தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம். கலம்பகம் பலவற்றுள் குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகமே மிகவும் சிறப்புடையதாக் கருதப்படுகிறது. கலம்பக உறுப்புகளுள் ஒன்று "மடல்'.
இந்நூலில் தலைவி கூற்றுப் பாடல்களாக 21 பாடல்கள் உள்ளன. இந்த 21 பாடல்களுள் 13 பாடல்கள் தொல்காப்பிய, நம்பியகப்பொருள் அகமரபு இலக்கணத்துக்கு ஏற்ற இலக்கியமாக அமைந்துள்ளன. இரண்டு பாடல்கள் நம்பியகப்பொருளில் கூறப்பட்டுள்ள இலக்கணத்துக்கே ஏற்படையதாக உள்ளன. ஆனால், தொல்காப்பியத்தில் அதற்கான இலக்கணம் காணப்படவில்லை. ஏனைய ஆறு பாடல்கள் இவ்விரு இலக்கண நூல்களுக்கு உட்படாமல் அகமரபை மீறிய பாடல்களாக அமைந்துள்ளன.
இங்கு சுட்டப்படும் பாடல் தொல்காப்பிய, நம்பியகப்பொருள் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள அகமரபுக்கு உட்படாத பாடலாகும். இவ்வாறு திருமங்கையாழ்வாரும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மடலேறுதல் என்பது காமம் மிக்கவர் தம் அன்புக்குரியவரைப் பெறாவிடத்து அவர்தம் வடிவத்தையும் பெயரையும், தம் பெயரையும் ஒரு படத்தில் சித்திரம் போல எழுதி, கையில் ஏந்திக்கொண்டு, பனைமடலால் ஒரு குதிரை உருவம் செய்வித்து அதன்மேல் ஏறி, அதைப் பிறரால் இழுப்பித்து வீதிவழியே பலரும் கூடும் பொது இடங்களில் செல்லுதல். இதனால் இவரது அன்புறுதியைக் கண்டு உறவினரோ, அரசரோ காதலர் இருவரையும் கூட்டுவிப்பர். இது பெரும்பான்மை ஆடவர்க்கே உரியது. ஆனால், மதுரைக் கலம்பகத் தலைவியோ, தான் மடலேறுவதாகக் கூறுகிறாள்.
""இடம்கொண்ட மானும் வலம்கொண்ட
ஒள்மழுவும் எழுதும்
படம்கொண்டு வந்தனை நெஞ்சமே
இனி பங்கயப்பூந்
தடம்கொண்ட கூடல் சவுந்தர
மாறர் பொன்தாள் பெயர்த்து
நடம் கொண்டது ஓர்வெள்ளிமன்று
ஏறுதும் இன்று நாளையிலே!''
(பா-33)
"இடக்கரத்தில் மானையும் வலக்கரத்தில் மழுவாயுதத்தையும் ஏந்தியுள்ள சிவபெருமானின் அழகிய ஓவியத்தைக் கொண்டு வந்தாய் நெஞ்சமே! இனிமேல் பொற்றாமரைக் குளத்தையுடைய மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் பொன்போன்ற தம் அழகிய திருவடிகளை மாற்றிவைத்துத் திருநடனஞ் செய்தருளும் இடமாகிய வெள்ளியம்பலத்திலே அவர் மீது நான் செலுத்தும் அன்பினைப் பிறர் அறியும் வண்ணம் இன்றேனும் நாளையேனும் நான் மடலேறுவேன்' என்கிறாள் தலைவி. இல்லின்று வெளிவருவதே இழுக்கென்னும் பண்பாட்டில் வளர்ந்தவள், ஊர்நடுவே "மடலேறுவேன்' என்பது தலைவன் மீது கொண்ட காதல் மிகுதியினால் அன்றோ! அகமரபை மீறியதாக இப்பாடல் இருந்தாலும் பெண்களின் மன ஓட்டங்கள் இப்படியும் செல்கின்றன என்பதைக் குமரகுருபரரைத் தவிர வேறு யாரால் இவ்வளவு அழகாகக் கூறமுடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.