முகப்பு
தமிழ்மணி

சொல் வேட்டை- 49

நான்கு யுகங்களைத் தாண்டி, மனித இனத்தை இன்று ஆட்டிப் படைக்கும் யுகம் கணினி யுகம் ஆகும். இக்கணினி யுகம் தொடங்கிய பிறகு, தகவல் தொழில்நுட்பம், நுட்பத்திலும் நுட்பமாக மாறிப்போன பிறகு, ஆங்கிலத்தில் பல சொற்கள், ஒன்று உருமாறிப் போயின அல்லது பொருள் மாறிப்போயின. அவ்வாறு பொருள் மாறிப்போன சொற்களில் ஒன்றுதான் "டுவீட்' ஆகும்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

நான்கு யுகங்களைத் தாண்டி, மனித இனத்தை இன்று ஆட்டிப் படைக்கும் யுகம் கணினி யுகம் ஆகும். இக்கணினி யுகம் தொடங்கிய பிறகு, தகவல் தொழில்நுட்பம், நுட்பத்திலும் நுட்பமாக மாறிப்போன பிறகு, ஆங்கிலத்தில் பல சொற்கள், ஒன்று உருமாறிப் போயின அல்லது பொருள் மாறிப்போயின. அவ்வாறு பொருள் மாறிப்போன சொற்களில் ஒன்றுதான் "டுவீட்' ஆகும்.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி "டுவீட்' என்ற சொல் பெயர்ச் சொல்லாக வரும்போது, அதன் பொருள் கிறீச்சொலி என்றும், அதுவே செயப்படு பொருள்குன்றா வினைச்சொல்லாக வரும்போது, அதன் பொருள் குறைவான, ஆனால் ஓங்கிய சத்தமிடுதல் என்றும், இச்சொல் பெயர்ச்சொல்லாக 1768-லும், பொது வழக்கத்தில் 1851-லும் பயன்பாட்டிற்கு வந்ததாகவும் குறிப்பிடுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகரமுதலி, உரத்தக் குரலில், ஆனால் சுருக்கமான முறையில் தகவல் தெரிவித்தல் என்ற பொருளை அளிக்கிறது. 1851-இல் இச்சொல் ஜி.மெரிடித் என்ற புகழ்பெற்ற கவிஞரால் முதன்முதலில் அவரது கவிதையில் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தப்பட்டது.

""ஒரு சிறு பறவை தனது ஜோடிக்கு அனுப்பும் சிறிய காதல் அழைப்பு''. இதில் சுவையான தகவல் என்னவென்றால், இக்கவிஞர் ஒரு வழக்குரைஞர். ஆனால், தன் வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு, எழுத்திற்கும், கவிதைக்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

மெரிடித், டுவீட் என்ற சொல்லை மேற்கண்ட பொருளில் முதன்முதலில் பயன்படுத்தி 155 ஆண்டுகள் ஆன பின்னால், அமெரிக்காவில் டுவிட்டர் (ற்ஜ்ண்ற்ற்ங்ழ்) என்னும் சமூக வலைத்தள நிறுவனம் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிலிருந்து இச்சொல் கொஞ்சம் பொருள் மாறிப்போய் மிகப்பெரிய அளவில் அன்றாடப் பயன்பாட்டில் ஒரு புதிய அவதாரம் எடுத்துவிட்டது. 140 எழுத்துகளுக்குள் குறுஞ்செய்திகளை அனுப்பவும், படிக்கவும் அந்நிறுவனம் ஏற்பாடு செய்து தந்த சமூக வலைத்தளச் சேவை இன்று "டுவீட்' என்று அழைக்கப்படுகிறது.

இச்செய்திகளின் அடிப்படையில் இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

பா.ஜம்புலிங்கம் டுவீட் என்ற சொல்லுக்கு சிறு உரையாடல், குறு விவாதம், குறு பகிர்வு, நறுக்கு இடுகை, நறுக்குப் பகிர்வு, செய்திப் பகிர்வு ஆகிய சொற்களைக் கொள்ளலாம் என்கிறார்.  ப.இரா.இராச அம்சன், மெல்லொலி, பறவைகளின் கிரீச்சொலி, கீச்சொலி, மெல்லிய சிறிய பறவையின் மெல்லோசை, மென்குரல், குறைஒலி ஆகிய சொற்களையும், என்.ஆர்.ஸத்யமூர்த்தி, இச்சொல்லுக்கு நேரிடையான பொருள் புள்ளொலி என்றும், அணிசேர் பொருள் தாழ்குரல், மென்குரல், ஈனக்குரல் என்றும், டிஜிடல் பொருளில் குறுஞ்செய்தி, குறுந்தரவு, சிறுசெய்தி, சிறுதரவு என்னும் பெயர்ச்சொற்களையும், குறுஞ்செய்தியிடு, குறுந்தரவிடு, குறுங்கருத்திடு, சிறுதகவலிடு என்னும் வினைச்சொற்களையும் கூடக் கொள்ளலாம் என்கிறார்.

சி.செந்தமிழ்ச்சேய், கீச்சொலி, சிற்றொலி, கீச்சொலியிடு, சிற்றொலிசெய், சிறுகுறிப்பு, சிறுகுறிப்பெழுது ஆகிய சொற்களையும், அ.கு.மான்விழி, கிரீச் ஒலி, குற்றொலி, குறும்பேரொலி, சிறுவல்லொலி, குறுவல்லொலி, சிறும்பேரொலி, பேரொலிப்பான், வல்லொலிப்பான் அல்லது குற்றொலிப்பான் ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்றைக் கொள்ளலாம் என்கிறார்.

கோ.மன்றவாணன், வலையஞ்சல், வலைமடல், வலையீடு, வலைச்சேதி, கருத்திடுகை, சேதியிடுகை, வலைத்தளக் கருத்தாடல், சேதிப்பரிமாறல், சேதிப்பரிமாற்றம், சேதிப்பரப்பல் அல்லது சேதிப்பரப்பீடு, கருத்தாடல், சேதியிடல், எண்ணமிடல், இடுகை, வலையாடல், வலைப்பதிவு, முணுமுணுப்பு, முணுகல், கீச்சொலி, கிரீச்சொலி, புள்ளிசை ஆகிய சொற்களையும், வினைச்சொற்களை உருவாக்கவும், சொற்றொடர்களின் சூழல் தன்மைகளுக்கேற்பவும் மேற்படி சொற்களில் பின்னொட்டு மாற்றங்களைச் செய்துகொள்ளலாம் என்கிறார்.

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில், இச்சொல்லுக்குப் பறவையின் குறு முரல்வு ஒலி, குற்றுயிர்ப்பொலி ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. காரணம், அப்போது கணினி யுகம் தொடங்கவில்லை. எனவே, இச்சொல்லுக்கான இணைச்சொல்லாக, பழைய பொருளை ஒரேயடியாகக் கழித்து விடாமலும், அதேசமயம், புதிய பொருளைப் புகுத்தியதாகவும் இருக்க வேண்டும்.

ஜம்புலிங்கம் பரிந்துரைத்துள்ள நறுக்கு இடுகை, நறுக்குப் பகிர்வு ஆகிய சொற்கள், டுவீட் என்ற சொல்லுக்கு இணையான பழந்தமிழ்ச் சொற்களாகவே இருப்பது மிகவும் வியப்பானது! ஆயினும், அவை ஒலியைக் குறிக்கவில்லை. எனவே, இவ்விரண்டையும் குறிக்க வேண்டுமானால், நறுக்கொலி என்ற சொல் பொருந்தும் என்று எண்ணுகிறேன். எனவே, டுவீட் என்ற சொல்லுக்கு இணைச்சொல் நறுக்கொலி ஆகும்.

முழு கட்டுரையைப் படிக்க →