தமிழ்மணி

சொல் புதிது - 21

கணக்கும் வழக்கும் இணை பிரியாதவை. கணக்கு என்றால் வழக்கு இருக்கும் போல! தமிழில் கணக்கும் இருக்கிறது; வழக்கும் இருக்கிறது.

முனைவர் ம. இராசேந்திரன்

கணக்கும் வழக்கும் இணை பிரியாதவை. கணக்கு என்றால் வழக்கு இருக்கும் போல! தமிழில் கணக்கும் இருக்கிறது; வழக்கும் இருக்கிறது. சங்கப் பாடல்களான பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் பதினெண்மேல்கணக்கு என்றும், திருக்குறள் முதலானவற்றைப் பதினெண்கீழ்க்கணக்கு என்றும் கூறுவர்.

நாடக வழக்கு, உலகியல் வழக்கு, பாடல் சார்ந்த புலனெறி வழக்கு என்று மூன்று வகை வழக்குகள் தமிழில் உள்ளன. இவைதவிர, இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்றும் உள்ளன. வழக்கு ஒழிந்த மொழி என்றால், பேச்சு வழக்கில் இல்லாத மொழியைக் குறிக்கிறது. வழக்கில் இல்லாத மொழி நீதிமன்றத்தில் வழக்கில் சிக்காத மொழி என்று பொருள்கொள்ள வாய்ப்பில்லை. வழக்காடும் மொழியாக இல்லாமல் இருப்பதும் நீதிமன்றத்தைப் பொறுத்தமட்டில் வழக்கொழிந்த மொழியாகக் கருதப்படுகிறது.

கணக்கும் வழக்கும் சேர்ந்திருக்கிறது என்றால், மொழியைப் பொறுத்தமட்டில் இலக்கியம் வழக்கில் இருக்க வேண்டும்; மக்களிடம் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் நினைக்கலாம். அதனால்தான் கணக்கும் வழக்கும் சேர்ந்தே இருக்கும்போல! "எண்ணும் எழுத்தும்' என்பதில் எண், கணக்கையும் எழுத்து வழக்கில் உள்ள இலக்கியத்தையும் குறிக்கும் போல.

தொடர்பு கொள்வதற்கு மொழிவழியான கணக்கு வழக்கும் வணிகத்தில், கொடுக்கல் வாங்கல் கணக்கு வழக்கும் உறவு முறையில் கொள்வினை கொடுப்பினைக் கணக்கு வழக்கும் இருக்கின்றன. கொடுப்பதும் குறைபடாது, கொள்வதும் மிகைகொளாது இருக்க வேண்டும் என்று வணிகர்களைத் திருவள்ளுவர் கணக்கு வழக்கு எழுதச் சொல்கிறார்.

""கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே''

என்று உறவு முறையிலான கணக்கு வழக்கைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

வாழ்க்கையில் ஒரு கணக்குமுறை இருக்கிறது. இது செய்தால் இது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலான கணக்கு இருக்கிறது. ""புகழ் எனின் உயிரையும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்'' என்று வாழ்க்கையில் விழுமியம் சார்ந்த கணக்கு வழக்கு புறநானூற்றில் இருக்கிறது. இவ்வுலகில் நன்மை செய்தால் மேலுலகில் சொர்க்கம் கிடைக்கும் என்பதற்காக நன்மை செய்யும் அறவிலை வாணிகன் நான் இல்லை. மேல் உலகம் இல்லை எனினும் ஈதல் நன்று என்ற மதிப்பீடு சார்ந்த கணக்கும் இருக்கிறது. எதையும் கொடுக்காமல் எதையும் வாங்கிக் கொள்ளும் விருப்பமே வாழ்க்கையாகிவிடக் கூடாது.

எதைக் கொடுத்தாவது எதையும் வாங்கிவிட முடியும்; எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது என்று பணத்தைக்கொண்டு அனைவருக்கும் அனைத்திற்கும் விலைப்பட்டியல் ஒட்டுகிற முயற்சியைக் காலம் மதிப்பதில்லை. ஆனாலும் கொடுத்து வாங்கும் வணிகமுறை இல்லாமல் வாழ்க்கைமுறை இல்லைதான்.

வங்கியில், வணிகத்தில், வகுப்பறையில், கணினியில், வாழ்க்கையில் TRANSACTION இருக்கிறது.

TRANSACTION என்பதற்கு வாசகர்கள் எஸ்.சுரேஷ்,செ.நாராயணசாமி, முனைவர் ச.கீதாதேவி, என்.ஆர். சத்தியமூர்த்தி, ப. இரா. இராச அம்சன், ஜனநேசன், புலவர் காசுமன் ஆகியோர் தந்துள்ள தமிழாக்கங்கள் பின்வருமாறு:

கொடுத்தல் வாங்கல், விற்றல் வாங்கல், கொண்டு கொடுத்தல், செயல்முறைப்படுத்துதல், பரிமாற்றம், வினைநிகழ்வு, கொடுக்கல் வாங்கல், அலுவல், நடவடிக்கை, செய்கை,  செயல், பணி, உறுசெயல், உறுபணி, திகழ்செயல், திகழ்பணி, நிகழ்செயல், நிகழ்பணி, பரிமாற்றம், இருமுனை ஒப்புகை, வழித்தொடர்பு, முனைநடவடிக்கை, விற்பாற்றம், பரிவர்த்தனை.

TRANSACTION, வங்கிகளில், வணிகத்தில் பணத்தோடு மட்டும் நடைபெறுகிறது. வகுப்பறையில் ஆசிரியர் மாணவரிடையே நடைபெறும் அறிவார்ந்த செயற்பாடுகளிலும் ட்ரான்சாக்ஷன் இருக்கிறது. கணினியில் தரவுகளைச் சேமிப்பதிலும் பெறுவதிலும் ட்ரான்சாக்ஷன் இருக்கிறது. அரசுப் பணிகளிலும் ட்ரான்சாக்ஷன் இருக்கிறது.

எனவே, கொடுக்கல் வாங்கல் என்றால் பணத்தோடு மட்டும் ட்ரான்சாக்ஷன் நின்றுவிடுகிறது. எல்லாவற்றுக்கும் பொருந்தும்படியான தமிழாக்கம் தேவைப்படுகிறது. ட்ரான்சாக்ஷனில் கொடுப்பதும் கொள்வதும் இருக்கின்றன. பணம், அறிவு, தரவு என்ற எல்லாவகையிலும் கொடுப்பதும் கொள்வதும் இருக்கின்றன.

எனவே, ட்ரான்சாக்ஷன் என்பதற்குக் கொடுகொள் என்பது பொருத்தமாக இருக்கும். வங்கியில் கொடுகொள் நேரம் முடிந்துவிட்டது; வணிகத்தில் கொடுகொள் பேரம் நடக்கிறது; கணினியில் கொடுகொள் முறையில் தரவுகள் இருக்கின்றன என்றெல்லாம் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.

TRANSACTION -  கொடுகொள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT