"கேழ்' எனும் சொல்!
"கேழ்' எனும் சொல் "ஒப்பற்ற' என்னும் பொருளுடையது. மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் (பா.8),
"கேழ்' எனும் சொல் "ஒப்பற்ற' என்னும் பொருளுடையது. மாணிக்கவாசகரின் திருவெம்பாவையில் (பா.8),
""கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம்...''
என வருகிறது. "ஒப்பற்ற மேலாகிய அவனுடைய மேனி ஒளியையும், அவனுடைய ஒப்பற்ற திருவருளையும், அதனாலாம் ஒப்பற்ற சிறந்த பயன்களையும் நாம் புகழ்ந்து பாடினோம்' என்பது இதன் பொருள். இப்பாடல் பொருளில் ஈடுபட்ட வள்ளலார் இவ்வடியை ""அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை'' என மகா மந்திரமாக்கினார்.
கம்பர், பரதனைக் குகன் புகழுமிடத்து, ""ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியினம்மா'' (குக.பட.35) என்று கூறுவதாகப் பாடியுள்ளார் (உனக்கு ஒப்பாக ஆவரோ?).
நம்மாழ்வார் திருவாய் மொழியில்,
""ஏழை பேதை இராப்பகல் தன
கேழிலொண் கண்ணநீர் கொண்டாள்'' (2:4:10)
என்கிறார். "ஏழையாய், அறிவில்லாதவளாய் இருக்கும் இவள், தனது ஒப்பற்ற சிறந்த கண்களில் நீரைக் கொண்டாள்' என்பது இதன் பொருள்.
""....... ........ சடகோபன் சொல்
கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே!'' (3:3:11)
சடகோபர் அருளிய ஒப்பிலாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்தையும் கற்றுவல்லவர் உலகிலுள்ளோர் புகழும்படி வாழ்வர் என்பது இதன் பொருள்.
கம்பராமாயணத்தில், ""கேழ் அன்ன யாழ்க்கு'' (ந.நீ.ப.182) என்னுமிடத்து இச்சொல் "ஒளி' என்ற பொருளிலும், "கேள்' என வந்து, "கேள் உலா மன் ஒளி' (ஆறுசெல்.ப.48) என்னும் இடத்து "நிறம்' என்ற பொருளிலும் வந்துள்ளது.
""கேழ் கிளை மதுகையர்'' என்னுமிடத்து (திருவவதாரப் படலம்-132) "விளங்கும்' (விளக்கம்) என்னும் பொருளில் வந்துள்ளது. பல இலக்கியங்களில் வந்துள்ள இச்சொல்லாட்சியை மேலும் ஆய்தல் நலம்.