ஞாயிறு கொண்டாட்டம்

பறவைகளைக் காக்க தூரிகை!

'பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்' என்றார் கவிஞர் கண்ணதாசன்.

முனைவர் பா.சக்திவேல்

'பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்' என்றார் கவிஞர் கண்ணதாசன். இந்தத் திரைப்படப் பாடல் வரிகளுக்கேற்ப பறவைகளில் பல வகைகள், குடும்பங்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்கத் தொன்றுதொட்டு முயற்சிகள் உண்டு.

அழிவுநிலையில் இருக்கும் அருகிவரும் பறவைகளின் உயிர் காக்க தனது வாழ்வின் பெரும்பகுதியை ஒதுக்கி, அவற்றைக் கண்டு அதன் தத்ரூப உருவத்தை ஓவியமாகத் தீட்டி, அதன் தமிழ்ப் பெயருடன் காட்சிப்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த தாவரவியல், வனவிலங்கு ஓவியர் சுரேஷ் ராகவன்.

இயற்கைக் காவலரும், சூழலியல் ஆர்வலருமான அவர் தனது ஓவியங்களை பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறார். கோவையில் அண்மையில் நடைபெற்ற அவரது கண்காட்சியைப் பார்வையிட்டோர் பெரிதும் நெகிழ்ந்தனர்.

'பறவைகளைக் காக்கவே தூரிகைகளை எடுத்தேன். நாட்டில் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் அவசரத் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கண்காட்சியை நடத்துகிறேன்.' என்று கூறி நெகிழும் அவரிடம் பேசியபோது:

'புகழ்பெற்ற சென்னை அரசு கலை, கைவினைக் கல்லூரியில் பட்டம் பெற்றேன். இயற்கை உலகத்தால் ஆழ்ந்து ஈர்க்கப்பட்டு, கலையை ஒரு பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் எனது தொழில்முறைப் பயணத்தைத் தொடங்கினேன். முன்னணி விஞ்ஞானிகள், தாவரவியலாளர்கள், பறவையியல் வல்லுநர்களுடனான நெருங்கிய ஒத்துழைப்புகளின் மூலம் எனது கலைப் பாதை வடிவம் பெற்றது.

34 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய தாவரவியல் ஆய்வுக் கழகத்தில் தாவரவியல் ஓவியராகப் பணியாற்றினேன். பறவைகளைக் கவனிப்பது, ஆய்வு செய்வது, ஓவியமாக வரைவது எனப் பறவைகளுடனான வாழ்நாள் பயணம், அறிவியல் மற்றும் கலை ஆகிய இரண்டிலும் ஆழமாக வேரூன்றினேன்.

சிறு வயதில் நான் பார்த்த பல தாவரங்கள், பறவைகளைக் காணமுடியவில்லை என்ற ஆதங்கத்திலும், விளிம்பு நிலையில் உள்ள உயிர்களின் உருவங்களைப் பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் 534-க்கும் மேற்பட்ட நீர் வண்ண ஓவியங்களை உருவாக்கியுள்ளேன்.

பறவைகளால் சூழப்பட்டு வளர்ந்தது, அவற்றை ஓவியமாக வரையும் ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. ஓவியங்களில் வண்ணங்களைப் பயன்படுத்தி அவற்றின் வடிவங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்.

கண்காட்சி மூலம், இறகுகள் கொண்ட பறவைகளின் இயற்கை அழகைப் பாராட்டவும், பேணி வளர்க்கவும், பாதுகாக்கவும் உத்வேகம் அளிக்கிறது. கலைக்கு இரக்க உணர்வைத் தூண்டும் சக்தி உண்டு. இந்த ஓவியங்கள் மக்களைப் பறவை உலகின் அதிசயங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

157-க்கும் மேற்பட்ட அழிந்துவரும் பறவை இனங்களைப் பதிவு செய்துள்ளேன். எனது படைப்பில் உள்ள ஒவ்வொரு விவரமும் துல்லியமாகவும் தகவல்களை அளிக்கும்.

வன விலங்குகள், ஆர்க்கிடுகள், பட்டாம்பூச்சிகள், பறவைகள் உட்பட பரந்த அளவிலான உயிரினங்களை நுணுக்கமாக ஆவணப்படுத்தி வரைந்துள்ளேன்.

எனது கண்காட்சி மூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகள், நாட்டின் பிற பகுதிகளில் காணப்படும் பறவைகளின் ஓவியங்களை வெளிப்படுத்துகிறேன். ஒவ்வொரு கலைப்படைப்பும், பறவைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் கவனமாகக் கண்காணித்ததன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு விரிவான சித்திரிப்பாகும்.

அவற்றின் நிறம், விகிதாசாரம், தோரணை, ஆண் - பெண் பறவைகளுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகள்கூட அறிவியல் துல்லியத்துடனும் கலைநயத்துடனும் கண்ணால் படம்பிடிக்கப்பட்டு மனதால் சேகரிக்கப்பட்டு வரையப்பட்டுள்ளன.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பல பறவைகள் அழிந்துவரும் இனங்களைச் சேர்ந்தவை. ஒவ்வொரு ஓவியத்துடனும், நீலகிரி சிரிப்பான், சின்ன தேன் சிட்டு, மலை இருவாட்சி, செந்நெற்றி குக்குறுவான், நீலகிரி ஈப்பிடிப்பான், வெண்புருவ புதர்ச் சிட்டு, பழனிச்சிரிப்பான், புள்ளி விரிசி வால், வெள்ளை வயிற்று வால்நாகம், நீலகிரி காட்டுப்புறா, செந்தலை வாத்து போன்ற அழகிய தமிழ்ப்பெயருடன், ஆங்கிலப் பெயர், அறிவியல் பெயர், பரவல், உணவுப் பழக்கவழக்கங்கள், ஆயுள்காலம் மற்றும் பாதுகாப்பு நிலை குறித்த தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பசுமை விருது' , 'நேஷனல் சிம்போசியம் வெஸ்டெர்ன் கார்ட் பெஸ்ட் எக்ஸிபிஷன் விருது' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

வீட்டில் உள்ள பிள்ளைகளின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அவர்கள் கையினால் ஒரு செடி நட்டு பராமரிக்க வேண்டும். தாவரங்கள், பறவைகள், வனவிலங்குகள் இணக்கமாக வாழும்போது வனப்பகுதிகள் செழித்து வளர்கின்றன. ஆனால், காலநிலை மாற்றம், வனங்கள் அழிப்பு, மனித ஆக்கிரமிப்பு, வேட்டையாடுதல், வேளாண்மையில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஆகியவை இந்த நுட்பமான இயற்கைச் சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

நாட்டின் வன உயிர்கள் பாதுகாப்புச் சட்டங்கள், சர்வதேச விதிகள் எனப் பல இருப்பினும், மக்கள் மற்ற உயிர்களையும் மதித்து, அவை வாழ்வதற்கான சம உரிமையைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் இயற்கைச் சமநிலையை உறுதிப்படுத்த முடியும். பறவைகள் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் ஆரம்பகால சுட்டிக் காட்டிகளாகும். அவற்றைக் காப்பாற்றுவது நமது சுற்றுச்சூழல் அமைப்புகளைக் காப்பாற்றுவதற்கான ஒரு படியாகும்'' என்கிறார் சுரேஷ் ராகவன்.

'மனதின் குரல்'

2023 -ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தனது 'மனதின் குரல்' தேசிய வானொலி நிகழ்ச்சியில் சுரேஷ் ராகவனின் பணிகளைக் குறிப்பிட்டுப் பேசியபோது, 'தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது அவரது பங்களிப்புகள்.

அவர் வனவிலங்கு பாதுகாப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். ஓவியங்களின் மூலம், இளம் தலைமுறையினரிடம் ஒருவித வியப்புணர்வையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

அறிவியல் கண்காட்சிகள், கல்விசார் வெளியீடுகள் அல்லது சுற்றுச்சூழல் பிரசாரங்கள் என எதுவாக இருந்தாலும், சுரேஷ் ராகவனின் பணி குரலற்ற உயிரினங்களுக்காகத் தொடர்ந்து பேசுகிறது'' எனக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT