'மூல எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளில் விதைக்கும் உணர்வுகளை அப்படியே வேற்றுமொழிக்குக் கொண்டு செல்ல வேண்டும். அந்த உணர்வுகளை, எழுத்தாளரின் தொனியைக் கூட்டவோ, குறைக்கவோ கூடாது. அதுதான் மொழிபெயர்ப்பாளரின் அறம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வட்டார வழக்குகள் வெவ்வேறானவை. அதனால் தமிழ்ப் படைப்பில் என்னென்ன வட்டார சொற்கள் எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே அர்த்தத்தில் வரும் தெலுங்குச் சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டும்'' என்கிறார் கெளரி கிருபானந்தன்.
தெலுங்கிலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து தெலுங்கிற்கும் சிறுகதைகள், நாவல்களை முப்பது ஆண்டுகளாக மொழிபெயர்த்து வருகிறார் அறுபத்து ஒன்பது வயதாகும் வணிகவியல் பட்டதாரியான கெளரி கிருபானந்தன். இவர் சாகித்திய அகாதமி விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் விருது, திராவிட பாஷா மொழிபெயர்ப்பு விருது, ஸ்பாரோ இலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னை நாரத கான சபா அரங்கில் நவம்பர்
9இல் நடைபெற்ற விழாவில், கெளரிக்கு 'நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது 2025'' எனும் விருதும் வழங்கப்பட்டது.
அவரிடம் பேசியபோது:
'திண்டுக்கல் எனக்கு பூர்விகம். எனது தந்தை அன்றைய சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்த ஆந்திரத்தில் பணிபுரிந்ததால், குடும்பத்தோடு அங்குச் சென்றோம். கல்விக் கற்றல் தெலுங்கில் அமைந்தது.
1976இல் திருமணம் முடிந்ததும் தமிழ்நாட்டுக்கு வந்தேன். தஞ்சாவூர் அருகில் மெலட்டூரில் கணவர் கிருபானந்தனுக்கு வங்கியில் வேலை. தமிழ் பேசத் தெரிந்திருந்ததால், புகுந்த வீட்டில் மொழிப் பிரச்னை இல்லை. தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களை ஆர்வத்துடன் வாசிப்பேன். நூல் நிலையத்திலிருந்து தமிழ் நாவல்களை வாங்கி வந்தும் வாசித்தேன். சில ஆண்டுகளில் பெண்கள் இதழ்களில் பயனுள்ள குறிப்புகளை எழுதி அனுப்ப, அவை பிரசுரமாயின.
1990களில் தமிழ் வார இதழ்களில் அவ்வப்போது தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகின. 'தெலுங்கிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பை வாசிக்க, வாசிக்க மூல சிறுகதையுடன் ஒப்பிடும்போது, இன்னும் நல்ல முறையில் மொழிபெயர்ப்பு செய்திருக்கலாமோ?' என்று எனக்குத் தோன்றியது.
பிரபல எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் அனுமதியின்பேரில், 'இ பெட்' என்ற தெலுங்குச் சிறு
கதையை 'பந்தயம்' என்ற பெயரில் மொழிபெயர்த்தேன். அது 'குங்குமச் சிமிழ்' இதழில் பிரசுரமானது. அந்த உற்சாகத்துடன் தெலுங்குச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, 'கணையாழி' இதழுக்கு அனுப்ப, அவையும் பிரசுரமாயின.
பின்னர், எண்டமூரியின் அனுமதியுடன் அவர் எழுதிய 'அத்தா முகம்' நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தேன். இதை 'அல்லயன்ஸ்' பதிப்பகம் வெளியிட்டது. தொடர்ந்து எனது ஐம்பது மொழிபெயர்ப்பு நாவல்களை 'அல்லயன்ஸ்' வெளியிட்டது.
ஆந்திர கம்யூனிஸ்ட் போராளி கொண்டப்பள்ளி கோடஸ்வரம்மாவின் சுய சரிதையான 'நிர்ஜன வரதி'யை 'ஆளற்ற பாலம்' என்ற தலைப்பில் மொழி
பெயர்த்தேன். அதே நேரத்தில், தமிழ் புதினங்களை தெலுங்கில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். ராமோஜிராவ் நடத்திக் கொண்டிருந்த 'விபுலா' மாத இதழுக்கு அனுராதா ரமணன் எழுதிய சிறுகதை ஒன்றை தெலுங்கில் மொழிபெயர்த்து அனுப்பினேன். அது 2000ஆம் ஆண்டில் பிரசுரமானது.
அடுத்து ஜெயகாந்தனின் 'புதுச் செருப்பு கடிக்கும்', 'சீசர்' சிறுகதைகள் போன்றவற்றை மொழிபெயர்க்க, அவையும் அச்சில் வெளியாயின. கி.ரா., அசோகமித்ரன், தோப்பில் முகமது மீரான், நாஞ்சில் நாடன், சிவசங்கரி, அனுராதா ரமணன், உஷா சுப்ரமணியன், பெருமாள் முருகன் உள்ளிட்டோரின் படைப்புகளைத் தெலுங்குக்கு அறிமுகம் செய்தேன். சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை' கதையை தெலுங்கு மொழிக்குக் கொண்டு போய்ச் சேர்த்தேன்.
சாகித்திய அகாதெமிக்காக கு. அழகிரிசாமியின் 'அன்பளிப்பு', பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்' நாவல் போன்றவற்றையும் தெலுங்கில் மொழிபெயர்த்தேன்.
வைரமுத்துவின் 'கள்ளிக் காட்டு இதிகாசம்' படைப்பை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து முடித்துவிட்டேன். அதை விரைவில் சாகித்திய அகாதெமி வெளியிடும்.
'அம்புலிமாமா' கதைகளின் தொகுப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுள்ளேன்.
கி.ராவின் 'கோமதி', 'காய்ச்ச மரம்', பெருமாள் முருகனின் 'பூனாச்சி' உள்ளிட்ட நாவல்களை மொழிபெயர்க்க மிகவும் சிரமப்பட்டேன். பலமுறை வாசித்து வாசித்து உணர்ந்து படைப்பாளி என்ன சொல்ல நினைத்தாரோ அதை அப்படியே மொழிபெயர்ப்பில் கொண்டு வந்துள்ளேன். இன்றளவும் பலரும் பாராட்டுகின்றனர். இதுதான் உண்மையான மொழிபெயர்ப்புக்குக் கிடைத்த வெற்றி.
கல்வியாளர்களாகவோ, வேறு வேலை பார்த்துக் கொண்டோ மொழிபெயர்ப்பு வேலையைச் செய்வார்கள். நான் இல்லத்தரசியாக இருந்தவாறு மொழிபெயர்ப்பு செய்து வருவது சக மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆச்சரியமாக அமைந்திருக்கிறது'' என்கிறார் கௌரி கிருபானந்தன்.
பிஸ்மி பரிணாமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.