ஞாயிறு கொண்டாட்டம்

இதிகாசங்களால் ஈர்க்கப்பட்ட சிறுமி

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை தொலைக்காட்சியில் பார்த்ததால் வில்வித்தை மீது சிறுமி வெனிஷா ஸ்ரீக்கு ஆர்வம் ஏற்பட்டு வில்வித்தை வீராங்கனையாக மாறியுள்ளார்.

ப. சுஜித்குமார்

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை தொலைக்காட்சியில் பார்த்ததால் வில்வித்தை மீது சிறுமி வெனிஷா ஸ்ரீக்கு ஆர்வம் ஏற்பட்டு வில்வித்தை வீராங்கனையாக மாறியுள்ளார்.

சர்வதேச விளையாட்டுகளில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் பிரபலமாக உள்ளன. எனினும், தனி நபர்கள் பங்கேற்கும் போட்டிகளுக்கும் பொதுமக்களிடம் பெரிய ஈர்ப்பு காணப்படுகிறது. தடகளம், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், செஸ், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

பழங்காலத்திலேயே காடுகளில் விலங்குகளை வில் அம்பு கொண்டு வேட்டையாடினர். அதேபோல் போர்களிலும் வில் அம்பு பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

போர்களில் நவீன ஆயுதங்கள் முக்கியத்துவம் பெற்ற நிலையில், வில்வித்தை மங்கிவிட்டது. இந்நிலையில் 18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வில்வித்தைக்கு மீண்டும் புத்துயிர் தரப்பட்டது. சர் ஆஷ்டன் லீவர் என்ற ஆட்சியர் வில்வித்தையை மீண்டும் தொடங்கினார்.

நவீன காலகட்டத்தில் வில்வித்தை ஒலிம்பிக், ஆசியப் போட்டிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. 1972-இல் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை அறிமுகம் ஆனது.

வில்வித்தையில் கொரியா, சீனா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்டவை சிறந்து விளங்குகின்றன. இந்திய அளவில் தீபிகா குமாரி, லிம்பா ராம், போம்பிலா தேவி, அதானு தாஸ், தருண்தீப் ராய் உள்ளிட்டோர் நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். வட இந்திய மாநிலங்களில் வில்வித்தைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

வில்வித்தைக்குத் தேவையான உபகரணங்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் தென் மாநிலங்களில் அதன் மீது பெரியளவில் ஈர்ப்பு ஏற்படவில்லை. அந்நிலை தற்போது சிறிது சிறிதாக மாறி வருகிறது. தமிழக அரசும் வில்வித்தைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.

இதிகாசங்களால் ஈர்க்கப்பட்ட சிறுமி:

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி வெனிஷா ஸ்ரீ 6 வயதிலேயே வில்வித்தை பயிற்சி பெற்று தற்போது சிறந்த வளரும் வீராங்கனையாக மாறி சாதனை படைத்து வருகிறார்.

முதன்முதலில் 2021-இல் யு-9 மாநில சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து பல்வேறு மாநில, தேசிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். 2023-இல் குஜராத்தில் நடைபெற்ற தேசிய சீனியர் போட்டியில் பங்கேற்க தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ பள்ளிகள் இடையிலான தென்மண்டலப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

2024 ஆண்டு வெனிஷாவுக்கு சாதனை ஆண்டாக அமைந்தது. யு 14 சாம்பியன், யு 18 சாம்பியன், சீனியர் ஸ்டேட் சாம்பியன், சிபிஎஸ்இ தேசிய சாம்பியன், தேசிய பள்ளிகள் விளையாட்டில் 2 தங்கம், 1 வெண்கலம் வென்றார்.

2025-இல் கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தேர்வுப் போட்டியில் உலக சாம்பியன் அதிதி சுவாமியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. டேராடூனில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தில் இடம் பெற்ற இளம் வீராங்கனை என்ற பெருமையும் வெனிஷாவுக்கு உண்டு.

தனது வில்வித்தை பயணம் குறித்து வெனிஷா ஸ்ரீ கூறுகையில்:

'சிறு வயதிலேயே எனக்கு வில்வித்தை மீது ஆர்வம் ஏற்பட்டது. ராமாயணம், மகாபாரதத்தை பார்த்து எனது பெற்றோரிடம் வில்வித்தை பயிற்சி பெற வேண்டும் என விரும்பினேன். அதிக செலவு ஏற்பட்டாலும் பெற்றோர் என்னை ஊக்குவித்தனர்.

பல்வேறு ஊர்களில் நடைபெற்ற போட்டிகளுக்குச் சென்று வருகிறேன். எனது பயிற்சியாளர் இசக்கியேல் உற்சாகத்துடன் பயிற்சியளித்து வருகிறார். அண்மையில் எனது சாதனையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி ரூ.4 லட்சம் வழங்கினார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாழ்த்தினார்.

உலகக் கோப்பை, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவேண்டும் என்பதே எனது எதிர்கால இலக்கு என்றார்'' வெனிஷா ஸ்ரீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

SCROLL FOR NEXT