தமிழ்மணி

சொல் புதிது - 24

பசி விரட்டுகிறது; பறவை, விலங்கு, மனிதர் என்ற வேறுபாடு இல்லாமல் விரட்டுகிறது; பிறந்த இடத்திலேயே இருக்கவிடாமல் துரத்துகிறது.

முனைவர் ம. இராசேந்திரன்

பசி விரட்டுகிறது; பறவை, விலங்கு, மனிதர் என்ற வேறுபாடு இல்லாமல் விரட்டுகிறது; பிறந்த இடத்திலேயே இருக்கவிடாமல் துரத்துகிறது.

வயிற்றுப்பசி, காமப்பசியோடு மனிதர்களுக்குக் கூடுதலாகப் பணப்பசி, அதிகாரப்பசி, அறிவுப்பசி. எனவே, மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பிறந்த வீட்டைவிட்டு, உற்றார் உறவினரைவிட்டு, ஊரைவிட்டு, நாட்டைவிட்டுப் போகிறார்கள். அல்லது விரட்டப்படுகிறர்கள். புதிய இடங்களில் தமது பழைய நினைவுகளின் ஏக்கத்தில் வாழ்க்கையைத் தேடுகிறார்கள்.

முறையாகப் பொருள் சேர்க்கப் புறப்படும் தலைவனின் பிரிவால் தலைவி, வீட்டிலே கலங்குவதும் இடைவழியில் தலைவியை நினைத்து ஏங்கித் தலைவன் கலங்குவதும் சங்கப் பாடல்களில் இருக்கின்றன. ஒருபக்கம் பொருள் எனும் யானை, மறுபக்கம் தலைவியின் அன்பு என்ற யானை. இரண்டும் எதிரெதிர் பக்கம் இழுக்க, இற்று நைந்துபோகிறது நெஞ்சு எனும் பழங்கயிறு என்று தலைவனின் ஏக்கம் நற்றிணையில் சொல்லப்படுகிறது.

பாபிலோன் நதிக்கரையில் அமர்ந்து ஏக்கத்தில் மக்கள் கதறியதைப் "பழைய ஏற்பாடு' சொல்கிறது. ஹோமரின் ஒடிசியில் தொடக்கக் காட்சியே மனைவியைப் பிரிந்திருக்கும் ஏக்கத்தைச் சொல்கிறது.

உலகில் எல்லா இடங்களிலும் நிலம் இருக்கிறது; காற்று இருக்கிறது; சூரியன் இருக்கிறது ஆனாலும் ஒவ்வொரு வீட்டிலும் ஊரிலும் நாட்டிலும் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. வேப்பமரக் காற்றும் பவழமல்லி மணமும்கூட எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மதுரை மல்லிகைக்குத் தனி மணம்தானே! இப்படி மனிதர்களைப் பிறந்த வீடும் ஊரும் நாடும் நினைவுகளால் ஏங்க வைக்கின்றன.

இன்றைக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என்ற காரணங்களோடு அரசியலாலும் மக்கள் வேறிட வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், தாய்மொழி, பிறந்த நாட்டுப் பண்பாடு, தங்கள் குடும்ப வாழ்க்கை முறை ஆகியவற்றை இழந்து, வாழப்போவதாகக் கனவுகாணும் வெளிநாட்டுச் சூழலில் குழந்தைகளை வளரும்போதே ஏக்கத்தில் அல்லாட வைக்கின்றனர். வளர்ந்த பின்பும் இந்த ஏக்கத்தோடு வாழ்வைத் தொடர்கிறவர்களில் பலர், உலகம் முழுதும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகி வருகின்றனர். படைவீரர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வீட்டு ஞாபகத்தோடு இருப்பவர்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாதாம்; படிப்பில் கவனம் இருக்காதாம். அவர்களிடம் வேலை வாங்கவும் முடிவதில்லையாம்.

இந்தவகை ஏக்கத்திலிருந்து இவர்களைக் குணப்படுத்த அமைப்புகள் பல உருவாகி வருகின்றன. கலைநிகழ்ச்சிகள், இலக்கியங்கள் வழியாக, வேறிட வாழ்க்கையில் பிறந்த இடத்தின் ஏக்கங்களை நிறைவுசெய்யப் பார்க்கிறார்கள். இந்த ஏக்கத்தை ஏர்ம்ங் ள்ண்ஸ்ரீந் என்று சொல்கிறார்கள். இதற்கு, வாசகர்கள் இரா. மோகனசுந்தரம், செ.சத்தியசீலன், பழ. கவிதா சிவமணி, வானவில் மூர்த்தி, அ. கருப்பையா, சி. இராமச்சந்திரன், என்.ஆர்.ஸத்தியமூர்த்தி, ப.இரா.இராச அம்மன், எஸ். சுரேஷ், வெ.ஆனந்தகிருஷ்ணன், கோ. மன்றவாணன்,

ஜனநேசன், ஆகியோர் தந்துள்ள தமிழாக்கங்கள் வருமாறு:

ப் இல்லத்தார் பற்றிய நினைவு, அக நினைவு, வீட்டுப் பிரிவு

நோய், வீட்டு நினைவுநோய், இல்ல நினைவு, வீட்டுப்பற்று, மனையுணர்வு, மனைப்பிணி, உள்நோய், அகநோய், எதிர்பார்ப்புநோய், இருப்பிடநோய், குடும்ப ஏக்கம், தாயக ஏக்கம், இல்லநோய், இல்லிலாநோய், இல்நீங்கு நோய், இல்நினை பிணி, மனத்தாக்க உளச்சோர்வு, உட்கள நினைநோய், இயலிட நினைநசல், ஏலாநிலை, வீட்டு ஞாபகம், வீட்டு ஏக்கம், உள்ளகப்பிணி, அகநோய், வீட்டுக்கவலை, மனக்கவலை, குடும்ப நினைவுநோய், இல்லப் பிரிவுநோய், இல்லப்பிணி, வீடு பிரிவுளைச்சல், வீட்டார் பரிவு நினைவு, வீட்டார் பிரிவு நோய்.

ஏர்ம்ங் ள்ண்ஸ்ரீந் என்பதை நோய் அல்லது பிணி என்று சொல்வதைவிட, "ஏக்கம்' என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். எனவே, எஸ்.சுரேஷ் தெரிவித்துள்ள வீட்டேக்கம் பொருத்தமாக உள்ளது. வீட்டேக்கத்தில், வீடு இருக்கும் நாட்டேக்கமும் அடங்கும். வீடு என்பதில் உறவுகளும் சுற்றுச் சூழலும்கூட அடங்கும்.

Home sick - - வீட்டேக்கம்

அடுத்த வாரத் தேடல் -Interaction

செவிடாய், குருடாய், ஊமையாய்...

ருவனிடம் செல்வச் செருக்கு வந்துவிட்டால் அது அவனை எந்நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை விவேகசிந்தாமணி பாடல் குறிப்பிடுகிறது.

""ஏர்பெறும் இருநிதி செருக்க(து) எய்திடில்

தேர்செவி உடையவர் செவிடர் ஆகுவர்

ஓர்தரும் உரைவலார் ஊமை ஆகுவர்

கூர்விழி உடையவர் குருடர் ஆவரே'' (87)

செல்வச் செருக்கு வந்துவிட்டால் அவர்கள், மற்றவர்கள் கூறும் கருத்துகளை செவி மடுக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வர் என்பதால் "செவிடர்' என்றும், அனைவரிடத்திலும் கலகலப்பாக முன்பு பேசியவர்கள் இப்போது, மற்றவர்களிடம் பேசினால் மதிப்புக் குறையும் என எண்ணிப் பேசாதிருப்பதால் "ஊமை' என்றும், நண்பர், உறவினர் என யாரிடமும் கண்ணோட்டமின்றி நடந்து கொள்வதால் "குருடர்' என்றும் பாடல் கூறுகிறது. இப்படி செல்வச் செருக்கினால் செவிடாய், குருடாய், ஊமையாய் வாழ்பவன் வாழ்ந்தும் பயனற்றவனாவான் என்கிறது பாடல்.

- ச.சவுந்திரலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT