முகப்பு
தமிழ்மணி

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!

அனுமன் தன்னைத் "தூதன்' என்றது சரியே! கம்பகாதையில், ஒற்றனாக இலங்கை செல்லும் அனுமன், ராவணனிடம் தன்னை, "ராம தூதன்' என்று அறிமுகப்படுத்திக் கொள்வது சரியா? அனுமன், தன் மன்னன் சுக்ரீவன் ஆணையால் இலங்கையில் ச

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:49 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:19 PM

அனுமன் தன்னைத்

"தூதன்' என்றது சரியே!

கம்பகாதையில், ஒற்றனாக இலங்கை செல்லும்

Advertisement

அனுமன், ராவணனிடம் தன்னை, "ராம தூதன்' என்று

அறிமுகப்படுத்திக் கொள்வது சரியா?

அனுமன், தன் மன்னன் சுக்ரீவன் ஆணையால் இலங்கையில் சிறைப்பட்டிருக்கும் சீதையின் நிலையை அறிந்துவர அனுப்பப்பட்டவன். ராமன் கூறிய ஒரு சில அடையாளச் செய்திகளைச் சொல்லி, அவள் அங்கு இருக்கிறாளா? எப்படி இருக்கிறாள்? என்று பார்த்துவர அனுப்பப்பட்டவன். இதுதான் அவனுக்கு இட்ட பணி, அரசியல் சார்ந்த எந்த ஒற்று வேலைக்கும் அவன் அனுப்பப்படவில்லை. என்றாலும், அனுமன் ஓரிடத்தில் மட்டுமல்ல, மூன்று இடங்களில் தன்னைத் தூதுவனாகத்தான் கூறிக்கொள்கிறான்.

ராவணனைக் கண்ட அனுமன் முதலில் அவனை அழித்தொழிக்கத்தான் எண்ணுகிறான். ஆனால், அது தனக்கிடப்பட்ட பணி அன்று என்றும், அதனால் காலதாமதம்தான் ஆகும் என்றும், ஒருவரை ஒருவர் வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னர்,

""ஒன்று ஊக்கி, ஒன்று இழைத்தல்

உணர்வுடைமைக்கு உரித்து அன்றால்;

பின் தூக்கின், இது சாலப்பிழை

பயக்கும் எனப் பெயர்ந்தான்'' (5055)

""ஆதலான் அமர்த்தொழில் அழகிற்று அன்று;

அருந்தூதனாம் தன்மையே தூய்து'' என்று உன்னினான்

(பிணிவீட்டுப் படலம் 5869)

எனவே, முதலில் தன்னைத்தானே தூதுவன் நிலையில் நிறுத்திப் பார்த்துக்கொள்கிறான்.

சீதையிடம் முதலில், ""அண்டர் நாயகன் தூதன் யான் எனத் தொண்டைவாய் மயிலினைத் தொழுது சொல்லினான்'' (உருக்காட்டுப் படலம் 22-5429) இங்கே சீதையிடம் தன்னை ராமதூதன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். இது சரி.

அடுத்து ராவணனிடம், ""அல்லி அம் கமலமே அனைய செங்கண் ஓர் வில்லிதன் தூதன் யான்; இலங்கை மேயினேன்'' என்றான். (பிணிவீட்டுப் படலம் 74-5878) இங்கே ராவணனிடமும் தன்னை ராமதூதன் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறான். சுக்ரீவனால் ஆணையிடப்பட்டுத்தான் சென்றான். அவ்வாறு செல்பவனுக்குச் சில அடையாளங்களை ராமன் சொல்லி அனுப்பினான், அவன் எப்படி ராமதூதன் ஆவான்?

பின்னர், தொடர்ந்து ராவணனிடம் உரையாடும்போது, "பொற்பாதம் ஏத்துவார் பிறப்பறுப்பான் அன்னவற்கு அடிமை செய்வேன். நாமமும் அனுமன் என்பேன்''(5885) என்று, தான் அவனுக்கு அடிமை என்பதைத் தெளிவுபடுத்தி, பின்னர் தன் படைக்குத் தலைமை தாங்கி வந்த வாலியின் மகன் அங்கதன் தூதன் என்கிறான்.

""நன்னுதல் தன்னைத் தேடி நாற்பெருந்திசையும் போந்த

மன்னரில் தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி

தன்மகன், அவன்தன் தூதன் வந்தனென், தனியேன்''

(பிணிவீட்டுப் படலம் 5886)

என்கிறான். இது எப்படிச் சரியாகும்? எனவே, சுக்ரீவனால் அனுப்பப்பட்ட ஒற்றன்-தூதன் அவ்வளவே. அவன் தன்னை ராமதூதன் என்றதும், வாலி தன் மகன் அவன் தன்தூதன் என்றதும், ராவணனுக்குச் சற்று அச்சமேற்படுத்தும் பொருட்டுத் தன்னைத்தானே தூதனாகக் கூறிக்கொண்டான் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. அனுமன் "சொல்லின் செல்வன்' அல்லவா? எனவே, ""நன்மையும் தீமையும் நாடி, நலம் புரிந்த தன்மையால்'' அவன் தன்னை ராமதூதன் என்றே கூறிக்கொள்கிறான் என்பது தெளிவு.

""செய்வானை நாடி, வினை நாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்'' (616)

என்பது திருக்குறள். அதற்கேற்ப, அனுமன் செயல் அமைந்துள்ளது என்றே கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.