ஞாயிறு கொண்டாட்டம்

மக்களை நோக்கி ஒரு புன்னகை!

தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இப்போது புதுமுக இயக்குநர் விஜய் சுகுமார் முறை.

அசோக்

தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அடையாளங்கள் வாங்கித்தருவதில் இப்போது புதுமுக இயக்குநர் விஜய் சுகுமார் முறை. இவர் இயக்கியுள்ள 'மாண்புமிகு பறை' படம் உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்று சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு, இம்மாதம் நடைபெற்ற சிறந்த சமூக நீதிக்கான திரைப்படம் என்ற பிரிவில் தேர்வாகியுள்ளது. இத்தாலி பட விழாவில் உள்ளூர் கலாசார பிரிவில் விருதைப் பெற்றுள்ளது.

'இந்தப் படத்தை அடுத்து நம் தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டு வருகிறோம். இந்த விருதுகளுக்கெல்லாம் சரியானதா என்பதை தமிழ் ரசிகர்களுக்கு முன் வைத்துப் பார்க்கப் போகிறோம்.' நம்பிக்கைக் கரம் கொடுத்துப் பேசத் தொடங்குகிறார் விஜய் சுகுமார்.

'இது முழுக்க முழுக்க கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். நான் இந்த சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள். தயாரிப்பாளர்கள் சுபா, சுரேஷ்ராம் இருவரும்தான் இந்தக் கதைக்கான தாளகர்த்தா.

அவர்கள் கொண்டு வந்த கதையை அருமையாகக் கொண்டு வந்திருக்கிறோம். சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுத்திருக்கிறோம். கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான

ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரசியமானது சினிமா. சுவாரசியம் என்பது பாட்டு, சண்டை, குரூப் நடனத்தில் மட்டும் இல்லை. இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதெனச் சொல்ல வருகிற சினிமா. உங்களின் நல் ஆதரவு வேண்டும்.

ஆமாம்.... ஒரு நல்ல படம் பார்க்கிற அனுபவத்தோடு முடிந்து விடக்கூடாது. அது வெளியே வந்த பிறகு பார்த்தவர் மனதில் தொடர்ந்து வளர வேண்டும். யாருக்கான படமோ அந்த மக்களை நோக்கி ஒரு புன்னகை, புரிந்து கொள்ளல், ஒரு கைப்பற்றுதலாவது நம்மிடம் வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.

சினிமா வணிகம் சார்ந்ததுதான். ஆனாலும் எழுதி இயக்குகிறவர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. நடிகர்கள் எதையோ சொல்லிவிட்டுப் போக, அது எத்தனையோ பேரின் வழியை மறிக்கிறது. புகழுக்காக, பணத்துக்காக மக்களைத் தூண்டிவிடுவது இங்கே நடக்கிறது. அப்படி எதுவும் இல்லாத ஒரு சினிமா இது. என்னை தொந்தரவு செய்கிற விஷயங்களைத் தவிர வேறு எதையும் எடுத்துவிடக் கூடாது என உறுதியாக இருக்கிறேன். என் படம் மக்களுக்குப் பயன்பட வேண்டும்.

வாழ்க்கை மிகவும் சிறியது. அதற்குள் நான் கற்ற கலையை இந்தச் சமூகத்துக்குப் பயனுடையதாக்க விரும்புகிறேன். அதற்கு என் வழி சினிமா. இதில் கேளிக்கைகளுக்கும், வேடிக்கைகளுக்கும் இடமில்லை. என் வேலை வெளிப்படையாக நீதிபோதனை செய்வதல்ல. நான் சந்திக்கிற மனிதர்கள், சூழல்கள், அனுபவங்கள்... அது உருவாக்கிய நியாயங்களை மட்டுமே என் படத்தில் முன் வைக்கிறேன்.

ஒரு படம் அந்த மொழி சார்ந்தவர்களைக் கவர வேண்டும். அப்படித்தான் இது. 'பறை' என்ற நம் தொன்மை வாய்ந்த இசைக்கருவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம் இது.

இது பறைக்கு இன்னொரு பிறப்பு. முடிவல்ல, ஆரம்பம். பறை நம் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களிலும், கலாசாரங்களிலும் ஒலித்துவருகிறது. ஆனால், இந்த முறை கதை ஐரோப்பாவிலிருந்து, குறிப்பாக பிரான்ஸிலிருந்து தொடங்குகிறது. பறை எப்படி நம் நாட்டின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு வலிமையான குரலாகப் பரவியது என்பதை படம் வலியுறுத்துகிறது.

பறை என்பது இசை மட்டுமல்ல அது ஓர் அடையாளம், ஓர் அதிர்வு, ஒரு சமூக உணர்வு. அந்த அதிர்வில் நம்மையும் இணைத்துக் கொள்ளும் முயற்சிதான் இது.

வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. ஆனால், பயங்கரமானதாகவும் இருக்கிறது. விஞ்ஞானம், அது தரும் உல்லாசங்கள் என எதுவும் இல்லாத வாழ்க்கை எப்படி இருந்தது. வேலை முடிந்ததும் எல்லோருக்கும் 'டைம் பாஸ்' என்று ஒன்று இருக்கும். அது இப்போது இல்லை. ஓடிக் கொண்டே இருக்கிறோம். அனுதினங்களை யார் தீர்மானிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

இவற்றுக்கு நடுவே எல்லோரும் சராசரி மனிதர்கள். எல்லாவற்றுக்கும் இடையே ஒருவன் சராசரி வாழ்க்கையை வாழ முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. கனவு ஒரு சொல் விளையாட்டோ வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல... அது தன்னுள் கொண்டிருக்கும் லட்சியம் அபரிமிதமானது. கனவில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டால், நாம் நமது ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ளத் தொடங்கிவிடுவோம். இதுதான் கதை.

இசையமைப்பாளர் தேவா சாருக்கு நன்றி. அவர் படத்துக்குக் கொடுத்திருக்கிற இசை இன்னொரு கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோ. தொழில்நுட்பக் கலைஞர்களும் அத்தனை வல்லவர்கள்.

சினேகனின் பாடல் வரிகள் அத்தனை பலம். பறை இசைக் கலைஞர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக ஓர் அருமையான பாடல் உருவாகியிருக்கிறது. 'ஆதிசிவன் அடித்த பறையடா....' எனத் தொடங்கும் அந்தப் பாடல் இனி தனித்து ஒலிக்கும். அருமையான டீம் அமைந்ததில் மகிழ்ச்சி. எங்களின் முதல் படைப்பை நம்பிக்கையாகக் கொண்டு வருகிறோம். ஆதரவு கொடுங்கள்!' எனப் பேசி முடிக்கிறார் விஜய் சுகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரநாராயணசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும்! - அமைச்சா் பி. மூா்த்தி

எஸ்ஐஆா் படிவத்தை வாக்காளா்கள் முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்: ஆட்சியா் கா. பொற்கொடி

கீழ்பவானி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT