'மனித வாழ்வை உடற்பயிற்சி, விளையாட்டு, உணவு கட்டுப்பாடு என சீராக வைத்திருந்தால், ஆரோக்கியமான நீண்ட வாழ்வு வாழலாம். வாழ்க்கையில் நாம் ஏழை, பணக்காரன் என்ற பாடுபாடு இல்லாமல், மாறுபட்ட உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்செயல்பாடுகள் அற்று, மன அழற்சிக்கு ஆளாகி வாழ்கிறோம்.
உடல், மன ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் அவசியம்'' என்கிறார் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவரும், வேலூர் மாநகராட்சியின் ஓய்வு பெற்ற துணை ஆணையருமான த. செளந்தரராஜன்.
அவர் கூறியது:
'உடல் உறுப்புகள் செயற்பாட்டுக்கு எந்தவிதமான பயிற்சிகளும் கொடுக்காமலும், உணவு உண்ணும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களும் நாமே ஏற்படுத்தி வருகிறோம்.
"இரவு எட்டு மணிக்குள் உணவு உண்பது நல்லது' என மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், உடல் செயற்பாட்டுக்கு முரணாக நேரம் கடந்து, தீங்கான கவர்ச்சியான செயற்கை வண்ணங்கள், சுவையூட்டிகள் கலந்த உணவுகளை உட்கொள்கிறோம். இதுவே காலப்போக்கில் செரிமானக் கோளாறு, உடல் கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் போன்ற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டால் அருகேயிருந்த மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிறப்பு மருத்துவர்கள், மருத்துவமனைகளைத் தேடிச் செல்கிறோம். உடல் உறுப்புகளை மாற்றுகிறோம். இது அறிவியல் வளர்ச்சி என்று நாம் சொன்னாலும், நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட நடைமுறை மாற்றங்கள்தான் இதற்கு முதல் காரணம். பலர் பொருளாதார சிக்கல்களுக்கு ஆளாகி, உயிர் இழப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குதல், நீர் இறைத்தல், சைக்கிள் ஓட்டுதல், ஓடியாடிய விளையாட்டுகள் என்று உடல் செயல்பாடுகள் அன்று இருந்த நிலையில், இன்று ஆன்லைன் விளையாட்டு, தொடர் கைப்பேசி கையாளுதல், இணைய வர்த்தகம் போன்றவற்றால் முடங்கியுள்ளோம்.
மனிதர்களின் குடும்ப சூழ்நிலைகள் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு வேகமாக நகர்கிறது. இதனால் உடல்நலத்தில் அக்கறையின்றி வாழ்வு சென்று கொண்டுள்ளது. எனவே, வேகமான உலகத்தில் அனைவரும் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது.
நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம், மூச்சுப் பயிற்சிகள், பளு தூக்குதல், பிடித்த விளையாட்டுப் பயிற்சிகளை முதலில் குறைந்தது 30 நிமிடங்கள் மேற்கொள்ளலாம். துவக்கத்தில் சோர்வு, அலுப்பு, களைப்பு, வெறுப்பு, உடல்வலி, உற்சாகமின்மை போன்றவை ஏற்பட்டாலும், தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள்ளும்போது, ஆர்வம் ஏற்படும்.
உடல் உறுப்புகள் செயல்பாடுகள் மேலோங்கி உடல், மன வலிமைகள் பெற்று இதயம் வலுவடையும். ரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் குறையும். எலும்புகள் வலுவடையும். உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் உறுப்புகள், தசைகள் வலுப்பெற்று, நரம்புகளின் செயல்பாடுகள் தூண்டிவிடப்படும். சீரான உறக்கம் கிடைக்க பெற்று, மூளைக்கும் புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் பெருகும். கல்வியில் சிறந்து விளங்கும் சூழல் உருவாகும். அறிவாற்றல் மேம்படும். மனதில் இளமையான எண்ணங்கள் உருவாகும்.
கார்போஹைட்ரேட்டுகள் நாம் தினசரி பயன்படுத்தும் பழங்கள், தேன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, முழுதானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் போன்ற உணவுகளில் காணப்படுகின்றன. கார்போஹைட்ரேட்டுகளில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை தருகிறது, முழு கோதுமை ரொட்டி, ஆப்பிள்கள், வாழைப்
பழங்கள், கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற உணவுகளால் கிடைக்கப் பெறுகிறது. மீன், முட்டை, பால், தயிர், இறைச்சிகள், வெண்ணெய், வாழைப்பழம், கீரைகள், இளநீர், ஓட்ஸ், முக்கியமாக அந்தந்த சீசன்களில் விளையக் கூடிய காய்கறிகள், பழங்கள் உண்பது நம்முடைய உடலுக்கு ஏற்ற வகையில் அமைந்த இயற்கையின் வரப் பிரசாதமாகும். எனவே, இவைகளை பயன்படுத்தி புரதச்சத்து கார்போஹைட்ரேட்டுகள், நீர் சத்துகள், கலோரிகளைப் பெறலாம்'' என்கிறார் த.சௌந்தரராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.