முகப்பு
தமிழ்மணி

"நெடுநல்வாடை'யில் அறிவியல் சிந்தனைகள்

சங்ககாலப் புலவர்கள் வெறும் கற்பனையையும் அழகியலையும் தாண்டி, தாங்கள் அறிந்திருந்த அறிவியல் நுட்பங்களையும் தங்களின் பாடல்களில் புதைத்து வைத்துள்ளனர்.

Updated On : 5 ஏப்ரல், 2015 at 1:36 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:35 AM

சங்ககாலப் புலவர்கள் வெறும் கற்பனையையும் அழகியலையும் தாண்டி, தாங்கள் அறிந்திருந்த அறிவியல் நுட்பங்களையும் தங்களின் பாடல்களில் புதைத்து வைத்துள்ளனர். அவ்வகையில் பத்துப்பாட்டுள் ஏழாவது பாடலாக வரும் நக்கீரர் இயற்றிய "நெடுநல்வாடை' 188 அடிகளாலான ஒரு குறும்படம் என்று குறிப்பிடலாம். பதினெட்டுக் காட்சிகளில் துல்லியமாகப் படம் பிடிக்கலாம்.

வினைமேற் சென்றுள்ள தலைவனை எண்ணித் தலைவி அனுபவிக்கும் பிரிவுத் துயர் பற்றியது. இது நிகழ்வது வாடைக்காலத்தில். எனவே, தலைவனுக்கு நீண்டிருக்கும் நல்ல வாடைக்காலாமாகவும் தலைவிக்கு நீண்டிருக்கும் துன்பம்செய் வாடைக்காலமாகவும் அமைவது நெடுநல்வாடையாகும். இது காட்டும் சில அறிவியல் செய்திகளைக் காண்போம்.

வாடைக்கால நிகழ்வுகளே நெடுநல்வாடையின் சாரம். இவற்றின் தொடக்கத்தில் குறிப்பிடும்போது, ""பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென'' (அடி}2) என்று சுட்டுவதில் "பெயல்' என்பது மழையைக் குறிக்கும் சொல்லாகும் (பெய்தல் தன்மையுடையது என்கிற பொருளில் பெயல்). "புதுப்பெயல்' என்பது நல்ல மழைநீர் அல்லது மாற்றம் பெற்ற நீர் எனலாம் (Refresh Water). அதாவது, உப்புத் தன்மையிலிருந்து புதுப்பிக்கப்பெற்ற புதுப்பெயல் எனும் அறிவியல் சிந்தனைக்கு நம்மை ஆட்படுத்துகிறது. குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும்போது, அளவிடும் கருவிகள் இல்லாத சூழலில் பின்வரும் அடிகளைக் குறிப்பிடுகிறார் நக்கீரர். ""குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்''. ஒரு மலைக்குன்று குளிர்ச்சியடைகின்ற அளவு என்ற சூழலில் குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடுகிறார்.

Advertisement

மழைக்காலமும் பனிக்காலப் பருவமாக இருக்கும் சூழலில் பொழுதை அறியமுடியாது. இரவு, பகல் எதுவென அறியாத் தடுமாற்றம் நிகழ்கிறது. இல்லுறை தெய்வத்தை மாலையில் வழிபட வேண்டும். "பித்திகம்' எனப்படும் பூ மலர்வதைக் கொண்டு மாலைக்காலம் வந்துவிட்டது என அறிகின்றனர்.

""செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து

அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து''

(அடி: 40-41)

என்கிறார். "அவிழ்பதம்' என்பது மலர்வதைக் குறிக்கிறது. அடுத்து இக்குளிர் காலத்தில் பறவைகள், விலங்குகள் அனுபவிக்கும் துயரைக் குறிக்க வந்த நக்கீரர், விலங்கு, பறவைகளின் பண்பு, செயல் குறித்த அறிவியல் செய்திகளையும் குறிப்பிடுகிறார்.

""நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை'' (அடி}91) என்பதில், நெடிய மயிரினையுடைய கவரிமான், குறுகால் அன்னமொடு என்பதில் குறிய (குறுக்கால்) கால்களையுடைய அன்னம் என்றும், அரசியின் கட்டிலை அலங்கரிக்கும் யானைத் தந்தங்கள் நாற்பது வயது நிரம்பிய யானையிடமிருந்து தானே உதிர்ந்த தந்தங்களைக் கொண்டது என்றும் குறிப்பிடுகிறார். ""தச நான்கு எய்திய பணைமருள் நோன்தாள்''(அடி}115) என்கிறார். இது யானை தந்தத்தின் முதிர்வு வயதைக் குறிப்பிடும் அறிவியலாகும்.

சில தொழில்நுட்பச் செய்திகளையும் நெடுநல்வாடையில் காணமுடிகிறது. தொழில்நுட்ப வல்லுநரை (Technician) கைவல் கம்மியன் எனும் சொல்லால் குறிப்பிடுகிறார். அரண்மனையின் தொழில்நுட்பத்தைப் பல்வகை அடிகளால் விளக்குகிறார். மனைபூசை போடுவதற்கு முன்னர் "இரண்டிடத்து நாட்டின இருகோல்களிடத்தும் சாயாத நிழலால் தாரைபோக ஓடுகின்ற நிலை'யைக் குறித்து சிற்பநூல் வல்லுநர் பிடித்த நூலைக்கொண்டு திசைகளைக் குறிப்பதும், உத்திரம் அமைத்தல், அதில் செவ்வரக்கு பூசுதல் போன்றவற்றையும் குறிப்பிட்டு, அரசியும் மன்னனும் உறங்கும் கட்டிலைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதன் தொழில்நுட்பத்தையும் பின்வரும் அடிகளில் விளக்குகிறார்.

""உள்ளி நோன்முதல் பொருந்தியடியமைத்துப்

பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்''

(அடி : 122}123)

தற்காலத்தில் "வார்னிஷ்' எனப்படும் வர்ணம் பூசுவதைப்போல செவ்வரக்கு, "ஐயவி' எனப்படும் வெண்சிறு கடுகு, சாதிலிங்கம் போன்றவை பயன்படுத்தப்பட்ட குறிப்புகளையும் நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சாளரங்களின் தொழில்நுட்பம், தெற்கு திசையிலிருந்து வரும் காற்று, அதன் தன்மை எனப் பலவற்றை நுட்பமாகப் பேசுகிறது நெடுநல்வாடை. இந்நூலில் இதுபோன்று பல அறிவியல் செய்திகள் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.