கபிலரால் சுட்டப்படும் சிறப்பமைந்த சொற்றொடர்களுள் ஒன்று "நல்கூர்ந்தார் செல்வ மகள்' என்பது. "நல்கூர்ந்தார்' என்பதற்கு "வறுமையுற்றவர்' என்றும், "நல்கூர்தல்' என்பதற்கு தரித்திரப்படல், துன்புறுதல் என்னும் பொருள்களும் அகராதிகளில் உள்ளன. "என்ன..! வறுமையுற்றவருக்குச் செல்வ மகளா..?' என்று நம்மைத் திகைக்க வைக்கும் - வியக்க வைக்கும் கபிலரின் இச் சொல்லாட்சி! என்றாலும், கபிலர் இதை நயமிக்க பொருளில் கலித்தொகையில் (குறிஞ்சிக்கலி) எடுத்தாண்டுள்ளமை சொல்லின்பம், பொருளின்பம் வாய்ந்தது மட்டுமல்ல, கபிலருக்கே உரிய கைவந்த கலையும் கவிச் சிறப்புமாகும்.
அந்தத் தலைவியோ காதல் அனுபவத்திற்கு ஏற்ற பக்குவம் பெறாதவள். தலைவன் அவளைக் கண்டு, அவள் ஏதும் மறுமொழி கூறாத நிலையில், அவள்மீது தான் உற்ற காதல் வேதனையை தனக்கும் அவளுக்கும் பொருந்தாத வகையில் எடுத்துக்கூறுகிறான். தலைவன் கூற்றாக அமைந்த இப்பாடல் (பா.20) கைக்கிளைதிணைப் பாற்பட்டது.
இதில் தலைவன் முதன் முதலில் தலைவியைக் கண்டதுமே, அவளது பேரழகை நினைத்து,
""பேரெழில் மலர் உண்கண்
பிணை எழில் மான் நோக்கின்
காரெதிர் தளிர் மேனி
பல், கொடி புரை நுசுப்பினாய்!
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப,
நிரை தொடிக் கை வீசினை'' (கு.கலி.பா.22)
என்றெல்லாம் வியந்து மங்கையின் அங்க அழகை அடுக்கடுக்காக வர்ணிப்பதை "குறிஞ்சிக் கபிலர்' சொற்சித்திரம் ஒன்றை இப்பாடலில் தீட்டிக் காட்டியுள்ளார். அவ்வர்ணனைகளை மங்கையின் பேரெழிலில் ஏற்றிக்காட்டும் கபிலர், 20-ஆவது பாடலில் "நல்கூர்ந்தார் செல்வ மகள்' என்ற சொற்றொடரை மிகவும் நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். இச்சொற்றொடர் இதுவரை வேறு எந்தப் புலவராலும் எடுத்தாளப்படாதவை.
"வான்மதி போல் அழகு நிறைந்த மதிமுகம் கொண்டு ஒளிவீசி வரும் இம்மங்கைநல்லாள் யாரென்று தெரியவில்லையே...? வல்லவன் இயற்றிய பாவையோ...? அங்க அழகெல்லாம் ஒருங்கே திரட்டிக்கொண்டு என் உயிர் கவரவந்து தோன்றிய கூற்றமோ...(எமன்)? என்று தலைவன் ஐயுற்ற பின்பு, பல்கலைச் சில பூங்கலிங்கம் அணிந்தவளாய் வந்துள்ள இவள் "நல்கூர்ந்தார் செல்வ மகளாகவே' இருக்க வேண்டும்' எனத் துணிகிறான்.
""ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்
........ .......... ........... ..........
........ .......... ........... ..........
ஈங்கே வருவாள் இவள் யார்கொல்? ஆங்கே ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல்? நல்லார்
உறுப்பெலாம் கொண்டு இயற்றியாள்கொல்? வெறுப்பினாள்
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல் -ஆண்டார்
கடிது, இவளைக் காவார் விடுதல் கொடி இயல்
பல்கலை, சில்பூங் கலிங்கத்தள் - ஈங்கு இது ஓர்
"நல்கூர்ந்தார் செல்வ மகள்'
இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து''
(கு.கலி.பா.20, அடி.1-13)
இப்பாடலில் கபிலர் கூறும் "நல்குரவு' பிள்ளைச் செல்வம் இல்லாத நல்குரவு. "மக்கட்பேறு இன்மையால் குறைபட்டவர்கள் அருந்தவம் இயற்றிப் பெற்ற செல்வ மகளாகத்தான் இவள் இருக்க வேண்டும்' என்று தலைவன் துணிகிறான். நெடுநாள் பிள்ளைச் செல்வம் இல்லாத வறுமையால் பீழையுற்று வருந்திய, செல்வம் நிறைந்த பெற்றோர்க்குப் பிறந்த மங்கையை கபிலர் இச்சொற்றொடரால் குறிப்பிட்டுள்ளார். கபிலரின் பாடல்களில் காணப்படும் இவை போன்ற சொற்றொடர்கள் பலவும் இலக்கிய நயம் மிக்கவை; இதுவரை எவராலும் எடுத்தாளப்படாதவை; படித்து அகமகிழத்தக்கவை!
கபிலரைப் போற்றுவதற்கான தக்க தருணத்தை தற்போது மூன்று நாள்களாக (19}21) நமக்கு
வழங்கிக் கொண்டிருக்கிறது "திருக்கோவலூர்
பண்பாட்டுக் கழகம்' நடத்தும் கபிலர் விழா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.