ஒருநாள் அரண்மனை மஞ்சத்தில் உறங்கிக் கொண்டிருந்த மன்னர் கட்டபொம்மன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, 'நீ உன் மனைவிக்குச் செய்து போட்டிருக்கிற ரத்தினமாலை என் மனைவி வள்ளிக்கு வேண்டுமாம். அதனால் உன்னிடம் கேட்கிறேன்'' என்றார்.
உடனே கட்டபொம்மன் எழுந்து உட்கார்ந்து, 'முருகா, உன்னிடம் இல்லாததா? நீ எதற்கு என்னிடம் வந்து கேட்க வேண்டும்? உண்மையில் இது உனது திருவிளையாடலாகத்தான் இருக்க வேண்டும்'' என்று புலம்பினார்.
'என்ன நீங்களாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஏதேனும் கனவு வந்ததோ?'' என்றார் மனைவி ஜக்கம்மா. விஷயத்தை கட்டபொம்மன் சொல்ல, அதை ஜக்கம்மா நம்பவில்லை.
ஜக்கம்மா வழக்கம் போல பூஜையறையில் முருகனின் திருவுருவச்சிலைக்கு முன்பு நின்று வணங்கிக் கொண்டிருந்தார். அப்போது கட்டபொம்மன், 'மகாராணி, நான் உனக்கு இதே போல வேறு ஒன்று செய்து தருகிறேன். நீ இப்போது அணிந்திருக்கிற ரத்தினமாலையைத்தான் முருகன் கேட்கிறார். நீயாகவே முருகனது ஆசையை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்து சேர்ந்தார் கட்டபொம்மனின் தந்தை ஜெகவீர கட்டபொம்மன். இதுகுறித்து ஜக்கம்மா தனது மாமனாரிடம் விவாதித்தார்.
இதற்கு மாமனார் பதில் அளிக்கும்போதே சட்டென தனது கழுத்தில் அணிந்திருந்த அழகிய ரத்தின மாலையைக் கழற்றி தான் தினசரி வழிபடும் பூஜையறையில் இருந்த முருகனின் சிலை மீது அணிவித்து மகிழ்ந்தார் ஜக்கம்மா. அவர் வழிபட்ட அந்த முருகன் சிலையும், ரத்தினமாலையும், பூஜை பொருள்களும் திருச்செந்தூர் கோயிலில் இருக்கின்றன. அவை இன்றும் உற்சவ மூர்த்திகள் இருக்கும் இடத்தில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.