள், மிகவும் பிசியாக இருக்காதீர்கள், உங்களுக்குள் அரக்கனை வளர்க்காதீர்கள், உங்கள் நற்பெயரை சேதப்படுத்தாதீர்கள், சராசரி மனப்பான்மையை ஏற்றுகொள்ளாதீர்கள், வாழவும், பெயரை விட்டுச் செல்லவும் மறக்காதீர்கள் ஆகியவை செய்யக்கூடாதவைகளாகும்.
எளிமையாக, புரியும் வகையில், மனதில் பதியும் விதத்தில் எழுதப்பட்ட இந்த நூல் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும், பணியில் முன்னேற்றம் அடைய நினைப்பவர்களுக்கு நடைமுறை வழிகாட்டியாகவும் இருக்கும். தனிப்பட்ட நிகழ்வுகள், சாதனையாளர்களின் ஊக்கமளிக்கும் கதைகள், எடுத்துக்காட்டுகளால் விளக்கப்பட்டிருக்கின்றன. இளநிலை, நடுத்தர மேலாண்மைப் பதவிகளில் உள்ள நபர்களுக்கு இந்த நூல் மிகவும் நன்மை பயக்கும்.
மன நலமும், மன வளமும் பண்பட்டால் சுய முன்னேற்றம் ஏற்படும். கவலையையும், சோம்பலையும் விலக்கி வைத்தால் அனைவராலும் வாழ்க்கையில் சாதனை புரிய முடியும். அந்தக் காலத்தில் குற்றம் செய்தவர்களை கால், கைகளை கட்டி போட்டு தலைக்கு ஐந்தடிக்கு மேலாக நீரை சொட்டு சொட்டாக விழும்படி செய்வார்கள்.
தொடக்கத்தில் 'இதெல்லாம் பெரிய சித்திரவதை?' என்று தோன்றும். போகப் போக ஒவ்வொரு சொட்டு தலையில் விழும்போதும் பெரிய சுத்தியலால் தலையில் அடிப்பதாக அலறுவார்கள். அப்படித்தான் நாம் நினைத்தது நடக்காவிட்டால், முயற்சியில் தோல்வி அடைந்தால் கவலை நம்மை சிறிது சிறிதாகப் மனதளவில், உடல்ரீதியாகவும் பாதிக்கும்.
தோல்வியை நினைத்து முடங்கிப் போகாமல் அடுத்த முயற்சியைக் கையில் எடுக்க வேண்டும். கவலைகளைச் சேமிக்க வேண்டாம். ஒவ்வொரு இரவும் தூங்கப் போகும்போது, முந்தைய நாள் விஷயங்களையும், மறுநாளைய விஷயங்களையும் அப்புறப்படுத்துங்கள். அன்று சரிவர வாழ்ந்தோமா? என்று சிந்தியுங்கள்.
பல நாடுகளை வெற்றி கண்ட மாவீரன் நெப்போலியன், 'ஆண்டில் நான்கு நாள் கூட சந்தோஷமாக இருந்ததில்லை' என்று வருத்தப்படுவாராம். ஆனால் பார்வையிழந்த காதுகள் கேட்காத ஹெலன் கெல்லரோ, 'வாழ்க்கை மிகவும் ரம்மியமானது' என்று அனுபவித்துப் பதிவு செய்துள்ளார்.
உலக வாழ்க்கையைப் பற்றிய முறையான மதிப்பீடுகள் நமக்குள் ஏற்பட வேண்டும். அந்த மதிப்பீடுகளின் எல்லையும் உண்மைத் தன்மையையும் அறிய வேண்டும். வாழ்க்கையின் சிக்கல்களுக்கு தீர்வு கண்டுவிட்டால், தொழில், நிறுவனச் சிக்கல்களுக்கும் நம்மால் தீர்வு காண முடியும்'' என்கிறார் விமல் தியாகராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.