'பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்...' என்று பழமையான திரைப்பாடல் உண்டு. வலசை காலத்தில் பல வெளிநாட்டுப் பறவைகள் இந்தியாவுக்கு வருகை தந்து, தங்குகின்றன. குளிர் காலம், வசந்த காலங்களில் இனிமையை அவை ரசித்துவிட்டு, கிளம்பி விடுகின்றன. அவற்றின் திரும்பு காலம் ஏற்கெனவே துவங்கத் தொடங்கிவிட்டது. அந்த வெளிநாட்டுப் பறவைகள் நாட்டில் எங்கெங்கு வந்து செல்கின்றன.
பரத்பூர் பறவைகள் சரணாலயம் (ராஜஸ்தான்)
'கியாலாடியோ தேசிய பூங்கா' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு 370 வகையான பறவைகளைக் காணலாம். வெளிநாட்டு சைபீரிய கொக்குகள், வர்ணம் பூசிய நாரைகள், பெலிகன்கள், வாத்துகள் ஆகியவற்றுக்குப் பிரபலம். குளிர்காலத்தில் வாத்துகள் வருகை மிக அதிகம். வனப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், ஈர நிலம் எனப் பல வகை உள்ளதால் பறவைகளுக்கு இங்கு கொண்டாடம்தான். அழிந்து வரும் இரு கழுகு இனங்களை இங்கு காணலாம். இனப் பெருக்கத்துக்கும் ஏராளமான பறவைகள் வருகின்றன.
சிலிகா ஏரி (ஒரிஸ்ஸா)
ஆசியாவின் மிகப் பெரிய 'கடற்கரை உப்பு குளம்' என இந்த ஏரியை கூறுவர். பல நாடுகளில் இருந்தும் மிக அதிக அளவிலான பறவைகள் குளிர் காலத்தில் வந்து செல்கின்றன. குறிப்பாக, புலம்பெயர்ந்து வரும் பல பறவைகளுக்கு குளிர்காலத் தங்குமிடம்.
சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம் (ஹரியானா)
தில்லிக்கு அருகே உள்ள இந்தச் சரணாலயத்தில் சைபீரியன் கிரேன், கிரேட்டர் பிளமிங்கோ, மிங்கோ, பிளாக் விங்க் ஸ்டில்ட்,யுரேசிய டீன், மஞ்சள், வெள்ளை வாக் டெயில் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான பறவைகள் இங்கு வந்து தங்கி, திரும்பிச் செல்கின்றன.
நல்சரோவர் பறவைகள் சரணாலயம் (குஜராத்)
அகமதாபாத்துக்கு அருகில் உள்ளது. ரோசிபெலிகன், பிளமிங்கோ, வெள்ளை நாரை, பிராம்ணி வாத்துகள், ஹெரான்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து தங்குகின்றன.
ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் (கர்நாடக)
காவிரி நதிக் கரையில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் வண்ண பூச்சு நாரை, பில் பெலிகன், கருப்புத் தலை ஐபிஸ் உள்பட 170-க்கும் அதிகமான பறவைகளைக் காணலாம். சைபீரியன், லத்தீன், அமெரிக்க நாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் குளிர்காலத்தில் 40 ஆயிரம் பறவைகள் இங்கு வருகின்றன.
வேடந்தாங்கல் பறவை சரணாலயம், (தமிழ்நாடு)
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட அச்சிறுபாக்கம் அருகேயுள்ள ஒரு கிராமம்தான் வேடந்தாங்கல். இங்கு சைபீரியா, வங்கதேசம், மியான்மர், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளிலிருந்து கிளுவை, ஊசி வால் வாத்து, நீலசிங்கி, தட்டைவாயல், பச்சைக்காலி, பவளக்காலி உள்பட பல பறவைகள் வருகின்றன.
தட்டே காடு பறவைகள் சரணாலயம், (கேரளம்)
கொத்தமங்கலத்துக்கு அருகில் உள்ள கேரளத்தின் முதல் பறவை சரணாலயம். பிரபல பறவை நிபுணர் சலிம் அலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு சீசனில் சிலோன் பிராக் மவுத், பிளாக் பீஸ்ஸா, ஓரியண்டல் ட்வார்ப் உள்பட 280-க்கும் அதிகமான உள்ளூர், வெளிநாட்டுப் றவைகளைக் காணலாம்.
போங் அணை சதுப்பு நிலம், (ஹிமாசலப் பிரதேசம்)
காங்க்ரா மாவட்டத்தில் இந்தச் சரணாலயத்தில் பட்டைத்தலை வாத்து,வடக்கு லேப்லிங், சிவப்பு ஷெல்டக்,வடக்கு ஃபைன் டெயில்ண பொதுவான டீல், யுரேஸ்ய கூப் என பல வெளிநாட்டுப் பறவைகளைக் காணலாம்.
கொல்லேரு பறவைகள் சரணாலயம், (ஆந்திரம்)
நன்னீர் வாழ்விடமான இங்கு வர்ணம் பூசப்பட்ட நாரைகள், பெலிகன், ஹெரான் உள்பட பல வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.