தமிழ்மணி

நவீன இலக்கியப் படைப்பாளி - சு.ரா.

நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பாளர்களுள் ஒருவர் சு.ரா. என்று அழைக்கப்படும் சுந்தர ராமசாமி. இவருடைய ஜே.ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய நாவல்களும்

பரிபூர்ணா

நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பாளர்களுள் ஒருவர் சு.ரா. என்று அழைக்கப்படும் சுந்தர ராமசாமி. இவருடைய ஜே.ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை, குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ஆகிய நாவல்களும், காகங்கள், பல்லக்குத் தூக்கிகள் ஆகிய சிறுகதைகளும், நடுநிசி நாய்கள், 107 கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுப்புக்களும் குறிப்பிடத்தக்கவை.

 அவரை மறந்தாலும், அவருடைய படைப்புகளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க நியாயமில்லை. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் எனப் படைப்பிலக்கியத்துக்கு இவரது பங்களிப்பு சற்று ஆழமானது - அதிகமானது. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமையும் வாய்க்கப் பெற்றவர் சு.ரா. "பசுவய்யா' என்ற புனைபெயரிலும் எழுதினார்.

 நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள "தழுவிய மகாதேவர் கோவில்' என்ற கிராமத்தில் 1931-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி, சுந்தரம்-சுசீலா தம்பதிக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே தொ.மு.சி.ரகுநாதனாலும், அவருடைய மார்க்ஸிய தத்துவங்களாலும் ஈர்க்கப்பட்டார். பிறகு தொ.மு.சி. ஆசிரியராக இருந்த "சாந்தி' என்ற பத்திரிகையில் எழுதத்தொடங்கினார்.

 1954-ஆம் ஆண்டு நெல்லை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை போட்டியில், சு.ரா.வின் "தண்ணீர்' சிறுகதை தேர்வுசெய்யப்பட்டு, பின் "சாந்தி' இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து "ஒரு புளியமரத்தின் கதை' "சரஸ்வதி' இதழில் வெளிவந்தது.

 "காலச்சுவடு' என்ற பெயரில் காலாண்டிதழ் ஒன்றை ஜனவரி 1988-இல் சு.ரா. தொடங்கினார்.

 ""தமிழ்க் கலாசாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ்ச் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்றும் இருந்து வருகிறேன்'' என்று காலச்சுவடு ஆண்டுமலரில் (91) கூறியிருக்கிறார்.

 ""காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன் முறையாகக்கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப்போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்'' என்கிறது முதல் இதழின் தலையங்கம்.

 சு.ரா.வை ஆசிரியராகக்கொண்டு முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக வெளிவந்தது. பின்னர் இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்தது. 1991-இல் சிறப்பிதழுடன் காலச்சுவடு நின்றுபோனது. ஜனவரி 92-இல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார். அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது. காலச்சுவடு இதழ் சார்பில் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகத்தின் முதல் வெளியீடு சு.ரா.வின் "107 கவிதைகள்'.

 மலையாள இலக்கியத்திலும் புலமை பெற்றிருந்த சு.ரா., தகழி சிவசங்கர பிள்ளை எழுதிய செம்மீன், தோட்டியின் மகன் ஆகியவற்றை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். "தோட்டியின் மகன்' புதினம் "சரஸ்வதி' இதழில் தொடராக வெளிவந்தது.

 ""எழுத்தாளர்கள் தங்கள் அறச் சாரங்களை இழந்துகொண்டிருக்கிறார்கள். குறுக்கு வழியில் வெற்றி என்பதுதான் இன்றைய ஸ்லோகம். புகழ் ஒளியில் சதா இருந்துகொண்டிருக்க வேண்டும். பரிசுகள் வந்து சேருபவை அல்ல; வாங்கப்படுபவை. அரசியல் சமரசங்களின் மூலம்தான் எழுத்தாளன் நிகழ்கால வெற்றிகளைப் பெறமுடியும். இவ்வகையான சிந்தனைகள்தான் தலைவிரித்தாடுகின்றன. இவற்றிற்கு நேர் எதிரான மனநிலையில் வாழ்ந்தவர் ந.பிச்சமூர்த்தி. அவரிடமிருந்த கல்ச்சர் ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இன்று அவசரத் தேவையாக இருக்கிறது. தாழ்ந்துபோவது அல்ல; தன்மானத்தை விட்டுக் கொடுக்காத பிடிவாதம்தான் எழுத்தாளனுக்குத் தேவை. போராட்டம்தான் அவன் வழியே தவிர சமரசம் அல்ல''

 என்றும்,

 ""படைப்பில் புறத்தைப் பற்றிய பேச்சு எல்லாம் அகத்தை ஊடுருவத்தான். தோற்றம் சாரத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். எதார்த்தவாதம் என்பது ஒரு தளத்தின் பொதுப்பெயரே தவிர, ஒரு படைப்பின் குணத்தைத் தீர்மானிக்கக்கூடியது அல்ல. ஓர் எதார்த்தத் தளத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து நம்மை ஆட்கொள்ளும்போது அதே தளத்தைச் சேர்ந்த மற்றொன்று மிகுந்த சலிப்பைத் தருகிறது. ஊடுருவல்தான் முக்கியம். எதார்த்தம் சார்ந்த ஊடுருவல் தமிழ் வாழ்வின் ஸ்திதிக்கு இன்று பொருந்தி வருகிறது. படைப்பாளியின் அனுபவம் சார்ந்த பார்வைதான் வலிமையாக இருக்க வேண்டும். சகல பாதிப்புகளும் அந்த அனுபவத்துக்குள் இருக்கின்றன.''

 இவ்வாறு எதார்த்தவாதம் பற்றியும், இன்றைய எழுத்தாளர்களின் நிலைமை பற்றியும் பதிவு (நேர்காணலில்) செய்துள்ளார் சு.ரா.

 மார்க்ஸிய சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்ட சு.ரா.வுக்குப் பின்னாளில் ஒரு தொய்வு இருந்திருக்கிறது. அதுபற்றி, ""மார்க்ஸியம் ஒரு தத்துவம்தான், சமய நெறி அல்ல. தத்துவங்கள் காலத்தின் போக்குக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய இடம் தருபவை. அந்த வாசலை இங்கு சாத்திவிட்டார்கள். குறுகிய நோக்கங்களுக்காக தத்துவங்கள் பயன்படுத்தப்படும்போது அவை இறுகி, அதன் சாராம்சத்தை இழந்து அடையாளங்களாக மாறிவிடுகின்றன. அடையாளங்கள் சார்ந்து நம்பிக்கை மதிப்பிடப்படுகிறது. இந்த விஷயங்களைத்தான் நான் "ஜே.ஜே. சில குறிப்பு'களில் சொல்ல முயல்கிறேன். தத்துவத்துடன் நான் நேரடியாக மோதவில்லை. மிகப்பெரிய நாகரிகத்தை உருவாக்க முற்படுகிறவர்கள் கருத்துச் சுதந்திரம், ஜனநாயகப் பண்பு ஆகியவற்றில்கூட நம்பிக்கையற்ற அதிகாரிகளாக மாறுவதுதான் பிரச்னை. எல்லா அரசியல் கட்சிகளிலும், சமய அமைப்புகளிலும் இந்த நிலை இருக்கிறது'' என்கிறார்.

 2005-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி சு.ரா. காலமானார்.

 பசுவய்யா என்ற புனைப்பெயரில் சு.ரா. எழுதிய மரணம் பற்றிய - "நடுவழியில் மறித்த வயோதிகம்' என்ற தலைப்பிலான கவிதை, படிப்போர் நெஞ்சைத் தொடும் - மரணத்தின் நெஞ்சைச் சுடும்!

 வயோதிகம் மறித்தது நடுவழியில்

 நான் காதலைத் தேடிச் சென்றபொழுது...

 "விடு என்னை

 இப்போதுதான் உணர்ந்துகொண்டேன்

 காதலின் அருமையை' என்று

 அதன் காலில் விழுந்து கெஞ்சினேன்.

 "சற்று முன்தான் நான் வயோதிகம்

 இப்போது மரணம்' என்று

 என்னை இறுகத் தழுவிக் கொண்டது

 அது!

 நவீன தமிழிலக்கியப் பரப்பில் பரந்து விரிந்து, செழித்து வளர்ந்து, விழுதுகள் ஊன்றித் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டவர் சுந்தர ராமசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT