தமிழ்மணி

சொல் புதிது - 39

நவீன அறிவியல் கடந்த காலத்திற்கு அழைத்துப் போகிறதா? ஒருகாலத்தில் கைவிரல் கொண்டு மண்ணில் எழுதிப் பழகிய வாழ்க்கை இருந்தது.

முனைவர் ம. இராசேந்திரன்

நவீன அறிவியல் கடந்த காலத்திற்கு அழைத்துப் போகிறதா? ஒருகாலத்தில் கைவிரல் கொண்டு மண்ணில் எழுதிப் பழகிய வாழ்க்கை இருந்தது. எழுத்தறிவு இல்லாதவர்கள் சுவரில் கோடு போட்டுக் குறிப்பெழுதி வைத்தார்கள். பாறைகளில் ஓவியம் வரைந்து சொல்லிச் சென்றார்கள். மக்கள் ஒருவருக்கு ஒருவர் செய்தியைச் சொல்லி அனுப்பினார்கள். அதன் பின்னர் எழுதுகோல், கரும்பலகை, தாள் ஆகியவை கிடைத்தன. தட்டச்சு, கணினி வந்தன.

இப்போது மண்ணில் எழுதுவதற்குப் பதில் தொடுதிரை வந்துள்ளது. எழுதாமல் பேச்சொலி அஞ்சல் அனுப்பவும் வசதி கிடைத்துள்ளது. எழுத்தறிவுமிக்கவர்கள் எழுதுகோல் இல்லாமல் தொடுதிரையில் தொட்டுப் பாட்டுக் கேட்கிறோம்; படம் பார்க்கிறோம்: பக்கத்தில் இல்லாதவர்களோடும் பேசுகிறோம். விரல் நுனியில் உலகம் விரிகிறது.

பேசுவதற்குத் தொலைபேசி, பாட்டுக் கேட்க வானொலிப் பெட்டி, படம் பார்க்கத் தொலைக்காட்சிப் பெட்டி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக இருந்தவை ஒன்றாகிக் கையடக்கத்தில் பைக்குள் உலகம் அடங்கிக் கிடக்கிறது. செல்பேசியும் கணினியும் சேர்ந்து ஸ்மார்ட் போன் ஆகியிருக்கிறது.

முகவரிகளைச் சொல்கிறது; தேதி சொல்கிறது; நாளைச் சொல்கிறது; வேலைகளை நினைவுபடுத்துகிறது; வழி சொல்கிறது; வங்கிக் கணக்கில் பற்று வரவு காட்டுகிறது; மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணங்களைக் கட்டுகிறது; பயணச் சீட்டைக் காட்டுகிறது; இணைய தளத்தில் தேவைப்படும் தகவல்களைப் பெற்றிட உதவுகிறது; அருகில் உள்ள உணவகத்தைக் கண்டு பிடிக்கிறது; திரைப்படத் தகவல்கள் சொல்வதோடு இடைவேளையில் சாப்பிட என்ன வேண்டும் என்று இருக்கைக்கே கொண்டு வந்துதரச் செய்கிறது; நாளைக்கு வானிலை எப்படி இருக்கும் என்று இன்றைக்கே தெரிவிக்கிறது. இவை போன்ற எண்ணற்ற வேலைகளையும் ஆலோசனைகளையும் நமக்குத் தெரிவிக்கிறது ஸ்மார்ட் போன்.

1971-இல் கண்டறியப்பட்டு, 1993}இல் விற்பனைக்கு வந்த இந்தப் பேசி, 1995}இல் ஸ்மார்ட் போன் என்று முதன்முதலில் அச்சில் இடம் பெற்றுள்ளது. இப்போது தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் போன் பரவலாக உலகம் முழுதும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஸ்மார்ட் போன் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லாம்? வாசகர்களின் தமிழாக்கங்கள் வருமாறு:

  • செ.நாராயணசாமி - சூட்டிகைப்பேசி, சூட்டிகைத் திரையொலிபேசி
  • ப.இரா.இராச அம்சன் - கூர்திறன் பேசி, வினைத்திறன் பேசி, விரைவூக்க ஊடாடி, இணைய ஊடு, கொடுகொள் பேசி, தகவலூடு.
  • செ.சத்தியசீலன் - தொடு அலைபேசி, ஒற்றைத்தொடர் அலைபேசி
  • ந.கணேசன் - அறிவான, புத்திசாலி பேச்சொலிப்பான்
  • இராம.வேதநாயகம் - நுண்மைக் கைபேசி, நுண்மான் நுழைபுலப்பேசி, நுட்பக் கைபேசி
  • கு.இரவிச்சந்திரன் - நுண்தகவல்பேசி, மின்னியல்பேசி, நவீனத் தகவல் பெட்டகப்பேசி
  • நா.கிருஷ்ணவேலு - கூர்த்தமதி தொலைபேசி, அறிவார்ந்த தொலைபேசி
  • ராஜசிம்மன் - அதிநுட்பக் கைபேசி
  • எம்.எஸ்.இரணியநாதன் - கூர்மதி கைப்பேசி, சிறப்பலைபேசி
  • கோ. மன்றவாணன் - சுட்டி பேசி, மேதைமை பேசி, வல்லமை பேசி, திறன்பேசி, நுண்செயல் பேசி, நுண்திறன் பேசி, நிறைதிறன் பேசி.

பேசுவதற்கு மட்டுமல்லாமல், கணினியின் பயன்பாட்டையும் தரக்கூடிய அறிதிறன் மிக்கதாக ஸ்மார்ட் போன் இருக்கிறது.

1. எதிர்நோக்கும் சிக்கல் அல்லது தேவையை நிறைவு செய்யவும் தீர்க்கவும் முடிவொன்றை எடுக்கத் தகவல்களைத் துல்லியமாகத் தருதல்.

2. தகவல்கள் இல்லையெனின் இல்லாத தகவல்களை உருவாக்குதல்.

3. தகவல்களை முழுமையாக விளங்கிக் கொள்ளுதல்.

4. தகவல்களை ஒழுங்குபடுத்தல், பகுப்பாய்வு செய்தல், விளக்குதல், சீர்தூக்கிப் பார்த்தல்.

5. எதிர்காலத் தேவைகளுக்காக தகவல்களைப் பாதுகாத்தல், களஞ்சியப்படுத்தல், மீளப்பயன்படுத்தல், பதிவுசெய்தல், ஆவணப்படுத்தல்.

6. தேவையற்ற தகவல்களை நீக்குதல் -தேவையானவற்றைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுவதால் ஸ்மார்ட் போனை அறிதிறன் பேசி என்று அழைக்கலாம். அறிவுக்கு உதவும் திறன் கொண்டிருக்கிறது என்பதாகவும் பொருள்தரக்கூடும்.

Smart Phone - அறிதிறன் பேசி

அடுத்த வாரத் தேடல் - e-book reader

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT