தமயந்தியின் விசும்பல்!
பாரடி வானத்தை! யாரடி கூறியது இவை குறுநகை விண்மீன்கள் என்று; கொப்புளமடி கொப்புளம்!'' என்று ஆற்றாமையால் அரற்றினாள் ஆரணங்கு தமயந்தி. ""செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள் தன்மனத்தை வாங்கும் தட
பாரடி வானத்தை! யாரடி கூறியது இவை குறுநகை விண்மீன்கள் என்று; கொப்புளமடி கொப்புளம்!'' என்று ஆற்றாமையால் அரற்றினாள் ஆரணங்கு தமயந்தி.
""செம்மனத்தான் தண்ணளியான்
செங்கோலான் மங்கையர்கள்
தன்மனத்தை வாங்கும் தடந்தோளான்''
என்று நளனின் வளமான பேரெழிலை செங்கால் அன்னத்தின் மூலம் செவிமடுத்த செந்தேன் மொழியாள் தமயந்திக்கு,
""உள்ளம்போய் நாண்போய்
உரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம் போய் வேகின்ற
மென்தளிர் போல்''
ஆகிவிட்ட தமயந்திக்கு, விண்மீன்கள் கொப்புளங்கள் போலத் தெரிந்தனவாம்.
""கொப்புளம் கொங்கைமீர்!
திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட
குளிர்வானை - இப்போதும்
மீன்பொதித்து நின்ற
விசும்பென்பது என் கொலோ!
தேன்பொதிந்த வாயால் தெரிந்து''
"நீணிலா நெருப்புச் சுட்டு கொப்புளங்கள் கொண்ட வானத்தை விண்மீன்கள் நிறைந்த விசும்பு என்கிறீரே, இது நியாயமா தோழியரே!''
Advertisement
என்று விசும்புகிறாள் தமயந்தி.
தரை மாந்தர் யாவர்க்கும் தண்ணிலவாய் தெரிந்த வெண்ணிலா, தமயந்திக்கு மட்டும் தழல் நிலவாய் தகிக்கிறது. குறுநகை விண்மீன்கள் எல்லாம் கொப்புளங்களாய்த் தெரிந்தன சிறுநகையும் இழந்த தமயந்திக்கு.
இதே கற்பனை கவிச்சக்ரவர்த்தி கம்பர் பார்வையில் புராணக்கதையோடு இணைந்த கோபமாகவும், பாவேந்தர் பாரதிதாசனுக்கு அவர் காலத்திற்கேற்ப சமூக சிந்தனையாகவும் இருந்திருக்கிறது. ஆனால் புலவர் புகழேந்தியோ, காவிய காதலுக்குரிய கற்பனையோடு பார்த்திருக்கிறார். "விண்மீன்கள் கொப்புளங்களாக'த் தோன்றியன என்ற கவிஞர்களின் கற்பனை ஒன்றுதான்; ஆனால் கவிஞர்கள்தான் வேறு வேறு!