முகப்பு
தமிழ்மணி

இந்தவாரம் கலாரசிகன்

இந்தவாரம் கலாரசிகன்

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:24 AM
பகிர்:

சர்வதேச அளவில் புத்தகத் திருவிழாக்களின் காலம் தொடங்கிவிட்டது. பிப்ரவரியில் தில்லியில் நடக்கும் புத்தகத் திருவிழாதான் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகத் திருவிழாக்களில் முதலாவதாக நடைபெறுவது என்றாலும், மே மாதத்திற்குப் பிறகுதான் புத்தகத் திருவிழாக்கள் சூடு பிடிக்கத் தொடங்கும்.

மே மாதத்தில் துருக்கி, கிரீஸ், போலந்து, இத்தாலி, நியூயார்க் என்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேசப் புத்தகத் திருவிழாக்களில் பங்குபெற புத்தக விற்பனையாளர்களும், புத்தகப் புழுக்களான வாசகர்களும், நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருப்பார்கள். ஜூலை மாதத்தில் டோக்கியோவிலும், ஹாங்காங்கிலும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள், உலகத்தை ஆசியாவின் பக்கம் திருப்புவது வழக்கம். ஹாங்காங் புத்தகத் திருவிழாவில் முப்பதுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து 560க்கும் அதிகமான வெளியீட்டாளர்கள் பங்கு பெறுவார்கள். ஹாங்காங் நாட்டு மக்களில் 60% பேர், வாரத்திற்கு குறைந்தது ஐந்து மணி நேரமாவது புத்தகம் வாசிப்பவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

சர்வதேச அளவில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரத்தில் நடைபெறுவதுதான். எனக்குத் தெரிந்து பிராங்க்பர்ட் புத்தகத் திருவிழாவுக்குத் தவறாமல் விஜயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் "காலச்சுவடு' கண்ணன். இவருடன் ஒருமுறை பிராங்க்பர்ட் புத்தகத் திருவிழாவுக்கு நானும் போக வேண்டும் என்று மனதிற்குள் ஆசை நிறையவே இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சென்னையிலும், ஈரோட்டிலும் நடக்கும் புத்தகத் திருவிழாக்கள் அனைத்துப் புத்தகப் பிரியர்களையும் ஈர்ப்பவை. நெய்வேலி புத்தகத் திருவிழாவையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது, சமீபத்திய அரியலூர் புத்தகத் திருவிழாவுடன் தமிழகத்தில் பல மாவட்டங்கள் புத்தகத் திருவிழா நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டு வருகின்றன. ஒருபுறம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்கிற கவலை அதிகரிக்கும் அதேநேரத்தில், புத்தகத் திருவிழாக்கள் அதிகமாகவே நடைபெறுவதும்

புத்தக விற்பனை அதிகரித்து வருவதும் மகிழ்ச்சி அளிக்கும் மாற்றங்கள்.

வழக்கம்போல இந்த ஆண்டும் ஈரோட்டில் கோலாகலமாகப் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. புத்தகத் திருவிழா நடத்துவது என்பது பெரிதல்ல. புதிய பல உத்திகளையும், நிகழ்ச்சிகளையும் புகுத்தி, பொதுமக்களையும், குறிப்பாகப் பெற்றோர்களைப் புத்தகத் திருவிழாவுக்கு ஈர்ப்பது என்பதுதான் மிகவும் முக்கியம். பெரியவர்கள் வந்தால், கூடவே, குழந்தைகளும் வருவார்கள். வாசிப்புப் பழக்கம் உறுதி செய்யப்படும்.

இந்த விஷயத்தில் "மக்கள் சிந்தனைப் பேரவை' சார்பில் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவைக் கடந்த பதினோரு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவரும் ஸ்டாலின் குணசேகரன் முன்னுதாரணமாகத் திகழ்பவர். இவரது குழந்தைகளுக்கான உண்டியல் திட்டம், எல்லாப் புத்தகத் திருவிழா அமைப்பாளர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.

ஆண்டுதோறும் இன்னொரு புதுமையையும் செய்து வருகிறார் ஸ்டாலின் குணசேகரன். 2012-இல் தி.க.சி., விக்கிரமன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், நீல. பத்மநாபன், கு. சின்னப்ப பாரதி, பி. செல்வராஜ் ஆகிய ஏழு மூத்த படைப்பிலக்கியவாதிகளை ஒரே மேடையில் அமர்த்தி, கெளரவித்தார். 2013-இல், சிவசங்கரி, இந்துமதி, விமலா ராணி, ஜோதிர்லதா கிரிஜா, இரா. மீனாட்சி ஆகிய பெண் படைப்பிலக்கியவாதிகளை ஈரோடு புத்தகத் திருவிழாவில் கெளரவித்தார்.

இந்த ஆண்டு, நன்னன், தமிழண்ணல், ச.வே. சுப்பிரமணியம், இளங்குமரனார், ச. கந்தசாமி, க.ப. அறவாணன் என்று ஆறு மூத்த தமிழறிஞர்களை தமிழகத்தின் மூத்த ஆதினகர்த்தரான 93 வயதான தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரால் பாராட்டச் செய்திருக்கிறார். எந்த நிகழ்ச்சிகளிலும், ஏன் ஆதீன நிகழ்ச்சிகளில்கூட சமீப காலமாகக் கலந்து கொள்ளாத அடிகளாரைத் தமிழின் பெயரால் அழைத்து வந்திருப்பதற்கு ஸ்டாலின் குணசேகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்த் தாயின் பெருமைமிகு தருணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்!

ஈரோடு புத்தகத் திருவிழாவில் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரால் பாராட்டுப் பெற்ற மூத்த தமிழறிஞர்களில் ஒருவரான க.ப. அறவாணனுக்கு இது இரட்டிப்புப் பாராட்டாக அமைகிறது. இன்று அகவை எழுபத்தைந்தைக் கொண்டாடும் அவருக்கு தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் வழங்கி இருக்கும் வாழ்த்து, அடுத்த கால் நூற்றாண்டு காலம் தமிழ்ப் பணியாற்றும் உடல் வலிமையையும், மன வலிமையையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

புதுவையில் இன்று அறவாணன் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் அவரது வைர விழா நிகழ்ச்சிகளில், குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளாரால் விருது வழங்கி கெளரவிக்கப்படும் "பன்மொழிப் புலவர் புதுவை சுந்தர இலட்சுமி நாராயணனுக்கும், "தினத்தந்தி' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஐ. சண்முகநாதனுக்கும் வாழ்த்துகள்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனது புத்தகம் வெளிவந்தால் எனக்கொரு பிரதியை அனுப்பி வைத்து விடுவார். அவரது எழுத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் வாசகர்களுள் நானும் ஒருவன் என்பதை அவர் அறிந்திருப்பதும், என் மீது அவருக்கு இருக்கும் தனிப்பட்ட அன்பும்தான் அதற்குக் காரணம். இப்போது அவர் அனுப்பித் தந்திருக்கும் புத்தகம் "அஃகம் சுருக்கேல்'. அவர் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல, அவர்களைப் பெற்றவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய அற்புதமான கருத்துக் கருவூலம் இந்தத் தொகுப்பு.

"அஃகம் சுருக்கேல்' பிரதியுடன், அவருக்கு மும்பையில் (அன்றைய பம்பாயில்) கம்பன் பயிற்றுவித்த ஆசிரியர் கல்லிடைக்குறிச்சி ரா. பத்மநாபன் தமிழாக்கம் செய்த "பகவத் கீதை' புத்தகத்தின் பிரதியொன்றையும் அனுப்பி இருந்தார். அடுத்த ஆண்டு ரா. பத்மநாபனின் பிறந்த நூற்றாண்டு. அவர் 1989-ஆம் ஆண்டு தமிழாக்கம் செய்த "பகவத் கீதை' இதுநாள்வரை கையெழுத்துப் பிரதியாகவே இருந்திருக்கிறது. நாஞ்சில் நாடனின் துணையுடன் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.

"தமிழ்க் கடல்' ராய. சொக்கலிங்கத்தின் மாணவர்தான் ரா. பத்மநாபன். காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரியின் நிர்வாகியாக இருந்து, பணி ஓய்வு பெற்று மும்பை சென்றவர். ஓய்வுபெற்ற பின்னரும்கூடத் தமிழ்ப் பணியில் ஈடுபட்டவர். தேடி வந்த மாணவர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர். வேங்கடேச சுப்ரபாதம், நாராயணீயம் ஆகிய நூல்களைத் தமிழாக்கம்

செய்தவர்.

"அஃகம் சுருக்கேல்' ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்ட நான், இப்போதைக்கு ரா. பத்மநாபனின் "ஸ்ரீமத் பகவத் கீதை' புத்தகத்தில், நாஞ்சில் நாடனின் முன்னுரையைத்தான் படித்திருக்கிறேன். முன்னுரை மேலும் படிக்கத் தூண்டுகிறது என்பது மட்டும் உண்மை.

வேடந்தாங்கலுக்குப் போகும் போதெல்லாம், ஒரே மரத்தில் பல்வேறு பறவைகள், பல்வேறு நாட்டிலிருந்து வந்து, மனிதன் உள்ளிட்ட ஏனைய விலங்கினங்களைப் போலல்லாமல், ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொள்ளாமல் தங்கியிருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுக்கும்போது கவிதையாக்க விழைந்திருக்கிறேன். இந்த வார "ஆனந்த விகடன்' இதழில் பூமா ஈஸ்வரமூர்த்தி முந்திக்கொண்டு விட்டார், தனது "பெங்களூரு' என்கிற கவிதையின் மூலம்.

நிறைய நிறைய

பறவைகள் வந்தமரும்

மரங்கள் எதுவென

தேடியும் யோசித்தும் இருக்கிறேன்

ஒரு நாளில் உணர்ந்தேன்

எல்லா மரங்களும் எல்லா

பறவைகளையும் ஏற்றுக் கொள்கின்றன

எல்லா பறவைகளும் எல்லா

மரங்களையும் ஏற்றுக் கொள்கின்றன!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.