இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய 3 மாகாணங்களில் கல்லூரிகளிலிருந்து மருத்துவர்கள் உருவாயினர். இருப்பினும், மருத்துவப் பணிக்கு ஆள் பற்றாக்குறையாக இருந்தது. எனவே 1853 ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டு இடைவெளியில் 28 மருத்துவப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த வரிசையில் தஞ்சாவூரிலும் 1883- ஆம் ஆண்டில் மருத்துவப் பள்ளி ஒன்று உருவானது.
140 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த மருத்துவப் பள்ளி குறித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியரும், தமிழறிஞரும், எழுத்தாளருமான சு. நரேந்திரன் கூறுகிறார்...
'பிரிட்டிஷின் 34 வயது வேல்ஸ் இளவரசர் (பின்னாளில் அரசர் ஏழாம் எட்வர்ட்) இந்திய வருகையின்போது, நினைவுச் சின்னங்களை எழுப்புவது வழக்கமாக இருந்தது. அச்
சமயத்தில் தஞ்சாவூரில் மருத்துவமனை கட்ட வேல்ஸ் இளவரசர் விருப்பம் தெரிவித்தார். அதன்படி, இராஜா மிராசுதார் மருத்துவமனையும், மருத்துவப் பள்ளியும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்.எஸ். தாமஸ் என்கிற ஹென்றி சில்லிவான் தாமஸின் கடும் உழைப்பால் ஒரே ஆண்டில் (1878 - 79) இராஜா மிராசுதார் மருத்துவமனைக் கட்டப்பட்டு, 1880-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது.
இந்த மருத்துவமனைக்காக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ராணி பூங்கா என அழைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 40 ஏக்கர் இடத்தை மராட்டிய அரசி ராணி காமாட்சி பாய் சாஹிப் தானமாக வழங்கினார்.
மேலும், மராட்டிய அரச குடும்பம் ரூ. 30 ஆயிரம், திருப்பனந்தாள் காசி மடத்துத் தலைவர் இராமலிங்கத் தம்பிரான் ரூ. 25 ஆயிரம், தஞ்சாவூர் மிராசுதாரர்களான கபிஸ்தலம் துரைசாமி மூப்பனார் ரூ. 2 ஆயிரத்து 500, பொறையார் தவசிமுத்து நாடார் ரூ. 2 ஆயிரம், டி. கோபாலகிருஷ்ண பிள்ளை, பூண்டி வீரையா வாண்டையார் போன்ற பலர் மருத்துவமனை கட்ட உதவி செய்தனர். இக்கொடையை விளக்கும் கல்வெட்டுகள் மருத்துவமனையில் ஆங்காங்கே உள்ளன. மருத்துவமனை பராமரிப்புகளுக்கு அரசு, நகராட்சி, சத்திரம் நிர்வாகம், ஜில்லா போர்டு ஆகியவை உதவின. இதில், உள்நோயாளிகள் பிரிவில் 144 படுக்கைகள் இருந்தன.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையுடன் ஒரு மருத்துவப் பள்ளியையும் ஆட்சியர் தாமஸ் நிறுவினார். தஞ்சாவூருக்கு இளவரசர் வேல்ஸ் 1883-ஆம் ஆண்டு வந்தபோது தஞ்சாவூர் மருத்துவப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆனால், இளவரசர் வேல்ஸ் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள வல்லம் வரை வந்துவிட்டு, தஞ்சாவூர் நகருக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றுவிட்டார். அக்காலகட்டத்தில் தஞ்சாவூர் நகரில் காலரா கொள்ளை நோய் பரவி இருந்ததே அதற்குக் காரணம் என வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த மருத்துவப் பள்ளி கட்டடங்கள் கட்ட அப்போது ரூ. 66 ஆயிரம் செலவானது. இப்பள்ளி தஞ்சாவூர் எச்.ஆர்.எச். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மெடிக்கல் ஸ்கூல் என அழைக்கப்பட்டது. இப்பள்ளியைக் கட்ட மதராஸ் மாகாண அரசு ரூ. 1 லட்சம் வழங்கியது. இம்மருத்துவமனையின் நுழைவாயில் அருகேயுள்ள பெரிய பொது அறைக்கு தாமஸ் ஹால் என ஆட்சியரின் நினைவாக அவர் பெயர் சூட்டப்பட்டது. எனவே, ராஜா மிராசுதார் மருத்துவமனை என்றாலும், இதை தஞ்சாவூர்வாசிகள் "தாமஸ் ஹால்' என்றே அழைத்தனர். இப்போதும் மூத்த குடிமக்கள் சிலர் "தாமஸ் ஹால்' என்றே அழைக்கின்றனர்.
இந்த மருத்துவப் பள்ளிக்கான நுழைவுவாயில் அக்காலத்தில் பெரிய கோயிலுக்கு எதிரே இருந்தது. பின்னாளில் காந்திஜி சாலை பகுதிக்கு மாற்றப்பட்டது. மிராசுதார்கள் உதவியால் வளர்ந்த இந்த மருத்துவப் பள்ளி சிறந்த பள்ளி எனப் பெயர் பெற்றது. இதில், தொடக்கத்தில் ஆண்டுக்கு 15 பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில், 7 பேர் சுதேசி கிறிஸ்தவர்கள், மற்றவர்கள் இந்துக்கள். அனைவரும் உதவித் தொகை பெற்றுப் படித்தனர்.
இந்த மருத்துப் பள்ளியில் சேருவதற்கு அக்காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருக்க வேண்டும். இக்காலத்தில் உள்ளதைப் போன்று மதராஸ் மாகாண தேர்வில் மதிப்பெண் கூடுதலாக இருந்து, ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும்.
மதராஸ் மாகாணத்திலுள்ள விசாகப்பட்டினம், மதராஸ் பள்ளிகளைப் போல, இப்பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற்றன. நான்காண்டு கால படிப்புக்குப் பிறகு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எல்.எம்.பி. (லைசென்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்
படிப்பைக் கற்க ரூ. 60 - 100 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில், மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ. 60-ம், மற்றவர்களுக்கு தலா ரூ. 100-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இங்கு வந்து படித்தனர்.
இதனிடையே, 1874 ஆம் ஆண்டில் அப்போதைய மதுரை மாவட்டம், திண்டுக்கல்லில் பாமர், செஸ்டர் என்கிற இரு அமெரிக்க மிஷனரிகளால் தொடங்கப்பட்ட மருத்துவப் பள்ளி 1875 ஆம் ஆண்டில் மதுரைக்கு மாற்றப்பட்டது. பின்னர், மதுரையில் இருந்த இப்பள்ளியும் 1897, மார்ச் மாதத்தில் மூடப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவப் பள்ளிக்கு மாணவர்கள் மாற்றப்பட்டனர்.
இப்பள்ளியில் படித்து முடித்ததும் ராணுவம் அல்லது சிவில் சப் அசிஸ்டண்ட் சர்ஜன் என்ற பதவியில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். மேலும், டப்ரின் நிதியுதவி மருத்துவமனைகளிலும் நியமிக்கப்பட்டனர். தவிர, சிலர் தனிப்பட்ட முறையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். சிலருக்கு தேயிலைத் தோட்டம், நூற்பாலை, சுரங்கம் ஆகியவற்றிலும் மருத்துவர் வேலை கிடைத்தது.
இந்த மருத்துவமனையிலும், மருத்துவப் பள்ளியிலும் காலப்போக்கில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. கடந்த 1902 ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணத்தில் சிறந்த மருத்துமனைகளில் ஒன்றாக இராஜா மிராசுதார் மருத்துவமனை இருந்தது. இதில், 1902 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,537 உள் நோயாளிகள், 29 ஆயிரம் வெளி நோயாளிகள், நாள்தோறும் வரும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை 100 என இருந்தது. 1905 ஆம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் மனைவி அலெக்ஸ்சாண்ட்ராவின் பெயரில் மகளிர் பிரிவு தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் மருத்துவப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், ரூ. 2 லட்சம் மதிப்பில் ஒரு பரிசோதனைக் கூடமும், பெரிய கட்டடமும் கட்டப்பட்டு, 1920-இல் திறக்கப்பட்டன. அச்சமயத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 322 என்றாலும், 400 பேர் வரை படிக்கக்கூடிய வசதி இருந்தது.
இவ்வளவு புகழ்பெற்ற தஞ்சாவூர் மருத்துவப் பள்ளி என்ன காரணத்தாலோ 1933, மே 1 ஆம் தேதி மூடப்பட்டது. தற்போது, இக்கட்டடத்தில் காசநோய் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. காமராஜர் முதல்வரான பின்னர் ரோட்டரி சங்கம் அளித்த நிலக் கொடை மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி தோன்றியது. இக்கல்லூரியை 1958-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார். இக்கல்லூரியின் ஓர் அங்கமாக அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனை இப்போதும் செயல்பட்டு வருகிறது'' என்கிறார் நரேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.