தமிழ்மணி

தலைமக்களின் மனநிலை

சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களும் அவர்களது உணர்வுகளும் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எல்லாப் பாத்திரங்களிலுமே இத் தன்மையைக் காணலா

முனைவர் அ. செல்வராசு

சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களும் அவர்களது உணர்வுகளும் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எல்லாப் பாத்திரங்களிலுமே இத் தன்மையைக் காணலாம். இந்த அடிப்படையில் குறிஞ்சித் திணைக்குரிய பாடல்கள் இரண்டில், தலைவன் மற்றும் தலைவியின் மனநிலையை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் பாடலாசிரியர்.

அப்பொழுதுதான் அவன், அவளை முதன்முதலாகப் பார்க்கிறான். ""கொல்லிப்பாவை போன்ற பெண்ணே, கூற்றாக வந்து ஆடவர்களைத் துன்புறுத்த வடிவம் எடுத்துள்ளாயா? மான் போன்ற உன் பார்வையும், மயில் போன்ற உன் சாயலும், மென்மையான உன் தோள்களும் கண்டவர்களை வருத்தும் என்பது உனக்குப் புரியாதா?'' என்று வினவுகிறான்.

அவள் எவ்வித மறுமொழியும் கூறவில்லை. அவள், அவனை விரும்புவது போன்றதற்கான எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதனால் வியப்படைந்த அவன், ""பெண்ணே உன்மீதும் தவறில்லை; உன்னை உலவவிட்ட உன் சுற்றத்தார் மீதும் தவறில்லை; மதம் கொண்ட யானை நீர்த்துறைக்கு வருகிறது என்பதைப் பறையறைந்து எச்சரிக்காத அரசனே தவறுடையன்'' என்கிறான்.

""நீயும் தவறில்லை; நின்னைப் புறங்கடைப்

போதரவிட்ட நுமரும் தவறிலர்

நிறைஅழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப்

பறை அறைந்தல்லது செல்லற்க என்னா

இறையே தவறுடையான்''

(கு.கலி.20)

என்பது அவனது கூற்று.

அகநானூற்றில் இடம் பெற்ற தலைவி கூற்றுப்பாடல் ஒன்று, தலைவி, தோழியிடம் பேசுவதாக அமைந்துள்ளது.

""இருளைக் கிழிப்பதுபோல் வானம் மின்னி, மழைபொழியும் நள்ளிரவு. பன்றிகள் புற்றாஞ்சோற்றுக்காக புற்றினை அடிக்கின்றன. முதலைகள் ஆங்காங்கு திரிகின்றன. மழை வெள்ளம் கற்களில் மோதி உடைந்து ஓடுகிறது. பெண் புலிக்காக, ஆண் புலி யானையைக் கொன்று, அதனை இழுத்துவரும்}யாரும் நடந்து பழக்கப்படாத வழி. அப்படிப்பட்ட வழியில், வேல் ஒன்றை மட்டுமே துணையாகக் கொண்டு இரவில் நம்மைப் பார்க்க வந்திருக்கும் தலைவன், கொடியவன் அல்லன். எனக்காக இரவுக்குறியிடம் சுட்டி, அவனை வரச்சொன்ன நீயும் தவறுடையவள் அல்லள். எனக்காக, உனக்கு இன்னல் உண்டாக்கிய நானே தவறுடையள்'' என்கிறாள் தலைவி.

""அருள்புரி நெஞ்சமொ டெஃகு துணையாக

வந்தோன் கொடியனும் அல்லன், தந்த

நீ தவறுடையையு மல்லை, நின்வயின்

ஆனா அரும்படச் செய்த

யானே தோழி தவறுடையேனே''  

(பா.75)

என்பது அவளது கூற்று.

உண்மையில், திருமணத்திற்கு ஏற்பாடு செய்யாமல் இருக்கும் தலைவன்தான் தவறுடையவன். அல்லது அவனைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தாத தோழியும் தவறுடையவள்தான். ஆனால், அவர்கள் மீது குற்றம் சுமத்த விரும்பாத தலைவி, தன்னையே தவறுடையவளாகக் காட்டிக்கொள்கிறாள். என்னே! சங்ககாலத் தலைமக்களின் மனநிலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயர்வில் நிறைவடைந்த பங்குச் சந்தை! ஏற்றத்தில் ஐடி, பார்மா பங்குகள்!

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விரும்பினால்... ரோஹித், கோலி செய்ய வேண்டியதென்ன?

உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இஸ்ரேல் வீரர்களுக்குத் தடை!

அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

கரூர் பலி: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் கைது!

SCROLL FOR NEXT