தமிழ்மணி

சொல் புதிது - 35

எண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே' என்பது ஆற்றில் தண்ணீரும் மண்ணும் இருந்த காலத்தில் உருவான பழமொழியாக இருத்தல் வேண்டும்.

முனைவர் ம. இராசேந்திரன்

எண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே' என்பது ஆற்றில் தண்ணீரும் மண்ணும் இருந்த காலத்தில் உருவான பழமொழியாக இருத்தல் வேண்டும். இப்போது அது பழைய மொழி ஆகிவிட்டது. ஆனாலும் அதை ஆற்றைக் கடக்க மட்டும் சொன்ன பழமொழியாக இல்லாமல், திட்டமிடுவதன் தேவையைக் கூறும் பழமொழியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆற்றைக் கடக்க வேண்டுமானால் முதலில் திட்டமிடவேண்டும் என்று இப்பழமொழி சொல்கிறது.

ஆற்றைக் கடக்க மண்குதிரை பயன்படாது என்றால் ஓடும் குதிரை பயன்படுமா? ஆற்றைக் கடக்கப் படகையோ தெப்பத்தையோ நம்பலாம்; யாராவது குதிரையை நம்புவார்களா? சாலையில் ஓடும் குதிரையைக் கொண்டு ஓடும் ஆற்று நீரில் பயணம் செய்ய நினைக்கக்கூடாது என்று இடத்திற்கு ஏற்பத் திட்டமிட வேண்டும் என்று சொல்லி இருப்பார்களோ? அப்படியானால் குதிரை என்று சொல்லாமல் "மண்குதிரை' என்று ஏன் சொன்னார்கள்? குதிரையைக் கொண்டே ஆற்றைக் கடக்க முடியாத போது நீரில் கரையும் மண்குதிரையைக் கொண்டு கடக்க நினைப்பதுபோல் திட்டமிடக்கூடாது என்பதற்குச் சொல்லி இருப்பார்களோ? அப்படியென்றால் மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்காதே என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். ஆனால், "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே' என்று சொல்லி இருக்கிறார்களே...

மண்குதிரை என்பது மண்ணாலான குதிரையாக இருக்க முடியாது; அதில் ஏறி ஆற்றைக் கடக்க யாராவது நினைத்திருப்பார்களா? அதிலேறி சாலையைக் கூடக் கடக்க முடியாதே! ஆகவே, மண்குதிரை மண்ணாலான குதிரையாக இருக்க முடியாது.

ஆற்றில் வெள்ளம் வந்து வடிகிறபோது பள்ளம் மேடுகள் புதிதாக உருவாகும். ஒவ்வொருமுறை வெள்ளம் வரும்போதும் மேடுகள் மாறிக்கொண்டே இருக்கும். அப்படி ஆற்றில் திட்டுத் திட்டாக உருவாகும் மேடுகள், வீட்டில் உள்ள நெற்குதிர்கள் போலத் தெரியும். ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும்போது திடீரென வெள்ளம் வந்தால் அந்த மண்குதிர்களில் ஏறித் தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆற்றைக் கடக்க நினைக்கிறவர்கள் திட்டமிடக்கூடாது என்றுதான் சொல்லி இருக்க வேண்டும். மேடுகளாகத் தெரியும் மண்ணாலான குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்.

பாதிப்பு இல்லாமல் எந்தப் பயனும் கிடைப்பதில்லை; உயிர் வளர்த்த முட்டையை உடைத்துக் கொண்டுதான் குஞ்சுகள் வெளிவருகின்றன. அதனால், பாதிப்புகளின் வீரியத்தையும் விளைவையும் குறைக்கவும் பயன்பாட்டின் அளவைக் கூட்டவும் அடையவும் திட்டம் வேண்டும். திட்ட இலக்கினை அடையச் செயல் திட்டம் வேண்டும். திட்டத்தைச் செயற்படுத்தும்போது எதிர்பாராமல் நேரக்கூடிய நிகழ்வுகளையும் முன்னதாகவே அறிந்து, அதனை எதிர்கொள்வதற்கு ஏற்பத் திட்டமிடல் வேண்டும் என்பதற்கு ஆற்றில் தெரியும் மண்குதிர்களை நம்பி இறங்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அதனால்தான் "எண்ணித் துணிக' என்றும், "துணிந்தபின் எண்ணுவது இழுக்கு' என்றும் வள்ளுவர் கூறினார்.

ஒரு திரைப்படம் பார்க்கப் போவதாக இருந்தாலும் எந்தப் படத்தைப் பார்க்கப் போகிறோம்? எந்த அரங்கில்? எந்த நேரத்தில்? யாரோடு போக்குவரத்து வசதி? எப்படி என்றெல்லாம் திட்டமிட வேண்டி இருக்கிறது. ஊருக்குப் போவது என்றாலும் பயணத் திட்டம் வேண்டி இருக்கிறது முன்பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.திருமணம் என்றாலும் முன்னதாகவே உறுதி செய்து கொள்ளவேண்டி இருக்கிறது. தனிமனித வாழ்க்கையிலும் இப்படித் திட்டம் இருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஐந்தாண்டுத் திட்டம் தேவையாக இருக்கிறது. அதற்கென்று திட்டக் குழு இருக்கிறது.

எல்லா வகையிலும் ஆராய்ந்து பார்த்து இலக்கினை அடைவதற்கான செயற்பாடுகளை உள்ளடக்கியதாக உருவாகும் திட்டத்தை Master plan என்று சொல்கிறார்கள். இதனைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? வாசகர்களின் பரிந்துரைகள் வருமாறு:

அ.கருப்பையா - உயர்நோக்குத் திட்டம்/ அறிவார்ந்தத் திட்டம்/ அறிவார்ந்த முன்னேற்பாடு

உடுமலை அமிர்தநேயன் - தேர்ந்த வரைவு/ சிறப்பு வரைவு/ தேர்ந்த முன்வரைவு/ தேர்ந்த திட்டமிடல்

கீதா முருகானந்தம் - கலை வல்லுநர்த் திட்டம்/ தலைவர்

திட்டம்/ மேலாட்சியாளர் வரைபடம்

செ.சத்தியசீலன் - அடிப்படைத் திட்டம்/ செயல்திட்டம்/

மேம்பாட்டுத் திட்டம்/ முதன்மைப் பணித்திட்டம்

மீனா கண்ணன் - தலைமைத் திட்டம்/ தலைமை உத்தி

எஸ்.சுரேஷ் - முதன்மைச் செயல்திட்டம்

சி.இராமச்சந்திரன் - தலைசிறந்தத் திட்டம்/ நுண்ணிய

தகவமைப்பு/ தேர்ந்த (வடிவமைப்பு) திட்டம்

இராசசிம்மன் - கைதேர்ந்த திட்டம்

கோ. மன்றவாணன் - நிறைதிட்டம்/ நுண்மாண் திட்டம்/

தலைமைத் திட்டம்/ முதன்மைத் திட்டம்/ உயர்தனித் திட்டம்

என்.ஆர். ஸத்தியமூர்த்தி - நுண்மாண் பெருந்திட்டம்/ நுண்மாண் நிறைதிட்டம்

ஆசை மட்டும் இலக்கினை அடைய உதவுவதில்லை; அதனை அடைவதற்கான கால எல்லையுடன் கூடிய - அனைத்து வகையான கூறுகளையும் உள்ளடக்கிய உறுதியான செயல் திட்டமாக Master plan

 இருக்கிறது. எனவே, இதனைத் தமிழில் செயலுறுதித் திட்டம் என்று சொல்லலாம். காப்புறுதித் திட்டம் போல செயலுறுதித் திட்டமும் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கக் கூடும்.

Master plan - செயலுறுதித் திட்டம்

அடுத்த வாரத் தேடல் - Think tank

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT