முகப்பு
தமிழ்மணி

கபிலரும் கம்பரும்

பழந்தமிழ் இலக்கியம் மிகைக் கற்பனைக்கு இடம் தருவதில்லை. உயர்வு நவிற்சி என்பதும் ஓர் எல்லைக்கு உட்பட்டே வரும்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:11 PM
பகிர்:

பழந்தமிழ் இலக்கியம் மிகைக் கற்பனைக்கு இடம் தருவதில்லை. உயர்வு நவிற்சி என்பதும் ஓர் எல்லைக்கு உட்பட்டே வரும். உலக வழக்கை புனையும் முறையால் நாடக வழக்காக்குவது சங்க இலக்கியம். இளம்பூரணர் உலக வழக்காவது, "உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்துவருவது' என்பார். அதாவது, உலகில் நடப்பதையும் நடக்கக் கூடியதையும் புனைவது அது.

÷நாடக வழக்கு என்பது, கற்பனையின் மூலம் அழகுபடுத்தித் திட்டமிட்டுப் புனைவது. இளம்பூரணர் இதனை ""சிறப்புடையன, சுவையுடையன எல்லாம் ஒருவழி வந்ததாகத் தொகுத்துக் கூறுதல்'' என்பார்.

÷இளவேனிற் காலத்தில் மாமரம் பூப்பதும் குயில் கூவுவதும் சிறப்பு. கார்காலத்தில் மயில் ஆடும்போதுதான் மிகுந்த அழகுடன் காணப்படும். உழுந்து முற்றினால் பனிக்காலம் ஆகும். இங்ஙனம் காலம், பருவம், பொழுது இவற்றைப் பாடுவது அதன் சிறப்பு.

Advertisement

காட்டிலே ஒரு நாட்டிய அரங்கு

÷மலைமீது மூங்கில்கள் உள்ளன. அவற்றில் வண்டுகள் போட்ட துளையில், மேல்காற்று வீச, அது புல்லாங்குழலாய் இசைக்கிறது. அருவி மலையிலிருந்து இனிய ஓசையுடன் சேர்ந்து விழுவது, முழவுத் தொகுதி ஒலிப்பதுபோல் உளது. மான்கள் கூட்டம் கூட்டமாக ஒலிப்பது தூம்பு இசைப்பதுபோல உளது. மலைச்சாரலிலே வண்டுகள் ரீங்காரம் பாடுவது யாழிசைபோல் உளது. இந்த "இன்பல் இமிழிசை' (ஆர்ச்செஸ்ட்ரா) கேட்டு, மகிழ்ந்த அவையோர்போல் மந்திகள் மருண்டு பார்க்கின்றன. மூங்கில்கள் வளரும் மலை அடுக்கத்தில் அசைந்தாடும் மயில், அரங்கம் ஏறி ஆடும் விறலியைப்போல் காட்சியளிக்கிறது.

÷இவ்வாறு ""ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின், கோடை அவ்வளி குழலிசை யாக'' எனத் தொடங்கி, ""கழைவளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில், நனவுப் புகு விறலியில் தோன்றும் நாடன்'' என இக் காட்சி கபிலரால் புனையப்பட்டுள்ளது (அகம்-82). இது, அன்று இருந்த நாடக அரங்குகளையும் நமக்கு நினைப்பூட்டுகிறது.

÷மயில் ஆடும் இக் காட்சியில் குயில் கூவுவது பின்னணி இசையாக வரக்கூடாது. ஏனெனில், குயில் கூவுவது இளவேனிற்கு உரியது. இங்கே புனையப்படுவது கார்காலம். அதனால் இயற்கையுடன் ஒன்றி வளர்ந்த புலவராதலின், பின்னணி இசையாக வண்டுகளைப் பாட வைத்துவிட்டார் கபிலர்.

÷இதனைப் போல, கம்பர் மருதநில இளவரசியைக் கற்பனை செய்கிறார்.

""தண்டலை மயில்கள் ஆடத்

தாமரை விளக்கம் தாங்கக்

கொண்டல்கள் முழவின் ஏங்கக்

குவளைக்கண் விழித்து நோக்கத்

தெண்திரை எழினி காட்டத்

தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட

மருதம் வீற்றிருக்கும் மாதோ!''

கம்பர் காலத்தில் கால மயக்கம் பெருகிவிட்டது. ஆயினும் மரபு மாறாது பாடும், "கல்வியிற் சிறந்த கம்பர்' மயிலாடும் காட்சியில் குயிலை நுழையவிடவில்லை. கபிலரைப் போல், வண்டுகளை யாழிசைபோல் இசைக்கவிடுகிறார்.

÷கபிலர் காலம்போல், கம்பர் பாடியிருப்பது "சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி'யினைக் கற்பனை செய்து பாடிய கம்பரை "கவிச்சக்கரவர்த்தி' என நம்மைச் சொல்ல வைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments