இலக்கியக் குவியலுக்கு இடையில் யாழின் நாணைச் சரியாக மீட்டு, 2,500 ஆண்டுகளுக்கு பிறகு யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த இருபத்து எட்டு வயதான இளைஞர் தருண்சேகர்.
இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது 'உரு இன்ஸ்ட்ருமென்ட்ஸ்' என்ற நிறுவனம் வாயிலாக, அந்தக் கருவியை தயாரித்து வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'எனது சொந்த ஊரான மதுரையில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, 'ஹவாய் கிடார்' இசைக்கருவியின் மீது ஈர்ப்பு வந்தது. அந்தக் கருவி இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை. 'யூ டியூப்' வாயிலாகச் சொந்தமாக வடிவமைத்தேன். சொந்தமான இசைக்கருவியை வடிவமைத்து, அதில் இருந்து புறப்படும் ஒலியைக் கேட்டபோது உற்சாகம் துள்ளியது.
வடிவமைப்பை பயில, ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் கட்டடக் கலையை கற்றேன். கோடை விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம், பஞ்சோ, உக்குலேலே போன்ற நாண்கருவிகளைச் சொந்தமாக உருவாக்கினேன்.
மாணவர் பயிற்சி முகாமுக்காக, புதுச்சேரி ஆரோவில் சென்றபோது, கிடார் போன்ற கம்பி இசைக்கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 'எரிஸா நியோகி' என்பவரை சந்தித்தேன்.
நான் வடிவமைத்த இசைக்கருவிகளை அவரிடம் காண்பித்தபோது, அதைப் பாராட்டிய நியோகி ஆறு மாதங்கள் இசைக்கருவி வடிவமைப்பு தொடர்பாக பயிற்சியை எனக்கு அளித்தார். இது எனக்குள் புத்துணர்வை ஏற்படுத்தியது.
படிப்பை முடித்தவுடன் இசைக்கருவிகளை உருவாக்குவதற்காகவே வாழ்நாளை ஒப்படைக்க முடிவு செய்தேன். இந்திய இசைக் கருவிகளை உலகத் தரத்தில் உருவாக்க முடிவு செய்து, 2019-இல் 'உரு இன்ஸ்ருமென்ட்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீணையை மறு உருவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்தேன். கீழடி ஆய்வில் ஈடுபட்டு, அதன் கட்டடக்கலையை ஆவணப்படுத்தி வந்த எனது நண்பர் சிவா, பழந்தமிழர் இசைக்கருவியான 'யாழ்' பற்றி தெரிவித்தபோது, அதை ஆராய தொடங்கினேன். அன்றைய சந்தையில் இசைக்கக் கூடிய 'யாழ்' கருவி இல்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தேன்.
எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் சிலவற்றில் 'யாழ்' கருவியை பார்த்திருக்கிறேன். ஆனால், நடைமுறையில் 'யாழ்' இல்லை என்பதை உணர்ந்தேன். நீண்டநெடுங்காலமாக 'யாழ்' இசைக்கப்படவில்லை. அருங்காட்சியகங்களில் உள்ள சில மாதிரிகளில் அவை உண்மையான யாழ் மாதிரிகள் அல்ல என்பதும் தெரிந்தது. அதனால் யாழ் இசைக்கருவியின் அசல் ஒலி என்ன என்பதும் தெரியவில்லை. இதனால் யாழ் இசைக்கருவியை மீட்டுருவாக்கம் செய்ய முடிவு செய்தேன்.
இணையத்தில் தேடியபோது இரண்டு படங்கள் மட்டுமே கிடைத்தன. நண்பர் பி.ஜி.சீனிவாஸ் வாயிலாக இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளதை அறிந்தேன். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, தொல்காப்பியம், குறுந்தொகை, திருக்குறள், நற்றிணை உள்ளிட்ட இலக்கியங்களில், 'யாழின் ஒலி தேன் போல இனிக்கும்; அதன் வயிற்றுப்பகுதி கர்ப்பிணியின் வயிறை போல இருக்கும்' போன்ற உவமைகள்தான் இருந்தன. தோற்றம் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இல்லை. இந்த உவமைகளின் துணையுடன் 'யாழ்' கருவியை வடிவமைக்கத் தொடங்கி, ஓராண்டுக்குப் பின்னர் உருவாக்கினேன். மரவேலைகளை நானே செய்தேன்.
மதுரையைச் சேர்ந்த 30 கைவினைக் கலைஞர்கள் உதவியுடன் இயந்திர உதவி இல்லாமல், கைவேலைப்பாடுகளால் யாழ் கருவியை உருவாக்கினோம். யாழின் ஒலி எப்படி இருக்கும் என்பதை 1947-இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விபுலாநந்தர் அடிகள் எழுதியிருந்த 'யாழ் நூல்' மூலம் அறிய முடிந்தது. அந்த நூலில் 'அதிர்', 'தண்டு', 'ஆணி' போன்ற கருவியின் பாகங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததையடுத்து, யாழின் ஒலி எப்படி இருக்கும் என்பதை அறிந்தோம்.
கிரேக்க நாட்டின் லையர், பர்மிய ஹார்ப், ஆப்பிரிக்க ஹார்ப் போன்ற கருவிகள் யாழை போல இருந்துள்ளன.
செங்கோட்டி யாழ், சகோட யாழ், கைவிழி யாழ், சீறி யாழ், பேரியாழ் உள்ளிட்ட 7 வகையான யாழ்களை மீண்டும் உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு யாழ்களுக்கும் இடையே நாண்களின் எண்ணிக்கை, எடை, வடிவம், ஒலி ஆகியவற்றில் வேற்றுமைகள் உள்ளன. அப்படி 14, 19, 21 நாண்கள் கொண்ட யாழ்களை உருவாக்கியிருக்கிறேன்.
500 ஆண்டுகால பழமைவாய்ந்த கிடார் கருவியின் அடிப்படையை மாற்றாமல், காலத்துக்கேற்ப கிடாரில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதைபோல், இளைஞர்களை கவரும் கருவியாக யாழை மாற்ற முற்பட்டோம். முன்பெல்லாம் பலாமரத்தில் தான் யாழ் செய்யப்பட்டுள்ளது. கருவியின் எடையை குறைக்கும் நோக்கில் தற்போது செவ்வகில் மரத்தில் யாழ் செய்கிறோம். நான் தயாரித்திருந்த யாழை இசைஞானி இளையராஜா, நடிகர்கள் கமலஹாசன். சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் பாராட்டினார்.
இளைஞர்களின் கற்பனையை ஈர்க்க, காலத்துக்கேற்ப யாழ் இசைக்கருவியை நவீனமாக்கியுள்ளதால், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், துபை போன்ற நாடுகளில் யாழ் இசைக்கருவிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 80 யாழ்
களைத் தயாரித்து, விற்பனை செய்துள்ளேன். 95% யாழ் வெளிநாடுகளில்தான் விற்கப்பட்டுள்ளன.
ஒரு யாழை தயாரிக்க 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் பிடிக்கும். பெரிய அளவிலான யாழை வடிவமைக்க 2 ஆண்டுகள் ஆகின்றன. ரூ.36,000 முதல் ரூ.4.5 லட்சம் வரையில் யாழ்கள் உள்ளன. வெவ்வேறு ஊர்களில் யாழ் கண்காட்சியை நடத்தி, இளைஞர்களிடையே கொண்டு செல்ல முயற்சித்து வருகிறோம்.
பெங்களூரில் இந்திய இசைக்கருவிகளின் அருங்காட்சியகத்தில் நான் தயாரித்த யாழ் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், அனிருத் உள்ளிட்டோர் தங்களது இசையில் யாழை பயன் படுத்தியுள்ளனர்.
குடமுழவம் கருவி உருவாக்கம்:
பழந்தமிழர் வாழ்வியலில் யாழோடு குடமுழவம் மங்கலக்கருவியாக இசைக்கப்பட்டுள்ளது. சோழர் ஆட்சிக்காலத்தில் 9 முதல் 13ஆம் நூற்றாண்டுவரை குடமுழவம் புகழ்பெற்றிருந்துள்ளது. திருவாரூர் கோயிலில் உள்ள ஐம்முக குடமுழவம் கருவியை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறோம்.
இது 4 அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்டதாகும். எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வதற்கு வசதியாக 5 கிலோ எடையில் குடமுழவம் கருவியை உருவாக்கியிருக்கிறோம். ஐந்து முகங்கள் கொண்ட இந்தக் கருவி தோலால் செய்யப்பட்டது. அந்த காலத்தில் தாளக்கருவியாக விளங்கியுள்ளது.
தமிழிசைக் கருவிகளை மீட்டுருவாக்குவோம்:
பண்டைய தமிழ் இசைக்கருவிகளை உருவாக்குவதைவிட, அவற்றை இசைக்க வைப்பது தான் பெரும் சவாலாக இருந்தது.
தமிழிசைக்கருவிகளின் ஒலிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் 'உரு பாணர்' என்ற பெயரில் 8 பேர் கொண்ட இசைக்குழுவை உருவாக்கியிருக்கிறேன். தமிழிசைக் கருவிகளை மட்டும் பயன்படுத்தி, இசைக் கச்சேரியை நடத்த வேண்டும் என்பது என் விருப்பம். 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கண நூலாக போற்றப்படும் தொல்காப்பியத்தில் இருந்து 7 பாடல்களை உருவாக்கி இருக்கிறோம். பிறப்பு முதல் இறப்பு வரையிலான மனித வாழ்க்கையை விளக்கும் இந்தப் பாடல்களின் தொகுப்பை பதிவு செய்திருக்கிறோம். இந்த இசைத்தொகுப்பு மே மாதம் வெளியிடப்படும்.
வீணை போன்ற நாண் சார்ந்த இசைக் கருவிகளை வழக்கொழியாமல் பாதுகாக்க, 'யுனெஸ்கோ' அமைத்துள்ள சர்வதேச பாதுகாப்புக்குழுவில் என்னை ஐந்தில் ஒரு துணைத் தலைவராக நியமித்திருக்கின்றனர்.
இந்தியப் பாரம்பரிய இசைக்கருவிகளின் முக்கியத்துவத்தை உலகறிய செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம். அவற்றை மக்களிடையே புழக்கத்திற்கு கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார் தருண்சேகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.