முகப்பு
தமிழ்மணி

பத்து... பத்து...

சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து ஆகிய இப்பத்துகள் அனைத்தும் முதுமொழிக் காஞ்சி என்ற நீதி நூலினுள் உள்ளன.

Updated On : 14 ஏப்ரல், 2013 at 2:45 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:47 PM

சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து ஆகிய இப்பத்துகள் அனைத்தும் முதுமொழிக் காஞ்சி என்ற நீதி நூலினுள் உள்ளன. இந்நூலை இயற்றியவர் கூடலூர் கிழார். இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நீதியும் பழமொழிகளைப் போல அமைந்திருப்பதால் இது முதுமொழிக் காஞ்சி எனப்பட்டது. முதுமொழி என்றால் பழமொழி. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. முதல் பத்தாகிய சிறந்த பத்தில் உள்ள பத்து அடிகளில் சிறந்தன்று என்ற ஒரு சொல் பயின்று வந்ததால் இது சிறந்த பத்தாயிற்று. அப் பத்தைக் காண்போம்!

முதல் பத்து - சிறந்த பத்து

1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

Advertisement

ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை!

கடல் சூழ்ந்த இவ்வுலகத்து மக்கள் அனைவருக்கும் கல்வி கற்றலைவிட ஒழுக்கமுடையவராக இருப்பதே சிறந்ததாகும்.

2. காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்!

பிறர்க்கு அன்பு காட்டுவதிலும் செயல்களால் அவர் போற்றும்படி உயர்ந்த மதிப்பினைப் பெறுதல்

வேண்டும். அதுவே, அன்பை விட மிக்கச் சிறப்புடையதாகும்.

3. மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை!

ஒருவர் அறிவைப் பெற்றிருப்பதைவிட தான்

கற்ற கல்வியை மறவாமல் இருப்பதே மிகுந்த சிறப்பை உடையது.

4. வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை!

வண்மை என்பது வளம் பொருந்திய செல்வம். வாய்மை என்பது உண்மை, மெய்மை. பலவகைத் தீமைகளை விளைவிக்கக்கூடிய செல்வத்தை ஒருவர் பெற்றிருப்பதைவிட, நன்மையைச் செய்யும் வாய்மை உடையவராக இருப்பதே மிகுந்த சிறப்பை உடையது.

5. இளமையில் சிறந்தன்று மெய்ப்பிணி இன்மை!

ஒருவனுக்கு இளமை இன்பத்தைவிட நோயில்லாத வாழ்க்கையினால் உண்டாகின்ற இன்பமே மிகச்சிறந்த இன்பமாகும்.

6. நலன்உடை மையின் நாணுச் சிறந்தன்று!

நலன் என்பது அழகு; நாணு என்பது நாணம். ஒருவர் அழகுடையவராக இருப்பதைக் காட்டிலும் நாணம் உடையவராக இருப்பதே மிகவும் சிறப்புடையது.

7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று!

குலன் என்பது குடிப்பிறப்பு; கற்பு என்பது கல்வி. ஒருவன் உயர்குடியில் பிறந்தவனாக இருப்பதைவிட, கல்வி உடையவனாக இருப்பதே மிகவும் சிறப்புடையது.

8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று!

ஒன்றைக் கற்றறிவதைவிடக் கற்றறிந்த பெரியோரை

அணுகி அவருக்கு வழிபாடு செய்வதே மிகவும்

சிறந்ததாகும்.

9. செற்றாரைச் செறுத்தலின் தன்செய்கை சிறந்தன்று!

செற்றார் என்பவர் பகைவர்; செறுத்தல் என்பது அப்பகைவரை அழித்தல். அரசர்க்குத் தம்முடைய பகைவர்களை அழித்தலைவிட தங்களுடைய நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதே மிக்க சிறப்பைத் தரும்.

10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று!

முன் என்பது முற்காலம் (இளமைக் காலம்); பின் என்பது பிற்காலம் (முதுமைக் காலம்). செல்வமானது இளமையில் பெருகிப் பின்பு குறைவதைவிட, முதுமையில், முன்பு உள்ள நிலையில் குறையாமல் இருப்பதே மிக்க சிறப்புடையது.

(அடுத்த வாரம்... அடுத்த பத்து...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.