சிம்பொனி சாதனைக்காக இளையராஜாவை இந்திய பிரபலங்கள் பலரும் வாழ்த்துகிறார்கள். இளையராஜாவை நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இப்படி பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் இளையராஜா.
அதன் ஒரு பகுதியாக இன்று இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் மூத்த நடிகர் சிவகுமார். மேலும், இளையராஜாவுக்கு தங்கச் சங்கிலியையும் வழங்கியிருக்கிறார். நடிகர் சிவகுமாருடன் நடிகர் சூர்யா, பிருந்தா ஆகியோரும் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினர்.
"இட்லி கடை' படத்திற்குப் பிறகு தனுஷ் அஜித்தை கதாநாயகனாக வைத்து இயக்கப் போகிறார் தனுஷ். அப்படத்தையும் "இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிசு கிசுவாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இது குறித்தும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆகாஷ் பாஸ்கரன் பேசியிருக்கிறார். கிசு கிசுவாக பேசப்பட்ட இந்தத் தகவல் உண்மைதானாம். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவலை ஆகாஷ் பகிர்ந்திருக்கிறார். இதற்காக அஜித் - தனுஷ் சந்திப்பு விரைவில் நடக்கவுள்ளதாம்.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் "ஏஸ்' எனும் படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்க, ஏ. கே. முத்து கலை, இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.
ஜனரஞ்சகமான திரைக்கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் இடம்பெற்ற "உருகுது உருகுது..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான "ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், "படம் நன்றாக இருக்கிறது' என்று பேசுகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தத் தருணத்தில் இசை பணிக்காக வெளிநாட்டில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படக் குழுவினருக்கு வாட்ஸ்அப் விடியோ மூலம், "ஸ்வீட் ஹார்ட் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் "டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்', வரும் 2026 மார்ச் 19 -ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் உகாதி, குடி பட்வா, சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை வார இறுதி மூலம் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குப் பிறகு மார்ச் இஃப்தார் பண்டிகையும் வருவதால், ரசிகர்கள் கொண்டாட இது ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.