தமிழ்மணி

கம்ப சித்திரத்தில் "யுக சந்தி'!

கவிச் சக்ரவர்த்தி கம்பர், தாம் இயற்றிய இராமாயணத்தில், சமய மேம்பாடு, சமுதாய மேம்பாடு, பண்பாட்டுணர்வு ஆகியவை பற்றிச் சிந்திக்க வைத்துள்ளார். அந்த நோக்கில், "யுக சந்தி' பற்றிச் சிறிது ஆராயலாம். நிலவுலகை

கே.சுப்பிரமணியன்

கவிச் சக்ரவர்த்தி கம்பர், தாம் இயற்றிய இராமாயணத்தில், சமய மேம்பாடு, சமுதாய மேம்பாடு, பண்பாட்டுணர்வு ஆகியவை பற்றிச் சிந்திக்க வைத்துள்ளார். அந்த நோக்கில், "யுக சந்தி' பற்றிச் சிறிது ஆராயலாம்.

நிலவுலகை இயக்குகின்ற இயற்கை அன்னை இடம், காலம், இவற்றாலான சூழ்நிலை ஆகியவற்றைக்கொண்டு ஒருவகைச் சித்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். இங்கு "காலம்' பற்றி மட்டுமே ஓரளவு காண்போம்.

நம் வாழ்க்கை வசதிக்காக "நொடி' என்ற சிறு பகுப்பிலிருந்து, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு என விரிவுபடுத்திக் கணக்கிட்டுக் கொள்கிறோம். மேலும், "பிரபவ' தொடங்கி "அட்சய' முடிய அறுபது ஆண்டுகளைச் சுழற்சி முறையில் ஆயுள் கணக்கையும் நிர்ணயித்துக் கொள்கிறோம். இந்நிலையில், கலியுகத்தில் வாழ்கின்ற நாம், யுகங்கள் - கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகியவையும் சுழற்சி முறையில் உள்ளதைப் பலர் அறிந்திருப்பர். இதனை உணர்ந்துகொண்டு சமயச் சார்புடன் வாழ்வதற்காகவே இதிகாசங்கள், புராணங்கள் முதலியவற்றை முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.

திரேதாயுகத்தில் நடைபெற்ற "இராமகாதை'யை ஏனைய யுகங்களுடன் தொடர்புபடுத்துவது சாத்தியமா என யாரும் வினவலாம்; அதுவும் சாத்தியமே என்பது கம்ப சித்திரத்தால் நன்கு தெரியவரும்.

கிருதயுகத்தில் நடைபெற்ற திருமாலின் அவதாரங்களுள் "நரசிம்ம அவதாரம்' பக்தி நோக்கில் மிகவும் சிந்திக்கத்தக்கது. அதனை மையமிட்டு, இராமாயணத்தில் "இரணியன் வதைப் படலம்' அமைத்துள்ளது கம்பரின்

கைவண்ணமாகும்.

திரேதாயுகத்திற்கு முந்தியதாகிய கிருதயுக நிகழ்ச்சியைப் புலப்படுத்திய கம்பர், திரேதாயுகத்திற்கு அடுத்துவரும் துவாபரயுகம் (நிகழ்ச்சி) பற்றிக் கூறவே வழியில்லை. ஆனால், வழியுண்டாக்கிக் கொள்கிறார்; அதுதான் கம்ப

சித்திரம்!

பாலகாண்டம் - ஆற்றுப்படலத்தில், திருமாலின் கண்ணன் அவதாரத்தை ஆற்று நீர்ப்போக்கு வாயிலாகக் கூறமுற்படுவது மிகவும் வியப்பை உண்டாக்கும். கம்பர் இக்காட்சியை, ""செறிநறுந் தயிரும் பாலும்'' (ஆற்றுப்படலம் பா-15) என்ற பாடல் வழி வருணிக்கையில், "கிருஷ்ணலீலை' நினைவுக்கு வரும் வண்ணம் பாடிக் காட்டியிருப்பது சிந்தைக்கினியது.

நான்கு யுகங்களில் எஞ்சியுள்ள கலியுகத்தையும் மிக நேர்த்தியாகக் கம்பர் இணைத்து வியப்பூட்டுகிறார். கம்பர் தம்மை ஆவலுடன் ஆதரித்த சடையப்ப வள்ளலை இயைபுடன் நன்றிக் கடமையுடன் நினைவிற் கொள்கிறார்.

இராமபிரானுக்கு முடிசூட்டு விழா நடைபெறுகையில், வேளாளராகிய சடையப்ப வள்ளலின் வம்ச முன்னோர்கள் அரசமுடியை எடுத்துக்கொடுக்க, அதனை வாங்கி வசிட்ட முனிவர் ராமனுக்கு முடிசூட்டினார்; இதனை யுத்த காண்டம் முடிசூட்டுப் படலத்தில், ""அரியணை அனுமன் தாங்க'' எனவரும் பாடலால் அறியலாம். தமிழகத்தில் பிறந்த சடையப்ப வள்ளல், எவ்வளவோ காலத்திற்கு முந்திய இராமன் முடிசூட்டு விழாவுடன் தொடர்புபடுத்தப் பெற்றுள்ளமையும், கோசல நாட்டுடன் தொடர்புபடுத்தப் பெற்றமையும் காலமும் தேசமும் கடந்த ஒருமைப்பாட்டு உணர்வேயாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி மோசடி: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT