தமிழ்மணி

சொல் புதிது - 20

சீரியஸ்னெஸ்' தெரியாமல் இலங்கை அரசு இணைய தளத்தில் இந்தியாவையும் தமிழகத்தையும் கொச்சைப்படுத்திவிட்டது. வருத்தம் தெரிவிக்கிறார்கள்; மன்னிப்புக் கேட்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் இடம்பெற்றுவிட்டது என்று சமாளிக்கிறார்கள்.

முனைவர் ம. இராசேந்திரன்

சீரியஸ்னெஸ்' தெரியாமல் இலங்கை அரசு இணைய தளத்தில் இந்தியாவையும் தமிழகத்தையும் கொச்சைப்படுத்திவிட்டது. வருத்தம் தெரிவிக்கிறார்கள்; மன்னிப்புக் கேட்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் இடம்பெற்றுவிட்டது என்று சமாளிக்கிறார்கள்.

திரைப்படங்களில் சீரியஸாக இருக்கும் செயல், பார்ப்பவருக்கு நகைச்சுவையாக இருக்கும். சீரியஸில் நகைச்சுவையும் இருக்கிறது. ஒருவருக்கு சீரியஸாக இருப்பது மற்றவருக்கும் சீரியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

நம்மைச் சுற்றிலும் சீரியஸாகக் கருத வேண்டிய எவ்வளவோ செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. கண்டுகொள்ளாமல் போகவும் கருத்தைச் செலுத்தாமல் வாழவும் பழக்கப்பட்டிருக்கிறோம். அவற்றின் விளைவுகள் நம்மைப் பாதிக்கும், நமது அடுத்தத் தலைமுறையைப் பாதிக்கும் என்கிற விழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

விளைவுகளின் தீவிரம் தெரிந்தால் எதிர்வினை ஆற்ற வேண்டியிருக்கும். எதிர்வினைக்குக் களம் இறங்கினால், எதிர்கொள்ள வேண்டிய விளைவுகள் பயமுறுத்தும். அதனால் அறியாமையே பேரின்பம் என்று அடங்கி வாழ்வது வாழ்க்கையாக இருக்காது.வாழ்க்கையைவிட சீரியஸான ஒன்று உலகில் இல்லை. வாழ்க்கையை சீரியஸாகப் பார்க்க வேண்டும். அதன் சீரியஸ்னெஸ் தெரியாமல் என்னென்னவோ நடக்கின்றன.

சீரியஸ்னெஸ் தெரியாமல் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், அரசியல் நடத்துகிறார்கள், நிறுவனம் நடத்துகிறார்கள், வண்டி ஓட்டுகிறார்கள், வணிகம் செய்கிறார்கள்; வழியில் நடக்கிறார்கள் என்று வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் சீரியஸ்னெஸ் பேச்சாகவே இருக்கிறது.

சீரியஸ்னெஸ் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?

கோ.மன்றவாணன், செ. நாராயணசாமி, பி.சுப்பிரமணியன், சி.இராமச்சந்திரன், இரா.ரெங்கசாமி, வானவில் மூர்த்தி, இரா. மோகன சுந்தரம், அ. கருப்பையா, சோ. முத்துமாணிக்கம், எஸ்.சுரேஷ், ஜனநேசன் ஆகியோர் தந்திருக்கும் தமிழாக்கம் வருமாறு:

இடர்தவிர்ப்புணர்வு, இடர்களைந்தாற்றல், பாரிப்பு, கருத்தூன்றல், மிகுகவனம், கடுஞ்சிரத்தை, பொறுப்புணர்ச்சி, விளைவுணர்ந்தாற்றல், விளைவறிந்தாற்றல், பொறுப்புணர்ந்தாற்றல், செயலக்கறை, பெருமுனைப்பு, கடும்முனைப்பு, செய்யுணர்வு, செயலுணர்வு, உள்ளாழ்தல், கவலையோடு, கவலைதோய்ந்து, ஆழ்நிலை ஈடுபாடு, அக்கறை, தீவிரம், தலைமுன்னுரிமை, முதல் முன்னுரிமை, அதிக முக்கியத்துவம், ஆழ்ந்த(தீவிர) கவனம், பெரிது படுத்தாமை, அசட்டை, சாதரணமாக, உயர் உச்சநிலை, உயர் உச்சம், கடிதுவினைசெயல், ஆழ்நிலைத் தன்மை, அபாய கட்டம், தீவிரத் தன்மை, செயலாற்றுகின்ற, செயல்நிலை, ஆய்வுநிலை, முக்கியத்துவம், உண்மையாக, பொறுப்பாக, கவனமாக.

விளைவு அறியாமல் செய்யப்படுகிற வினையின் போதெல்லாம் சீரியஸ்னெஸ் சொல் வந்து உரையாடலில் இடம்பெறுகிறது. சிறுவிளைவு, பெருவிளைவு, புதிர் விளைவு, கிளை விளைவு, பின் விளைவு, தொலை விளைவு என்றெல்லாம் விளைவுகளை வகைப்படுத்துகிறார்கள்.

வினை விளை காலம் என்பது சிலப்பதிகாரம். நல்வினை, தீவினை, கெடுவினை என்றெல்லாம் வினைகளைப் பாகுபடுத்துகிறார்கள்.

வினையின்றி விளைவு இல்லை; ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும்; எதிர்வினைக்கும் ஒரு வினை வரும். இப்படித் தொடரும் வினை அறியாமல் செய்யப்படும் செயல்கள் சீரியஸ்னெஸ் இல்லாமல் செய்யப்படுகின்ற செயல்களாகப் பார்க்கப்படுகின்றன.

எனவே, ஒவ்வொரு செயலும் தொடர்வினை கருதிச் செய்யப்பட வேண்டியிருக்கிறது. தொடர்வினையின் விளைவுகளே நல்வினை, தீவினைகளைத் தீர்மானிக்கின்றன.

"தொடர்வினை தெரியாமல் பேசுகிறார்கள்' என்றும், "தொடர்வினை அறிந்து செயற்படுகிறார்கள்' என்றும் தொடர்வினை, சொல்வதற்கு எளிமையாகவும் இருக்கிறது. எனவே, சீரியஸ்னெஸ் என்பதைத் தொடர்வினை எனச் சொல்லலாம்.

SERIOUSNESS - தொடர்வினை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT