நமது கலைப் பண்பாட்டு பாரம்பரியத்தில் இசையுடன் புராண, இதிகாச கதைகளைச் சொல்லும் கதாகாலட்சேபத்துக்கு தனி இடம் உண்டு.
ஆனால், அந்தக் கலையைத் திறம்படக் கற்று சாதனை புரிந்தவர்கள் வெகுசிலர்தான். மூத்த ஹரிகதைக் கலைஞர் தஞ்சாவூர் கமலா மூர்த்தியிடம் ஆறு வயதுச் சிறுமியாக ஹரிகதை கற்றுக் கொள்ளத் துவங்கிய வர்ஷா புவனேஸ்வரி, இன்று இக்கலையில் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
அவரது திறமைக்கு அங்கீகாரமாக அண்மையில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் கல்கி விருது வழங்கப்பட்டுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ள வர்ஷா புவனேஸ்வரியிடம் பேசியபோது:
'என் அப்பா ஸ்ரேயஸ் நாராயணன், சங்கீத கலாநிதி பி.எஸ்.நாராயணசாமியிடம் பாட்டு கற்றுக் கொண்டார். என் அம்மா காயத்ரி இசையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எனக்கு மூன்று, நான்கு வயது முதலே கதைகேட்கும் ஆர்வமும், கேட்ட கதையை மற்றவர்களுக்குச் சொல்லும் திறமையும் வந்து
விட்டது. இதைக் கவனித்த எனது பெற்றோர், எனது ஆர்வத்துக்கும், திறமைக்கும் ஹரிகதைதான் சரியானது என்று முடிவு செய்தார்கள். மூத்த ஹரிகதைக் கலைஞர் கமலா மூர்த்தியிடம் என்னை அழைத்துச் சென்று தங்கள் விருப்பத்தைக் கூறினார்கள்.
அப்போது எனக்கு ஆறு வயது. அவருக்கு 78 வயது. 'ஆறு வயசுக் குழந்தையான இவளால் ஹரிகதை கற்றுக் கொள்ள முடியுமா?' என்ற தயக்கம் இருந்தபோதிலும், அவர் என்னை சிஷ்யையாக ஏற்றுக் கொண்டு, ஹரிகதை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
முதலில், சீதா கல்யாணம் கதை சொல்வதற்கு எனக்குப் பயிற்சி அளித்தார். நானும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டேன். ஒரு வருடம் ஆனபோது, அவர் என் பெற்றோரிடம், 'குழந்தை தயாராகிவிட்டாள்! அரங்கேற்றம் வைத்துக்கொள்ளலாம்!' என்று சொன்னபோது, என்னுடைய பெற்றோருக்குத் தயக்கம்.
'இத்தனை சீக்கிரத்தில் அரங்கேற்றமா? இன்னும் கொஞ்ச நாள் கற்றுக் கொள்ளட்டுமே!' என்றார்கள். ஆனால், என்னுடைய குரு, 'அரங்கேற்றம் ஆகட்டும். மேடை ஏறி, முன்னால் உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து, தைரியமாகக் கதை சொன்னால், நல்ல அனுபவம் கிடைக்கும்!' என்று சொல்லிவிட்டார்.
என் ஏழாவது வயதில் என் குரு மற்றும் பெற்றோர் ஆசியோடு சென்னை மே. மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் எனது அரங்கேற்றம் நடைபெற்றது. அதன் பிறகு விஜய் டி.வி.யின் பக்தித் திருவிழாவில் பங்கேற்று கதை சொன்னேன். 'சின்ன வயதிலும், இத்தனை அழகாக ஹரிகதை சொல்லுகிறாரே!' என்று பலரும் பாராட்டினார்கள்.
தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளிலும் ஹரிகதை சொல்ல வாய்ப்புகள் வந்தன. அடுத்து, சபாக்களில் என் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். பிரம்ம கான சபா, நாரத கான சபா, மியூசிக் அகாதெமி என்று என்னுடைய தளம் விரிவடைந்தது.
எனது குரு காலமாகும் வரை அவரிடம் என்னுடைய பயிற்சி தொடர்ந்தது. அந்த ஒன்பது வருட காலம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கட்டம். என் தந்தையே ஒரு இசைக்கலைஞர் என்பதால், அவரிடம் பாட்டு கற்றுக் கொண்டேன்.
ஹரிகதை நடத்துவதற்கு அந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. என்னுடைய குரு கமலா மூர்த்தியின் கதை சொல்லும் பாணி எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் குருவின் குருவான திருவையாறு அண்ணாசாமி எனக்கு மகாகுரு. எம்பாரின் ஹரி கதைக்கு நான் பரம விசிறி.
ஒவ்வொரு ஹரிகதையும் எனக்கு பரீட்சை மாதிரி. பல்கலைக் கழகத்தில் படிக்கிற மாணவர்கள் எப்படி பரீட்சைக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வார்களோ அது போல நான் புதிதாக ஒவ்வொரு ஹரிகதை சொல்வதற்கு முன்பாகவும் தயார்ப்படுத்திக் கொள்கிறேன். உதாரணமாக வள்ளித் திருமணம் என்ற கதையை சொல்லப்போகிறேன் என்றால், இதற்கு முன்னால் ஹரிகதை வல்லுனர்கள் இந்தக் கதையை எப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன்.
புராண, இதிகாசங்களில், பக்தி இலக்கியங்களில் இது பற்றிய விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்கிறேன். கி.வா.ஜ., புலவர் கீரன், வாரியார் சுவாமிகள் போன்றவர்கள் எழுதி இருக்கும் உரைகளைப் படிக்கிறேன். இப்படியெல்லாம் என்னை சரியான முறையில் தயார்ப்படுத்திக் கொண்டுதான் நான் ஒரு புதுக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறேன்.
நான் பல கதைகளைச் சொன்னாலும், என் மனதுக்கு மிகவும் பிடித்தது மாணிக்கவாசகர் சரித்திரம்தான். பொதுவாகவே எனக்கு நாயன்மார்களின் பக்திப்பூர்வமான வாழ்க்கைச் சரித்திரங்களைச் சொல்லும் பெரியபுராணம் ரொம்பவும் பிடிக்கும். அதிலும் மாணிக்கவாசகரின் கதை என் மனம் கவர்ந்த ஒன்று. காரணம், அவரது வாழ்க்கையில் அவர் கண்ட ஏற்ற, இறக்கங்கள்தான்.
எந்த அரசர் அவரை அமைச்சராக நியமித்தாரோ அந்த அரசரே அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார். ஆனாலும், அவர் சுக துக்கங்களை சமமாக பாவிக்கிறார். சிவன் மீதான தனது பக்தியில் இம்மியளவும் குறையாமல் அதிலே மூழ்கித் திளைக்கிறார். அவருடைய திடமான பக்தி எனக்கு மிகப் பெரிய ஒரு இன்ஸ்பிரேஷன். என் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறவர்கள் பலரும் என்னை மாணிக்க வாசகரின் கதையைச் சொல்லும்படி கேட்கிறார்கள்.
மாணிக்கவாசகர் மீதான பிடிமானத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது எனது அம்மா, சுவாமி சித்பவானந்தரின் உரையை வைத்துக் கொண்டு, எனக்கு மாணிக்க வாசகரின் கதையைச் சொல்லி இருக்கிறார். பக்தி, அமைச்சர் என்ற ஆளுமை, சிறை வாழ்க்கை இது பற்றியெல்லாம் புரிந்துகொள்கிற வயது அது இல்லை என்றாலும், அந்தக் கதையைக் கேட்டு நான் மிகவும் மனம் நெகிழ்ந்து போனேன்.
இன்று மேடையில் ஒவ்வொரு முறையும் மாணிக்க வாசகர் கதையைச் சொல்லும்போது, எனது அம்மா எனக்கு அந்தக் கதையைச் சொன்னபோது எனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியை, அரங்கத்தில் அமர்ந்து நான் சொல்லும் மாணிக்கவாசகர் சரித்திரத்தைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு தான் சொல்லுவேன்.
இளைய தலைமுறையினருக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வம் இல்லை என்பது போன்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது தவறு. என்னுடைய நிகழ்ச்சிகளுக்கு நிறைய இளையதலைமுறையினர் வருகிறார்கள். ஆத்மார்த்தமாக நாம் ஒரு விஷயத்தைச் செய்யும்போது, அது வயது வித்தியாசமில்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் போய்ச் சேருகிறது என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.' என்கிறார் வர்ஷா புவனேஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.