கற்புடைய பெண்கள் கணவனைத் தொழுதெழல் வேண்டுமா?
திருக்குறளில், சிக்கலுடையன எனக் கருதப்படும் குறள்களில் ஒன்று, ""தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' - என்பது.
திருக்குறளில், சிக்கலுடையன எனக் கருதப்படும் குறள்களில் ஒன்று, ""தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'' - என்பது.
முழுமுதற் பரம்பொருள் "கடவுள்' எனப்படுவார். மற்றையன - ஐம்பெரும் பூதங்கள், முழுமதி, ஞாயிறு, மாந்தருள் தெய்வம் என எல்லாம் "தெய்வம்' எனப்படும்.
சங்க காலத்தில் "பிறை தொழுதல்' என்பது மகளிரிடையே பெருவழக்காக இருந்துளது. பிறையும் ஒரு தெய்வமே.
Advertisement
""ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை (அகம்.239)
புல்லென் மாலை - முன்னிரவு. இவ்வாறு வரும் சில பாடல்கள் வழி இதை ஒரு நம்பிக்கைச் சடங்காக, அன்றைய சமுதாயம் கருதியது என எண்ண இடமுளது. நாட்டாரையா உரை விளக்கத்தில், ""வதுவையாகாத கன்னியர் பிறை தொழுதல் மரபு என்க'' என எழுதுகின்றார். நல்ல கணவன் வாய்க்க வேண்டுமென்பதற்கே நோன்பிருந்து, பிறை தொழுதுள்ளனர். நல்ல கணவன் வாய்த்துவிட்டால், அந் நோன்பு கருதி, பிறைதொழமாட்டார்கள்.
காதல் என்பது முதலில் காதலர்க்கு மட்டுமே உரியதாகும். தோழியும் தலைவியின் காதலை அறியப் பல உத்திகளைக் கையாள்வாள். அதில் "பிறை தொழுகென்றல்' என்பது ஒன்று. தோழி, தலைவியை "வா! பிறைதொழுவோம்' என அழைப்பாள். தலைவியோ ஒருவனைக் காதலித்துவிட்டதால், "இனி நல்ல கணவன் வாய்க்க' எனப் பிறைதொழ விரும்பமாட்டாள். அவள் பிறைதொழ வராமை கொண்டு, தோழி தலைவியின் களவுக் காதலை அறிந்துகொள்வாள்.
கன்னிப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும். காலமெல்லாம் கன்னியாக இருப்பது என்பது தவறு. "தெய்வம் தொழாஅள்' என்றால், இதுகாறும் நல்ல கணவன் வாய்க்கவென்று, நோன்பிருந்து பிறை தொழுதவள், இனி தொழமாட்டாள் என்பதே கருத்து.
கொழுநனைத் தொழுதலென்பது, திருமணம் செய்துகொண்டு, அவனுடன் இசைந்து வாழ்வாள் என்பதே கருத்து. தெய்வம் தொழாள், கொழுநனைத் தொழுவாள் என்பது, கருத்தை உணர்த்தும் ஒரு சொல் நடை. இதற்கு, இச் சமுதாயப் பின்புலம் உணர்ந்து பொருள் கொள்ளாமற், பலவாறு கூறுவன தவிர்க்கப்பட வேண்டும். கற்புடைமை என்பது, குடும்ப வாழ்வு பற்றிய துளம்.
"பெய் எனப் பெய்யும் மழை' என்பதற்கு, அவள் பெய் என்று சொன்னால், மழைகூடப் பெய்யும், அவள் ஏவல் கேட்கும் என்பதாம். கலித்தொகையில் இதற்குரிய விளக்கம் உளது. "அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே' (39) என்பதில் "இல்' - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல் ஆகும். அதாவது மழையையும் பெய்விக்கக் கூடியவள் என்பதற்கும் "மழையைப் பெய்விப்பாள்' என்பதற்கும் வேறுபாடுண்டு. "இவன் ஊரையே விற்றுவிடுவான்', "மலையைக் கயிறாகத் திரிப்பான்' என்பன, அவ்வாறும் செய்யும் வன்மையுடையவன் என மிகைப்படுத்திச் சொல்வதாகும். "தருகிற்கும் பெருமையள்' - கற்புடைய பெண்கள் மழையையும் தரக்கூடிய பெருமைக்குரியவர்கள் என்பதே கருத்து.