மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்! - கல்லாடர் ஐவர்!
கல்லாடர் என்ற பெயரில் புலவர் பலர் இருந்துள்ளனர். சங்க நூல்களில் 14 பாடல்களைப் பாடிய கல்லாடர், கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவர். பாட்டியல் நூல்களில் காணப்படும் கல்லாடர், கி.பி. 9-ஆம் நூற்றாண்டினர
கல்லாடர் என்ற பெயரில் புலவர் பலர் இருந்துள்ளனர். சங்க நூல்களில் 14 பாடல்களைப் பாடிய கல்லாடர், கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவர். பாட்டியல் நூல்களில் காணப்படும் கல்லாடர், கி.பி. 9-ஆம் நூற்றாண்டினர். திருக்கண்ணப்பர் திருமறம் என்ற நூலைப் பாடிய கல்லாட தேவநாயனார், கி.பி. 10-ஆம் நூற்றாண்டினர். "கல்லாடம்' என்ற பெயரில் வழங்கப்படுகின்ற சிறந்த சைவ சமய நூலை எழுதிய கல்லாடர், கி.பி. 10-13-ஆம் நூற்றாண்டினராகக் குறிக்கப்படுகிறார். இலக்கண உரையாசிரியர் கல்லாடர், கி.பி. 15-ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படுகிறார்.
கல்லாடரின் "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' என்ற நூலை 11-ஆம் திருமுறையில் அமைத்த நம்பியாண்டார் நம்பியின் காலம், கி.பி. 1000-1040 எனக் குறிக்கப்படுவதால், இக்கல்லாடரின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.
"கல்லாடர்' என்ற புலவரால் இயற்றப்பட்டது "கல்லாடம்' என்ற சைவசமய நூல். "கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே', "கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே' என்ற முதுமொழிகள் கல்லாடத்தின் அருமையைக் கூறுகின்றன.
Advertisement
""கல்லாடரின் காலத்தை வரையறுப்பதற்கு இரண்டு குறிப்புகள் உதவுகின்றன. ஒன்று, இவர் மாணிக்கவாசகருக்காகப் பெருமான் மதுரையில் மண்சுமந்த திருவிளையாடல் முதலியவற்றைக் கூறுவது. மாணிக்கவாசகரின் காலம் 9-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது பலரும் ஒப்புக்கொண்ட செய்தி. எனவே, கல்லாடர் இக்காலத்துக்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. இரண்டாவது, நம்பியாண்டார் நம்பி கல்லாடத்தைத் தொகுக்காமையால் (11-ம் திருமுறையில்), நம்பியாண்டார் காலத்தின் இறுதி எல்லையாகிய கி.பி. 1040-க்குக் கல்லாடம் பிற்பட்டதாக இருக்கிறது. அதனால், கல்லாடர் காலம் கி.பி. 1040-க்குப் பிறகு உள்ள காலமாகும் என்று குறிப்பிட்டு கி.பி. 11-ஆம் நூற்றாண்டு'' என தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் மு.அருணாசலம் குறித்துள்ளார் (ப.16).
நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய தொல்லுரையாசிரியர் பலராலும் அன்னோர் உரைகளில் இக்கல்லாடச் செய்யுள்கள் எடுத்தாளப்படவில்லை. எனவே, கல்லாடர் 13-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு விளங்கியவராதல் வேண்டும் என்று டி.வி.சதாசிவப் பண்டாரத்தார், "கல்லாடமும் அதன் காலமும்' என்ற ஆய்வுக் கட்டுரையில் குறித்துள்ளார் (செந்தமிழ்-டிச.1998). எனவே, கால ஆய்வாளர்கள் "கல்லாடம்' இயற்றிய கல்லாடரின் காலத்தை கி.பி. 10-லிருந்து 13-வரை என்று வரையறுக்கின்றனர்.