சுடுமண்ணில் மிளிரும் கலைவண்ணம்
தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான பாரம்பரிய கலைகளுள் ஒன்று 'டெரகோட்டா' எனப்படும் சுடுமண் சிற்பங்கள்.
சுஜாதா மாலி
தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான பாரம்பரிய கலைகளுள் ஒன்று 'டெரகோட்டா' எனப்படும் சுடுமண் சிற்பங்கள். சங்க காலம் தொடங்கி, தற்காலம் வரைக்கும் இதன் பயன்பாடு சிறப்பாக இருக்கின்றது. சோழர்கள் காலத்தில் இந்தக் கலை பெரிதும் உச்சத்தில் வளர்ச்சி பெற்றிருந்திருக்
கிறது. 'டெரகோட்டா' என்பது லத்தீன் சொல். டெரா - திடமான மண்/தரை/சேறு; கோட்டா - நெருப்பில் இட்டு சுடுதல். அதாவது, நெருப்பில் சுடப்பட்ட மண் பொருள்களை 'டெரகோட்டா' என்கின்றனர். ஆயினும், இதற்கு மூலச் சொல் தமிழ்தான் என்கிற கருத்தும் நிலவுகிறது. டெரா- தரை ; கோட்டா - சுட்ட, அதாவது சுட்ட தரை மண் என்கிற தமிழ் வார்த்தையின் திரிவுதான் 'டெரகோட்டா'.
Advertisement
தாய் தெய்வச் சிற்பங்கள்
மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள தாய் தெய்வச் சிற்பங்கள், தமிழ்நாட்டின் கீழடி அகழ்வாய்வில் கிடைத்த தட்டுகள், உருவங்கள் ஆகியவை இந்தக் கலையின் தொன்மைக்குச் சான்றுகள். நாட்டுப்புறங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கான குதிரை, யானை போன்றவை பெரும்பாலும் இந்தச் சுடுமண்ணால் செய்யப்பட்டவைகளாகும்.
தற்காலத்தில் சுடுமண் சிற்பங்களைத் தாண்டி வரவேற்பறை சுவர் அலங்காரப் பொருள்கள், தோட்ட அலங்காரங்கள், தொட்டிகள், பல்வேறு வகையான சேமிப்புக் கலன்கள் என மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்திடத் துவங்கி உள்ளனர். தவிர, டெரகோட்டா டைல்ஸ்களைப் பயன்படுத்தி வீடுகளை அழகுபடுத்துவதும் அதிகரித்துள்ளது. தற்போதைய நவீன போக்கிலும் 'டெரகோட்டா ஜுவல்லரி' எனப்படும் சுடுமண் அணிகலன்கள் பெண்களுக்கிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் -சங்க கால சுடுமண் பாவைகள், கோயம்புத்தூர் - பல்லவர் காலச் சிலைகள், தருமபுரி - குசானர் காலத்திய சிற்பங்கள், தஞ்சை - நாயக்கர் காலச் சிற்பங்கள் என இதன் வரலாறு ஏகமாய் விரிகிறது.
சிலப்பதிகாரத்தில் சுடுமண் சிற்பங்கள்
தமிழ்நாட்டில் சுட்ட கற்களால் கட்டப்பட்ட மாளிகைகள் இருக்கின்ற நகரங்கள் சிறப்பாக விளங்கியிருக்கின்றன. 'சுடுமண் ஓங்கிய நெடு
நகர்' (பெரும்பாணாற்றுப்படை), 'சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதோறும்' (மணிமேகலை) என்கிற வரிகள் மூலம் இதனை அறியலாம். பெரும்பாலான பகுதிகளில் எல்லைக்காவல் தெய்வங்களை சுடுமண் சிற்பங்களாக இருத்திடும் வழமை இருந்து வந்திருக்கிறது.
சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் 'சதுக்க பூதங்கள்' எனப்படும் காவல் பூதங்கள்கூட சுடுமண் சிற்பங்கள்தாம் என்கின்றனர். மேற்கு வங்கத்தில் செய்யப்படும் பாங்குரா குதிரைச் சிற்பங்கள் புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது. திருவிழாக் காலங்களில் மக்கள் நேர்த்திக்கடனுக்காக உருவங்களைச் சமர்ப்பிக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
மண்ணைப் பிசைந்து தயாரிக்கப்படும் உருவங்களை செம்மண் சாற்றைப் பூசி, சூளையில் இட்டு சுட்டு உறுதியாக்குகின்றார்கள். பெரிய உருவங்களைத் தயாரிக்கும்போது, மண்ணுடன் வைக்கோல் துகள்கள், மண் சேர்ப்பதன்மூலம் விரிசல் உண்டாவதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள். குறிப்பாக, அய்யனார் போன்ற காவல் தெய்வங்கள், அவருக்கான யானை, குதிரை வாகனங்களின் கழுத்து மணிகள், ஆபரணங்கள் போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளாகும்,
மண்ணீட்டரங்கம்
கிராமப்புறங்களில் காணப்படும் டெரகோட்டா சிலைகள்தான் உலகின் பெரிய சிலைகளாகச் சொல்லப்படுகின்றன. சோழர்கள் கற்றளிகளின் விமானப் பகுதிகளில்கூட இத்தகு சுடுமண் சிற்பங்களை அலங்காரத்துக்காகப் பயன்படுத்தி உள்ளனர். சுடுமண் சிற்பங்கள் நிறைந்த மண்டபத்தை 'மண்ணீட்டரங்கம்' என்று குறித்துள்ளனர். சோழ அரசு முத்திரையாக புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட இலச்சினைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மிக அருகே உள்ள 'சலுப்பை' எனப்படும் கிராமத்தில் உள்ள சுடுமண் சிற்பங்கள் புகழ் மிக்கவை. இவ்வூர் சதுர்வேதிமங்கலம் எனப்படும் அந்தணர்களுக்கு முற்றூட்டாக அளிக்கப்பட்ட கிராமங்களுள் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டில் விளங்கியிருந்த சோழப்பேரரசி செம்பியன் மாதேவியாரால் நிர்வகிக்கப்பட்ட ஊர் இது.
துறவு மேல் அழகர் கோயில்
இராஜேந்திர சோழர் காலத்தில் இங்கு நடைபெற்ற போரில் சாளுக்கியர்களை சோழர்கள் நிர்மூலம் செய்து உள்ளார்கள். எனவே இந்தப் பகுதிக்கு சாளுக்கிய குலநாசனி மண்டலம் என்று உண்டான பெயர் காலப்போக்கில் மருவி சளுக்கி - சளுப்பை - சலுப்பை என்பதாக ஆகி இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூற்று.
இந்த சலுப்பையின் தனி அடையாளமே இங்குள்ள துறவு மேல் அழகர் கோயில்தான். இங்கு துரவு என்பதே சரி. துரவு என்றால் கிணறு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்த சித்தர் ஒருவர் இங்குள்ள கிணறு ஒன்றின் மேல் அமர்ந்து ஜீவசமாதி அடைந்துள்ளார். இதுவே மக்களால் உருவமற்ற கருவறைப் பீடமாக அமைக்கப்பட்டு, வழிபடப் பெறுகின்றது.
மிகப் பெரிய சுடுமண் சிற்பம்
சலுப்பை ஏரி, இங்குள்ள காவல் தெய்வமான ஏரிக்காத்த அய்யனார் கோயில் சிலைகளும் இந்தப் பாரம்பரியத்தின் நீட்சியாகப் போற்றப்படுகின்றன. இங்கு வழிபாட்டிலுள்ள பிரமாண்டமான யானை, குதிரைச் சிலைகள் தனித்துவம் பெற்றவை.
33 அடி நீளம், 12 அடி அகலம், 60 அடி உயரமுடைய பிரமாண்டமான சுடுமண் யானைதான் இந்த சலுப்பைக்குரிய விசேஷ அடையாளம். ஆசியாவிலேயே மிகப் பெரிய சுடுமண் சிற்பம் இது என்கிறார்கள். 16 - 17-ஆம் நூற்றாண்டுக்குரிய நாயக்கர் கலைப்பாணியைச் சார்ந்தது.
விரிந்த கம்பீரமான காதுகளை உடைய யானையின் தும்பிக்கை ஒரு வீரன் தலைமேல் இருப்பது, அதன் காலடியில் இருக்கின்ற பெண், நாய் உருவங்கள் முதலானவை சிறப்பான அம்சங்கள். யானையின் உடலில் மீது போர்த்தப் பெற்ற துணி, கழுத்துச் சங்கிலி, சிறு சலங்கை கோர்த்த மணிக்கயிறு, உடலின் இருபுறமும் தொங்கிடும் சங்கிலியால் இணைக்கப்பட்ட மணிகள், பக்கத்துக்கு மூன்றாக நிற்கும் இசைக்கருவிகளை மீட்டும் கணங்கள், துதிக்கையால் நெருக்கப்பட்ட கள்வனின் உருவம், அவனால் களவாடப்பட்ட ஆலயத்துப் பலாக்காய் என யாவுமே ரசிக்கத்தக்க கலையின் வெளிப்பாடு.
வெல்லம், கடுக்காய், சுண்ணம் சேர்த்து குழைத்த கலவையைப் பயன்படுத்தி சுட்ட கற்களால் இந்த யானை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவை பல களிமண் வளையங்களை இணைத்து அடுக்கப்பட்டு, உள்ளீடற்ற கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.
இத்தகு அமைப்பின் காரணமாகத்தான் சிலைகளில் வெப்பத்தை சீராகப் பரவச் செய்து உடையாமல் சுட்டு எடுத்துள்ளார்கள். தவிர அடர் செந்நிறத் தன்மை கூடுதல் சிறப்பு. இந்த யானை, குதிரை ஆகியன இரவு நேரங்களில் ஊர்க்காவலுக்காக வேட்டைக்குச் செல்வதான நம்பிக்கை இன்றளவும் உள்ளது.