இயற்கை கவிஞர், தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ், பகுத்தறிவு கவிஞர், புதுவைக்குயில், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்னும் அடைமொழிகளால் அடையாளப்படுத்தப்பட்டவர் பாரதிதாசன்.
பாரதிதாசனின் உரைநடை ஆக்கங்கள் கட்டுரைகள், கதைகள் எனும் வகைகளில், எளிமையும், இனிமையும், கவிதை ஆக்கத்தில் காணப்படும் எதுகை, மோனை நயமும் நிரம்பியவையாகக் காணப்படுகின்றன. கேலி நடை எங்கும் மிகுத்துக் காணப்படுகிறது என்பதற்குப் புதுவை முரசில் வெளியான "பெண்களின் சமத்துவம்' கட்டுரையில் உள்ள இந்தக் குறிப்பு குறிப்பிடத்தக்கது.
""ஆம் ஆம் பெண்கள்தான் படித்து அங்கவஸ்திரம் போட்டுக் கொண்டு வெளியூர் சென்று புரட்டிவிடப் போகிறார்களா என்று அடிக்கடி நம் நாட்டவர் கேட்பதுண்டு. நாமும் ஆம், ஆம் ஆடவர் மாத்திரம் படித்து அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு வெளியூர் போய் புரட்டியதன் பயனாய் இன்று இந்தியர் என்றால் காறியுமிழாத பிற நாட்டினர் உண்டா என்று கேட்கிறோம்'' என்று பெண்ணடிமைப் பேசும் ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களைப் பார்த்துக் கேலி செய்து எழுதியுள்ளார்.
தாய்மொழி அவசியம் குறித்து ஓரிடத்தில் அறிவார்ந்த நிலையில் நின்று கருத்து சொல்லியிருக்கிறார். ""அன்பனே உன் தாயின் முலைப்பாலோடு உனக்குப் புகட்டிய உன் பாஷையில் உனக்கு நல்ல பயிற்சி தேவை. அதை உயர்த்த உயர்த்த உன் நிலையுயரும். இரண்டாவதாக உன் அவசியத்துக்குத் தேவையான கலைகள் நிரம்பிய பிற பாஷையைப் படி''.
தாய்மொழியைப் புறந்தள்ளிவிட்டு பிற மொழியைப் பரப்பும் மொழி வெறியர்களைப் பார்த்து பல கட்டுரைகள் வழிச் சாடியுள்ளார் பாரதிதாசன்.
பாரதிதாசனின் உரைநடை ஆக்கத்தின் மகுடமாகத் திகழ்வது, மானுடத்தைப் போற்றி எழுதிய ஆக்கமாகும். மானுடத்தை எவ்வாறு போற்றிக் கொண்டாட வேண்டும் என்பதை "மானுடம் போற்று' எனும் கட்டுரையின் இறுதியில், ""நீ வருந்தியுழைத்ததைப் பிடுங்க நினைப்பவர்கள் வார்த்தையை நம்பாதே. பிறர் தாக்ஷண்யத்திற்காக அன்றிச் சுதந்திர புருஷனாக யோசி. உன் யோசனையிற் பட்டதைத் தைரியத்துடன் காரியத்தில் கொண்டு வா. அப்போது உன் செயல் எப்படி இருக்கும் தெரியுமா? நீ மனிதரை உயர்வு செய்யும் மனிதனாவாய். மானுஷீகத்தை உயர்வுபடுத்தி அதன்பால் நன்றி செலுத்தும் மேன்மகனாக விளங்குவாய்'' என்று முடிக்கிறார்.
இவருடைய உரைநடை ஆக்கங்களை வாசிக்கின்றபோது, தமிழின் மிகச் சிறந்த உரைநடைப் படைப்பாளுமை புதுமைப்பித்தன் சொல்லிச்சென்ற ""அறிவுக்கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குறியேற்ற விரும்பிய பேரறிஞன்'' என்னும் வரிகளும்; கவிஞர் சுரதா சொல்லிச்சென்ற ""தடையேதும் இல்லை இவர் நடையில், வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கனுக்களுண்டு'' என்னும் வரிகளும்தான் நம் சிந்தனையில் வந்துபோகின்றன.
ஏப்ரல் 29 (1891) - பாவேந்தர் பிறந்த நாள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.