எம். சுஜன்
'முன்பெல்லாம் ஒவ்வொருவரின் உணர்வுகளைப் பிறருக்குச் சொல்லும் குரலாக இருந்தவை கடிதங்கள்தான். தகவல்களை மட்டுமல்லாமல் உணர்வுகளையும் கொண்டு சேர்த்த கடிதங்களை உரியவர்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்தவை அஞ்சல் தலைகள். நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்தும் கருவியான அஞ்சல் தலைகள் வரலாற்று ஆதாரங்களாகவும் மாறியுள்ளன' என்கிறார் ச.விஜயகுமார்.
திருச்சி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத் தலைவரான விஜயகுமார், லால்குடியை பூர்விகமாகக் கொண்டவர். 38 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரக்கணக்கான அஞ்சல் தலைகளைச் சேகரித்துள்ளார். இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்று பங்குச் சந்தை வணிகத்தில் இயங்கி வரும் அவரிடம் பேசியபோது:
'எனது தந்தை பெல் நிறுவனத்தில் பணிபுரிந்ததால், கல்லூரிக் காலம் வரையில் நிறுவனக் குடியிருப்பில் வசித்தேன். எங்கள் குடியிருப்பில் வசித்த மலேசியத் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்மணி, தனது உறவினர்கள் அனுப்பிய கடிதங்களில் இருந்த அஞ்சல் தலைகளை தனியாகச் சேகரித்து என்னிடம் வழங்குவார். இதை ஆர்வமாகக் கொண்டு, நான்காம் வகுப்புப் பயிலும்போது சேகரிக்கத் தொடங்கிய நான், நாற்பத்து ஏழு வயதிலும் தொடர்கிறேன்.
நீர்ப் பறவைகள், புலிகள், பாய்மரக் கப்பல்கள், திருச்சியின் வரலாறு, மறைந்த முதல்வர் எம்ஜிஆர், பிரபலங்கள் கையெழுத்திட்ட அஞ்சல் உறைகள், ஹிந்தி நடிகை மதுபாலா, அஞ்சல் தலைகள் வாயிலாக அமெரிக்கா - இந்திய வான்வெளிப் போக்குவரத்து (சுதந்திரத்துக்கு முற்பட்டகாலம்) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பிரத்யேகமாகக் கண்காட்சிகள் நடத்தும் அளவுக்கு அஞ்சல் தலைகளைச் சேகரித்துள்ளேன்.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிகழ்வுகளில் கண்காட்சிகளை நடத்தி வருகிறேன். 2004-ஆம் ஆண்டில் திருச்சி மண்டல அளவிலான போட்டியில் எனது கண்காட்சிக்கு முதல் பரிசு கிடைத்தது. தொடர்ச்சியாக, அஞ்சல் துறை, தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம், அமெரிக்காவின் சிகாகோ பெக்ஸ் கண்காட்சி, ஹங்கேரியில் நடைபெற்ற உலக அளவிலான அஞ்சல்தலை கண்காட்சி உள்ளிட்டவற்றில் பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளேன்.
தமிழ்நாடு அரசின் கலைவளர்மணி விருதையும் பெற்றுள்ளேன். காகிதங்களைக் கொண்டு கலைப்பொருள்களை உருவாக்கும் கொலாஜ் ஓவியக் கலைஞராகவும் உள்ளேன். இந்தக் கலையைப் பிறருக்குக் கற்பித்தும் வருகிறேன். பணத்தாள்கள் சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளேன்.
மகாத்மா காந்தியின் தனிச்செயலர் கல்யாணத்தின் நட்பு கிடைத்தது. இதனால் காந்தியடிகள் பெயரில் வந்த அஞ்சல் உறைகளும், கடிதங்களும் என் வசமாகியுள்ளன. இதுமட்டுமல்லாது, திரைப்பிரபலங்கள், இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மத்திய, மாநில அரசுகளின் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள், தலைவர்கள் எனப் பலரையும் இவருடன் இணைக்கச் செய்தது இந்த அஞ்சல்தலைதான்.' என்கிறார் விஜயகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.