ஆங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. அவர்களோடு சம
காலத்தில் வாழ்ந்த ஒரே பெண் எழுத்தாளர் ஜேன் ஆஸ்டினின் நவீனங்களில் வரும் கதாபாத்திரப் படைப்புகள் புதுமையாக இருந்தன. அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களின், சாதாரண சம்பவங்களை அவர் யதார்த்த நிலையில் உருவாக்கியதுதான் காரணம்.
ஜேன் ஆஸ்டினின் 'பிரைட் அன்ட் பிரிஜுடிஸ்' மற்றும் இதர நவீனங்கள் உயர்தரமானவை. காதலும், திருமணமும்தான் இவற்றின் உள்ளடக்கம்.
இவர் அனைத்து விஷயங்களையும் மிகவும் நகைச்சுவையோடு கூறுகிறார். அதிலும், மனிதக் குணங்களின் முரண்பாட்டை கூறுவதில் திறமையானவர். கதாபாத்திரங்களை உருவாக்கும் இவரது ஆற்றல் வாசகர்களிடம் பாராட்டுகளையும், விருப்பத்தையும் பெற்றவை. சொல்லப் போனால் இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படுவராக ஜேன் ஆஸ்டின் மாறிவிட்டார்.
கிராமத்து மதபோதகரின் மகளான ஜேன் ஆஸ்டின் 1775-ஆம் ஆண்டு டிசம்பர் 16-இல் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷயர்தான் அவரது சொந்த ஊர். பெற்றோரிடமே ஆரம்பக் கல்வியை பயின்றார். போதனைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடு உள்ளிட்டவை சீரிய முறையில் அளிக்கப்பட்டதால், சுட்டிப் பெண்ணாக ஜேன் ஆஸ்டின் விளங்கினார். உரிய வயதில் தங்கும் விடுதியுடைய பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இவரது குடும்பத்தினர் கலகலப்பாகவே இருப்பர். மாலை வேளைகளில் எல்லோரும் சேர்ந்து வாய்விட்டு உறக்கப் படிப்பர். வரவேற்பு அறையிலோ, தானியக் களஞ்சியத்திலோ நாடகம் போடுவார்கள். ஒன்றாகப் பாடுவார்கள்.
இசைக்கருவிகளை வாசித்து மகிழ்வார்கள். புத்தகங்கள் படித்தலும், நண்பர்களுடன் உரையாடுதலும் ஜேன் ஆஸ்டினுக்குப் பிடித்தமானவை. இவர் கதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதிக் கொண்டே இருப்பார். தொடக்கத்தில் இவர் சிறிய அளவில் நகைச்சுவைக்காக எழுதியவை குடும்பத்தினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
இவருடைய 'சென்ஸ் அன்ட் சென்ஸிபிலிட்டி' என்ற நூல் 1811-ஆம் ஆண்டில் வெளிவந்தபோது, பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் எழுதிய வயது வந்தோருக்கான பல நாவல்கள் முழுமை பெற்றிருந்தன. பலரும் விரும்பிப் படித்தனர்.
இவர் எழுதிய 'பிரைட் அன்ட் பிரிஜுடிஸ்' ஒரு வித்தியாசமான நாவல் என்பதோடு, அவர் எழுதியவற்றில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 1796-இல் இந்த நாவலை அவர் எழுதினார். இதன் ஆரம்பப் பகுதியில் 'முதல் எண்ணங்கள்' என்றே தலைப்பிட்டிருந்தார். 'காடெல்' என்ற பிரசுரகர்த்தரிடம் 1797-இல் தரப்பட்டது. அவர் படித்துவிட்டு, நிராகரித்துவிட்டார். பின்னர், ஜேன் ஆஸ்டின் நாவலைத் திருத்தி அமைத்தார். அதே பிரசுரகர்த்தரால் 1813-இல் இந்த நூல் பிரசுரிக்கப்பட்டது. இதற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பும் பாராட்டும் கிடைக்கப் பெற்றது.
'பிரைட் அன்ட் பிரிஜுடிஸ்' கதை சுருக்கம்:
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பென்னட் தம்பதிக்கு ஐந்து பெண்கள். ஆனால், செல்வம் குறைவுதான். சுமாரான வருவாய். ஐந்து பெண்களையும் பொருத்தமானவர்களுக்கு மணம் செய்துவைக்க வேண்டும் என்பது தாயின் விருப்பம். அந்தக் கவலையே அவரை வாட்டியது. வயது வந்தவர்கள் இருவர். மற்ற மூவரும் சிறுமியர். மூத்தவர்களுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மூத்தவள் ஜேன் மீது சார்லஸ் பிங்லே என்ற பணக்கார இளைஞன் காதலிக்கிறான். இரண்டாமவள் எலிசபெத்தை பணக்கார இளைஞர் டார்சே விரும்புகிறான். ஆனால், டார்சே தனது கர்வமான, அகம்பாவம் பிடித்த நடத்தையால் எலிசபெத்தின் மனதை நோகடித்துவிடுகிறான். இதனால் ஏற்படும் சில தவறான எண்ணங்களால் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். ஜேனும் சார்லஸ் பிங்லேவும்கூட பிரிந்துவிடுகின்றனர். பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
பிரச்னைக்குரிய இந்தக் குடும்பக் கதையை மனிதக் குணங்களின் முரண்பாடுகளையெல்லாம் பரிகசித்தும், குத்தலாகச் சொல்லியும் திறமையான கதாபாத்திரங்கள் வாயிலாக யதார்த்த நிலையை விளக்கிப் பதிவு செய்கிறார். இரு காதல் ஜோடிகளும் மீண்டும் இணைய திருமணம் இனிதே நடைபெறுகிறது. சுவாரசியமான உரையாடல் இந்த நாவலின் மிகப் பெரிய பலம். இதன்காரணமாகவும், கதாபாத்திரங்களின் படைப்பு நேர்த்திக்காகவும் இந்த நாவல் வாசகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது.
திருமணமும் செய்துகொள்ளாமல் இடைவிடாமல் இரவும் பகலும் எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜேன் ஆஸ்டின் உடல்நலத்தைக் கவனிக்காமல் இருந்துவிட்டார். அவர் பல நோய்களுக்கு ஆளானார். 1817 ஜூலை 18-இல் அவர் தனது 42-ஆம் வயதில் மரணம் அடைந்தார்.
இவரது மரணத்துக்குப் பிறகு 'நார்த்தாங்கர் அப்பே', 'பர்ஸூவேஷன்' ஆகிய இரு நாவல்கள் வெளியாகின.
எழுத்தாளர் அநுத்தமா 'தமிழின் ஜேன் ஆஸ்டன்' என்று பாராட்டப்பட்டவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.