தமிழ்மணி

சொல் புதிது - 28

அரசியலுக்கும் காதலுக்கும் தூது வேண்டும். உறவை ஏற்படுத்தவும் புதுப்பிக்கவும் வளர்க்கவும் தூது பயன்படுகிறது.

முனைவர் ம. இராசேந்திரன்

அரசியலுக்கும் காதலுக்கும் தூது வேண்டும். உறவை ஏற்படுத்தவும் புதுப்பிக்கவும் வளர்க்கவும் தூது பயன்படுகிறது. தூது விடுதலும் போதலும் தொன்மையான பழக்கம். ""ஓதல், பகையே தூதிவை பிரிவே'' என்பது தொல்காப்பியம். திருவள்ளுவர் தனி அதிகாரமே தந்துள்ளார். கலை இலக்கியங்கள் எல்லாம் கடந்த காலத்தின் தூதுவர்கள் போலும். கடந்த காலத்தோடு இணக்கமில்லாமல் வரும் காலத்தோடு வாழமுடியாது போல. அரசியலுக்கானது புறத்தூது; காதலுக்கானது அகத்தூது.

கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலேயே பாண்டிய மன்னன், அகஸ்டஸ் என்னும் ரோமப் பேரரசனுக்குத் தூதுக் குழுவை அனுப்பி இருக்கிறான். அதியமான் ஒüவையாரைத் தொண்டைமானிடம் தூது அனுப்பி இருக்கிறான். பாண்டவர், துரியோதனனிடம் கண்ணனைத் தூது விட்டதையும், இராமனின் தூதுவராக இராவணனிடம் அங்கதன் தூது சென்றதையும் இதிகாசங்கள் கூறுகின்றன. பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனிடம் அன்னத்தைத் தூது அனுப்பி இருக்கிறார்.

காதல் தூதில் உயர்திணை மனிதர்களைவிட அஃறிணைப் பொருள்களான அன்னம், கிளி, மயில், மேகம், காற்று, வண்டு, நெஞ்சு ஆகியவையே பெரும்பாலும் தூதாக அனுப்பப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்களில் ஒன்றாகத் தூது இலக்கியம் வளர்ந்துள்ளது. தமிழையும் தூது அனுப்பியிருக்கிறார்கள். நளன் தமயந்தியிடையே அன்னம் தூது சென்றிருக்கிறது. குயில், மயில் மட்டுமன்றிப் புகையிலையும் பணமும் கூடத் தூதாக அனுப்பப்பட்டிருக்கின்றன.

""மேருவை அணுவாக்கிவிடுவாய்; அணுவின் ஒரு பாகத்தை மேருவாக்கி விடுவாய்! காடு நாடு ஆக்குவாய்! கண்விழித்து மூடும் முன்னே நாடு காடாக்குவாய்!'' என்று பணத்தின் புகழைப் பணவிடு தூது சொல்கிறது.

தம் காதல் உணர்வுகளை இன்னொரு மனிதரிடம் சொல்வதைவிட அஃறிணைப் பொருள்களிடம் கூச்சம் இல்லாமல் சொல்ல முடிந்திருக்கலாம். அல்லது தான் சொன்னதை மட்டுமே சொல்லும் கிளிகளை நம்பிச் சொல்லி இருக்கலாம். இப்போதெல்லாம் செல்பேசி, குறுஞ்செய்தி, முகநூல் தூதுப் பொருள்களாகிவிட்டன.

சங்க காலத்தில் தலைவி, தோழியிடம் காதலைச் சொல்ல, தோழி செவிலித்தாயிடம் சொல்ல, செவிலித்தாய் தாயிடம் சொல்ல, தாய், தன் கணவனிடம் அதாவது தலைவியின் தந்தையிடம் சொல்வதாக LIAISON நடந்திருக்கிறது. இப்போதும் அப்பாவிடம் சொல்ல அம்மா வேண்டியிருக்கிறார். ஆனால், எப்போதும் அரசியலுக்கும் நிறுவனங்களுக்கும் தூது தேவையாக இருக்கிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ளவும் இணக்கமாக இருக்கவும் தூதுவர்கள் தேவைப்படுகின்றனர்; தூதுவர் அலுவலகங்கள் தேவைப்படுகின்றன.

நிறுவனங்கள், அரசுடனும் மக்களுடனும் இணக்கமான உறவை வளர்த்துக் கொண்டால்தான் வளர முடியும். அதற்காக அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். LIAISON பணியைத் தமிழில் இப்படிச் சொல்லலாம் என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர்:

ஜனநேசன் - நல்லெண்ணப் பரிமாறுநர்

என்.ஆர்.ஸத்தியமூர்த்தி - இணையுறவு / இணைத்தொடர்பு

கோ. மன்றவாணன் - இணைப்புறவு/ தொடர்பாடல் / தொடர்புறவு/ ஊடாடல்/ ஊடுறவு

ப.இரா.இராச அம்சன் - சந்திப்பு/ தொடரிணைப்பு/ இருமுனை இணைப்பு

எஸ். சுரேஷ் - செய்தி/ நன்னெறி தொடர்பு

வெ.ஆனந்தகிருஷ்ணன் - தொடர்பு/ இணைப்பு பிணைப்பு/ ஒழுங்கு/ சேர்க்கை/ ஒத்தியல்பு

கா.மு.சிதம்பரம் - சோரம்/ கரந்தொலி/ இணைத்தியங்கல்

இரா.மோகனசுந்தரம் - தொடர்பு/ இணைப்பு/ பிணைப்பு/ உறவு

டி.வி.கிருஷ்ணசாமி - சட்டத்திற்குப் புறம்பான அன்பு/ விருப்பமற்ற/ நெருக்கம்

LIAISON எனும் சொல், தான் உருவான காலத்தில் கொண்டிருந்த பொருளையும் பயன்பாட்டையும் கடந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் படைகளுக்கிடையே இணக்கம் ஏற்படுத்த LIAISON AIR CRAFTS எனும் சிறு விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இராணுவத்தில் வெவ்வேறு வகைப் படைப்பிரிவினருடன் இணக்கமான கூட்டுறவை ஏற்படுத்துபவர் கஐஅஐநஞச அலுவலராக இருக்கிறார். LIAISON குழு LIAISON முகவர் அமைப்பு என்றெல்லாம் இன்றைய நிலையில் உருவாகி வருகின்றன. மருத்துவமனைகளில் இருவேறு சிறப்பு மருத்துவர்களின் இணக்கத்துடன் மருத்துவம் நடைபெறவும்; மருந்துக்கும் மனநோயாளிக்கும் இணக்கம் ஏற்படுத்துவதும் LIAISON பணியாக இருக்கிறது. நிறுவனங்கள் சிறப்பாக நடைபெற, பணியாற்றுவோரின் வெவ்வேறு அமைப்புகளுடனும் இணக்கம் ஏற்படுத்துவதும் LIAISON பணியாக இருக்கிறது.

எனவே, LIAISON என்பதை இணக்கத் தொடர்பு என்று சொல்லலாம். மக்கள் தொடர்பு அலுவலர் போல, LIAISON OFFICER இணக்கத் தொடர்பு அலுவலர் அல்லது இணக்கத் தொடர்பாளர் என்று அழைக்கப்படலாம்.

LIAISON  - இணக்கத் தொடர்பு

அடுத்த வாரத் தேடல் - REPRESENTATIVE

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT