தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாடக உலகின் தந்தையென்று போற்றப்படுகின்ற சங்கரதாஸ், திரைப்படத்துக்கு முதலில் பாடல் எழுதிய மதுர பாஸ்கரதாஸ், பி.யு.சின்னப்பா நடித்த ஆரிய மாலா, ஜெகதலப்பிரதாபன் போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியவரும், எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்' படத்தில் "உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா' என்ற பாடலை எழுதியவருமான கவி லட்சுமணதாஸ் என்று பலர் இருந்திருக்கிறார்கள். "கடலுக்குள் அரண்கட்டி கன்னி நீ வாழ்ந்தாலும் உடலுக்குள்ளே மாரன் உதயமாவது திண்ணம்' என்று அந்தக் கால பூலோக ரம்பை படத்தில் பாடல் எழுதிய புதுக்கம்பன் பூமிபாலதாஸ்.
1951-இல் வெளிவந்த சிங்காரி என்ற படத்தில் "ஒருசாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா?' என்று பாடல் எழுதிய தஞ்சை ராமையா தாஸ், உலகத்தில் எவரும் எழுதாத அளவில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவரும், ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதியவரும், தான் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழிமாற்றுப் படங்களில் 55 படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் என்னையே எழுத வைத்தவருமான வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஆகியோரும் இருந்தார்கள்.
பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ், பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ், தொழில் அதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ், அரசியல் தலைவர்களில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோரும் பிரபலமானவர்கள்.
அதுபோல், தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் பாரதிதாசன், கண்ணதாசன், வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்ட சுரதா ஆகியோர் புகழ்பெற்றவர்கள். இதில் சுரதா உவமைக்கவிஞர் என்று புகழ் பெற்றவர்.
அப்படிப்பட்டவரே புதிய உவமைகளில், புதிய சிந்தனைகளில், புதிய கற்பனைகளில் கம்பதாசன் முதலிடத்தில் இருக்கும் சிறப்புக்குரியவர் என்று பாராட்டியிருக்கிறார். அன்றைய காலத்தில் இந்தியா முழுதும் அறிந்த ஒரே தமிழ்க் கவிஞர் கம்பதாசன்தான் என்றும் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் கண்ணதாசன் சகாப்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலை.
கிளியின் சிவந்த மூக்கிற்கு பச்சை மிளகாய்ப் பழத்தை பாரதிதாசன் உவமை சொல்லியிருப்பார். "வெற்றிலை போடாமலே வாய்சிவந்த பச்சைப் பசுங்கிளிகள்' என்று பாகவதர் நடித்த அமரகவி படத்தில் எழுதியிருப்பார் சுரதா.
அதுபோல், கம்பதாசன் அந்திவானத்தைப் பற்றிச் சொல்லும் போது, "காக்கைச் சிறுகுஞ்சொன்று வாய் பிளந்தாற் போலே - கங்குலைப் பின் நிறுத்தி முன்நிற்கும் செக்கர்' என்பார். காக்கைக் குஞ்சின் இரு கடவாயும் ரத்தச் சிவப்பாக இருக்கும். உடல் முழுதும் கறுப்பாக இருக்கும். அதை வைத்துத்தான் "கங்குலைப் பின் நிறுத்தி முன்னிற்கும் செக்கர்' என்று அந்திவானத்தைச் சொல்வார்.
திரைப்படக் கவிஞர்களில் ஆர்மோனியம் வாசிக்கத் தெரிந்தவர்கள் இசையோடு பாடக் கூடியவர்கள் மூன்று பேர்தான். ஒருவர் கம்பதாசன், மற்றொருவர் டி.கே.சுந்தரவாத்தியார், இன்னொருவர் எம்.கே.ஆத்மநாதன். இதில் எம்.கே.ஆத்மநாதன் இசையமைப்பாளரும்கூட.
"புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே, தங்கச்சிக் கண்ணே - சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே' என்பது போன்ற பல பாடல்களை எழுதியவர் டி.கே.சுந்தர வாத்தியார். இவர் ஏ.வி.எம். நிறுவனத்தில் ஆஸ்தானக் கவிஞரைப் போல் இருந்தவர்.
அதுபோல், ஆத்மநாதன் டி.கே.எஸ். நாடகக் குழுவில் இசையமைப்பாளராக இருந்தவர். சில படங்களுக்கும் இசையமைத்தவர். புதையல் படத்தில் இடம் பெற்ற "விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே' என்ற பாடலைப் போல் பல பாடல்கள் எழுதியவர்.
மருதகாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடிக் கவிஞர் கம்பதாசன். இவரது முதல் கவிதைத் தொகுதி "கனவு'. இது 1940-இல் வெளிவந்தது. அதில் பெண்ணுரிமை பற்றிச் சிறப்பாக எழுதியிருப்பார்.
பெண்ணுக்கு உரிமையே இல்லையென வாது
பேசிடும்நாவைத் துணித்திடுவோம்
கண்ணுக்கு ஒளியது இல்லையென்றால் - இங்கு
காட்சியுண்டோ ஒரு மீட்சியுண்டோ
நல்ல யாழது ஆண்களெனில் - சுவை
நாதம் தரும்விரல் பெண்களென்போம்
தில்லையில் ஆடிய செஞ்சடையான் - பெண்ணைச்
சேர்த்துடல் கொண்டதைச் சிந்தித்தீரோ
உச்சிக் கிளையில் நின்றபடி - பாதம்
ஊன்றியே வந்த அடிமரத்தை
அச்சம் இலாமலே வெட்டுலகே நாளை
அடையும் கதிநீ அறிகுவையோ?
1940 முதல் 1961 வரை திரைப்பட உலகில் மிகவும் புகழ் பெற்ற கவிஞராக விளங்கினார். 1940-இல் "வாமன அவதாரம்' என்ற படத்தில்தான் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். இவருக்குத் தமிழோடு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளும் நன்றாகத் தெரியும்.
ஹிந்திப் படங்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்ய எண்ணுவோர் கம்பதாசனைத்தான் அணுகுவார்கள். இதில் 1961-இல் வெளிவந்த "மொகலே ஆஸம்' படத்தின் வசனம், பாடல்களுக்காக ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிய கவிஞர் அவர். இந்தத் தொகையை அந்தக் காலத்தில் எவரும் வாங்கியது கிடையாது. அன்றைக்கு ஐம்பதாயிரம் என்பது இன்று 50 லட்சத்துக்குச் சமம்.
1953-இல் வெளியான ராஜ்கபூர், நர்கீஸ் நடித்த "அவன்' என்ற படம் கம்பதாசன் பாடல்களால் வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்திலிருந்துதான் ஏ.எம்.ராஜா, ஜிக்கி ஆகிய பின்னணிப் பாடகர்களின் மார்க்கெட் உயர்ந்தது. இதைப் பாடகர் ஏ.எம்.ராஜாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
எனது திரைப்பட அனுபவத்தில் பல கவிஞர்களை நான் நன்கறிவேன். அவர்களோடு நெருங்கிப் பழகியும் இருக்கிறேன். ஆனால், அவர்களில் கற்பனை வளத்திலோ தமிழ்ச் சொற்களைக் கையாளும் திறத்திலோ கம்பதாசனோடு யாரையும் ஒப்பிட முடியாது என்று பழம்பெரும் இயக்குநரான கிருஷ்ணன் (பஞ்சு) கூறியிருக்கிறார்.
கம்பதாசனது கவிதைச் சிறப்பை பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, உருதுக் கவிஞர் இக்பால் போன்ற பல்வேறு கவிஞர் பெருமக்கள் பாராட்டியிருக்கிறார்கள்.
கம்பதாசன் மிகப்பெரிய செலவாளி. முதல் நாள் கையில் பத்தாயிரம் ரூபாய் வைத்திருப்பார். மறு நாள் யாரிடமாவது 10 ரூபாய் கடன் கேட்டுக் கொண்டிருப்பார்.
கம்பதாசன் கவிஞர் மட்டுமல்ல, நடிகராகவும் வலம் வந்தார். "மங்கையர்க்கரசி' படத்தில் பாடல்களோடு அந்தப் படத்தின் திரைக் கதையையும் அவர்தான் எழுதினார். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி நடித்த "பூம்பாவை' என்ற படத்தின் திரைக் கதையையும் அவர்தான் எழுதினார். அதில் இரண்டு பாடல்களும் எழுதினார்.
"சாவிலே வாழ்வு' என்ற தலைப்பில் கம்ப தாசன் ஒரு கவிதை எழுதினார்.
"சிலர் விழிப்பார் சிலர் துயில்வார் - நான் விழித்துக்கொண்டே துயில்கின்றேன்; சிலர் வாழ்வார் சிலர் சாவார் - நான்வாழ்ந்து கொண்டே சாகின்றேன்' என்று வரும். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் ஒரு படத்தில் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன். சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் என்று எழுதினார்.
பேசும் படம் வந்த ஆரம்பகாலத்தில் "திரெளபதி வஸ்திராபரணம்' என்ற படத்தில் கம்பதாசனும், எம்.எஸ்.ஞானமணியும் நடித்திருக்கிறார்கள். முதலில் நடிகராகத்தான் அறிமுகமானார் கம்பதாசன். அதற்குப் பிறகுதான் கவிஞராக எழுச்சி பெற்றார். எம்.எஸ்.ஞானமணியும் அதற்குப் பிறகுதான் இசையமைப்பாளரானார்.
"சூரியனை சூரிய தேவனென்றும், சூரியக் கடவுளென்றும் வழிபட்டு வந்த காலத்தில்
சூரியனும் ஒரு தொழிலாளி- தினம்
சுற்றும் உலகும் தொழிலாளி
வாரி அலையும் தொழிலாளி- எதிர்
வந்திடும் காற்றும் தொழிலாளி'
என்று புரட்சிப் பாடல்களை திரைப்படங்களில் எழுதியவர் இவர். தொழிலாளர்களின் குரலைத் திரைப்படத்தில் பதிவு செய்த முதல் புரட்சிக் கவிஞர் இவர்தான்.
கம்பதாசருடைய பாடல்களைத் தொகுத்து முதன் முதலில் புத்தகமாக வெளியிட்டவர் சிலோன் விஜயேந்திரன்தான். அவர் இல்லையென்றால் கம்பதாசன் பாடல்கள் வெளிவந்திருக்காது.
திரைப்பாடல்கள் தவிர பல நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள், கவிதை நூல்கள் என்று 1940-இல் இருந்து 1970 வரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
1959-இல் டி.ஆர்.மகாலிங்கம், பானுமதி நடிப்பில் வெளிவந்த "மணிமேகலை' படத்தில் சிறைச்சாலையைப் பற்றி ஒரு பாடல் எழுதியிருப்பார். நடிகை பானுமதி பாடிய பாடல் அது.
"உலகமே ஒரு சிறைச்சாலை- உற்ற
உயிருக்கு உடம்பே சிறைச்சாலை
ஐயிரண்டு திங்கள் அன்னைவயிறே சிறைச்சாலை
அணி பருவம் ஏழுக்கும் ஆசையே சிறைச்சாலை
வெயில்தரும் பகலுக்கு இரவே சிறைச்சாலை
விதிமுடிந்தால் அனைவருக்கும் புதைகுழி சிறைச்சாலை'
இதைக் கோவை சிறைச்சாலையில் சிறைவாசிகள் மத்தியில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு பற்றிக் காவியமும் எழுதியிருக்கிறார். இவரை ஆழ்வார்ப்பேட்டையில் 1970-இல் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். இவர் பிரஜா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். டாக்டர் ராம் மனோகர் லோகியா, அசோக்மேத்தா, ஜெயப்பிரகாஷ் நாராயண், சரோஜினி நாயுடுவின் சகோதரர் ஹிரேந்திரநாத் சட்டோ பாத்யாயா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். ஹிந்தி இசையமைப்பாளர் நெளசத்தை கம்பதாசனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் இவர்தான்.
மதுப்பழக்கத்தால் 57 வயதில் மறைந்துவிட்டார் என்றாலும் நம்மைப் போன்ற இலக்கியவாதிகள் மனதில் என்றும் மறையாமல் வாழ்ந்திருப்பார் கம்பதாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.