தமிழ்மணி

சொல் புதிது - 19

யாராவது சும்மா இருக்கிறார்களா? சும்மா இருக்க முடியுமா? வேலை இல்லாத பட்டதாரிகளும் சும்மா இருப்பதில்லை. படம் எடுக்கிறார்கள்; படம் பார்க்கிறார்கள்; படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்; பிஸியாக இருக்கிறார்கள். எல்லோரும் ஏதாவது ஒன்றில் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள்.

முனைவர் ம. இராசேந்திரன்

யாராவது சும்மா இருக்கிறார்களா? சும்மா இருக்க முடியுமா? வேலை இல்லாத பட்டதாரிகளும் சும்மா இருப்பதில்லை. படம் எடுக்கிறார்கள்; படம் பார்க்கிறார்கள்; படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்; பிஸியாக இருக்கிறார்கள். எல்லோரும் ஏதாவது ஒன்றில் எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்கள்.

அருணகிரிநாதருக்கு சும்மா இருக்க முடியவில்லை.

""பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மா இரு சொல் அற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே''

"சும்மா இரு சொல் அற' என்பதற்கு அருணகிரிநாதருக்குப் பொருள் தெரியவில்லை. பட்டினத்தாருக்கும் தெரியவில்லை.

""சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்

அம்மா பொருளிதென'' என்று வருந்துகிறார்.

மத யானையை அடக்கலாம்; கரடி, புலி வாய்களைக் கட்டலாம்; சிங்கத்தின் முதுகில் ஏறிப் பயணம் செய்யலாம்; பாம்பைக் கையில் பிடித்து ஆட்டலாம்; நெருப்பில் தேர் செய்து ஐந்து உலோகத்தையும் இரசவாதம் செய்யலாம்; மற்றவர் காணாமல் உலகத்தில் உலா வரலாம்; எப்போதும் இளமையோடு இருக்கவும் முடியலாம்; கூடுவிட்டுக் கூடும் பாயலாம்; தண்ணீரில் நடக்கவும் செய்யலாம்; நெருப்பின் மேல் நிற்கலாம். ஆனால், ""சிந்தையை யடக்கியே சும்மா இருக்கிற திறம் அரிது'' என்று தாயுமானவர் சுவாமி சொல்கிறார்.

வள்ளலார், ""வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம், இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன்'' என்று ஏங்குகிறார். இப்படி, சும்மா இருக்க முடியாமல்தான் எல்லோரும் எப்போதும் பிஸியாக இருக்கிறார்களா?

படம் பார்ப்பதை, விளையாடுவதை, பொழுது போக்குவதைப் பிஸியாக இருப்பதாகச் சொல்வதில்லை. நேரம் போக்குகிறவர்களை அப்படிச் சொல்வதில்லை; நேரம் போதாதவர்களைத்தான் பிஸியாக இருக்கிறார்கள் என்று சொல்கிறோம். குழந்தைகளோடு இருப்பதற்கும் நேரமில்லாமல் பிஸியாக இருக்கிறார்கள். தொலைபேசியும் பிஸியாக இருக்கிறது; தொடர்பு கிடைத்தாலும் பிஸியாக இருக்கிறார்களா? என்று கேட்டுவிட்டுத்தான் பேசவேண்டி இருக்கிறது. சாலைகளும் போக்குவரத்து நெருக்கடியில் பிஸியாக இருக்கின்றன. பண்டிகைக் காலங்களில் நேரமும் பிஸியாக இருக்கிறது. அலுவலகங்கள் கூட சில நேரங்களில் பிஸியாக இருக்கின்றன. அலுவலர்களும் பிஸியாக இருக்கிறார்கள். இப்படி எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது ஆன்ள்ஹ்.

இதற்கு வாசகர்கள், எஸ்.சுரேஷ், அ. கற்பூரபூபதி, கு.கோப்பெருந்தேவி, டி.வி.கிருஷ்ணசாமி, வானவில் மூர்த்தி, பழ.கவிதா சிவமணி, சோலை. கருப்பையா, சி. இராமச்சந்திரன், என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, செ. நாராயணசாமி, ஜனநேசன் ஆகியோர் தந்திருக்கும் தமிழாக்கம் பின்வருமாறு:

வேலையில், முனைவில், பணியில், பணிமிகு, பணியுறை, பணிமிகுதியாக, பணிதிளை, செயலில், செயல்மிகு, செயலுறை, செயல் மிகுதியாக, செயல்திளை, ஈடுபாடு, மும்முரமாக, நேரமின்றி, காலமின்றி, பரபரப்பான, அதி(க)சுறுசுறுப்பான, அதிமும்முரமான, தீவிரமான, வேலையாயிருக்கிற, அலுவலகக் காரியசித்தம், ஆழ்ந்தநிலை, துடிப்புநிலை, ஆழ்நிலைப்பணி, ஈடுபாட்டுத்திறன், கவனமிகுபணி, மீளாக்கவனம், ஆழ்நிலைக்கவனநிலை, தொடர்இயல்நிலை, தொடரியல்பு, சுறுசுறுப்புத் தன்மை, சோம்பலின்மை, நேரமின்மை, பரபரப்பு, ஓயாதுழைத்தல், ஒன்றியிருத்தல், தொடர்பணி, மனஎழுச்சி, உணர்ச்சியூக்கம், பரபரப்புப்பணி, வேலையாக, ஓய்வில்லா பணி, வேலை மும்முரம்.

அடைமழை போல் இடைவிடாத பணி நெருக்கடியை / நேர நெருக்கடியை / வேறொன்றுக்கு நேரம் ஒதுக்க முடியா நிலையை/பணிச்சுமையை / போக்குவரத்து நெருக்கடியைக் குறிப்பிடுவதற்கு Busy என்ற சொல்லைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இவற்றுக்கெல்லாம் பொருந்தும்படியான ஒரு சொல்லாக இருக்க வேண்டும். நெருக்கடி போல "முடுக்கடி' என்ற சொல் தமிழ் லெக்சிகனில் இருக்கிறது. ""கலியாண முடுக்கடியில் துணிகள் வாங்காதே'' என்று வருகிறது. முடங்கிப் போகாமல் முடுக்கிவிடப்பட்ட நிலையில் இருத்தலையும் வேலைகளால் முடுக்கிவிடப்பட்ட நிலையையும் குறிக்கும். எனவே "பிஸி' என்பதற்கு நெருக்கடிபோல முடுக்கடி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். நெருக்கடி போல முடுக்கடியும் புழக்கத்தில் சொல்வதற்கு எளிதாக இருக்கலாம்.

Busy - முடுக்கடி

அடுத்தவாரத் தேடல் - Seriousness

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT