தமிழ்மணி

அணிலாடும் முற்றம்: முத்திரைப் பதிவுகள் -20

தினமணி

பேரூர் ஒன்றில் திருவிழா. கோயில் திருவிழா பூஜையின்போது ஊர் முழுக்க ஜேஜே என்றிருக்குமல்லவா... ஆட்டமும் பாட்டமும் கூத்தும் குதூகலமுமாக சகல மனசுகளும் பரவசத்தில் ததும்புமல்லவா... பேரூரே சொர்க்கலோகமாக - இன்பலோகமாகக் கோலாகலப்படுமல்லவா... அப்படியிருந்ததாம் காதலன் அவளுடன் அருகாமையில் இருந்தபோது. கூடிக்கலந்து, உணர்வும் உடம்பும் குழைந்து, மனது நனைந்து சுகந்ததும்பலில் திளைத்திருந்தபோது, பேரூர் திருவிழாவுக்குரிய பேரின்பத்தில் மூழ்கியிருந்த மாதிரியிருந்ததாம்.

பாலைவனத்தில் ஒரு சிறிய ஊர். கடுமையான பஞ்சம். குடிக்கத் தண்ணீர் இல்லை; உழைக்க மழையில்லை; உண்ண உணவில்லை; உடுக்கத் துணியில்லை. பசியும் பட்டினியுமாக எத்தனைக்காலம் துடிப்பது? பிழைக்க வழியற்று உண்ணக் கதியற்றுப்போன அந்தச் சிற்றூரே காலி செய்கிறது. அத்தனை மனித உயிர்களும் உணவுதேடி, வாழ்வுதேடி, பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டுப் போய்விட்டனர். ஊரே வெறும் ஊராகிவிட்டது.

பிள்ளைகளும் கன்னிகளும் ஓடிப்பிடித்து விளையாடிக் குதூகலிக்க வேண்டிய முற்றம், சூன்யம் படிந்து, புதர் மண்டிக்கிடக்கிறது. ஓடிப்பிடித்து விளையாடும் பிள்ளைகளைக்கண்டு அரண்டுபோய் தெறித்தோடுகிற அணில்கள் மனித வாடையற்ற முற்றத்தில் அச்சமே இல்லாமல் சுதந்திரமாக ஓடி விளையாடுகின்றன.

காதலன் அவளைவிட்டுப் பிரிந்து சென்ற பின்பு, அவளுக்கு அப்படித் தோன்றியதாம் வெறுமையாக. காதலன் உடன் இருந்தபோது திருவிழா நடக்கிற பேரூராகத் தோன்றியதாம். பிரிந்து சென்றவுடன் அணில் ஆடும் முற்றம் கொண்ட வெற்றுச் சிற்றூராகத் தோன்றியதாம்.

ஒரு பெண்ணின் மன உணர்வுச் சலனத்தை உணர்த்துவதற்கான உவமைகளிலேயே சமுதாயத்தின் இருவேறு வாழ்வு நிலை இருந்ததை உணர்த்திவிடுகிற நேர்த்தியும், நுட்பமும், எத்தனை அழகாக இருக்கிறது. குறுந்தொகையில் 41-ஆவது பாடலாக வருகிறது இது.

காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து

சாறுகொள் ஊரிற் புகல்வேன் மன்ற,

அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்

மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்

புலம்பில் போலப் புல்லென்று

அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே!

(அணிலாடு முன்றிலார்)

சங்ககாலம் என்றாலே செல்வம் பொழிந்த பொற்காலம், காய்ந்த நெல்லைக் கொத்த வருகிற கோழியைக்கூட காது நகையான பாம்படத்தால் எறிந்து துரத்திய தங்கக்காலம் என்று சொல்லப்படுகிறது. செழிப்பான வாழ்வும் ஏழ்மையான ஜீவனமும் சேர்ந்தே இயங்கிய சமுதாயம்தான் அது. பல்லக்கில் ஏறி உலாவந்த செல்வந்தர்களும், பஞ்சம் பிழைக்க ஊரையே காலிசெய்து ஓடுகிற எளியோரும் கலந்திருந்த மேடுபள்ளச் சமுதாயம்தான் அது.

இந்தச் சமுதாய நிலவரத்தை மறுக்க முடியாத சாட்சியமாக முன்வைக்கிற இப்பாடல், காதல் பிரிவு சார்ந்த, உணர்வுலக அவஸ்தையைச் சொல்கிற பாடல் என்பதுதான் வியப்பான பேருண்மை. நமது முன்னோடி இலக்கியவாதிகள் காதல் பாடல் எழுதும்போதுகூட சமுதாயத்தை மறக்காமல் இருந்திருக்கின்றனர். சமுதாயத்தைச் சித்திரிப்பதற்குக் காதலையே பயன்படுத்தி இருக்கின்றனர்.

காதலனுடன் கூடியிருந்து, பின் பிரிவுற்ற காதலியின் மனச்சலனத்தை - உணர்வு மாற்றத்தை - வேதனையைச் சொல்லவந்த அழகான இப்பாடல், தமது அழகியல், கலைத்தன்மை கொஞ்சமும் குன்றாத நிறைவோடு, தமது காலத்துச் சமுதாய முரணையும் சாதுர்யமாக உணர்த்துகிற நமது பாரம்பரியப் பாட்டன்களிடமிருந்து நமது படைப்பாளிகள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

மேலாண்மைப் பொன்னுசாமி "கிழக்கு வாசல் உதயம்' திங்களிதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கம், (ஜூலை-2008)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT