இந்தவாரம் கலாரசிகன்
இந்தவாரம் கலாரசிகன்
இந்தவாரம் கலாரசிகன்
ஒருபுறம் ஆறுதல், ஒருபுறம் துக்கம். இன்று மாலை 5 மணிக்கு நடந்திருக்க வேண்டிய இந்த ஆண்டுக்கான தமிழ் இலக்கியத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நம்மிடையே உரையாற்ற மேதகு டாக்டர் அப்துல் கலாம் இல்லையே என்பதுதான் துக்கத்திற்குக் காரணம். அதே நாளில், அதே நேரத்தில், அதே இடத்தில், அவரை நினைவுகூரும் எழுச்சி நிகழ்வை நடத்த முடிந்திருக்கிறதே என்பது ஆறுதலுக்குக் காரணம்.
புகைப்படக் கண்காட்சிக்காகப் புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்தபோதும், ஆவணப்படுத்துவதற்காக அவருடைய உரைகளையும், பங்களிப்பையும் வரிசைப்படுத்தியபோதும், அந்த மாமனிதரின் பன்முக ஆளுமை எப்படிப்பட்டது என்பதை நினைத்து பிரமிப்பில் ஆழ்ந்து விட்டோம் நாங்கள். ஐரோப்பிய யூனியன் பார்லிமெண்டில் புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலையும் அதன் ஆங்கில விளக்கத்தையும் எடுத்துரைத்த அவரது தமிழ்ப் பற்று பெருமிதம் கொள்ள வைத்தது. "தினமணி' இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து தில்லியில் மாநாடு நடத்தியபோதும், கடந்த ஆண்டு "தமிழ் இலக்கியத் திருவிழா' எடுத்தபோதும், அவர் காட்டிய ஆர்வம் இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கிறது.
கலாம் சாரின் அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பதும், அவரது இழப்புக்காக வருந்துவதும் அவருக்கே பிடிக்காது. நமது இளைஞர் கூட்டம் செய்ய வேண்டியதெல்லாம் அவரது கனவை நனவாக்குவது. குறைந்தபட்சம், ஆண்டுதோறும் ஆளுக்கு ஒரு மரம் என்று அவரவர் பிறந்த நாளில் நடுவது, அதை அடுத்த ஓராண்டுக்குப் பராமரிப்பது என்று உறுதி எடுத்துக்கொண்டால்கூடப் போதும், கலாம் சாரின் ஒரு கனவை நாம் நனவாக்கியதாக இருக்கும்.
இன்று மாலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மலரஞ்சலி செலுத்த வருபவர்கள், அங்கே அனைவரது பார்வையிலும் படும்படியாக வைக்கப்பட்டிருக்கும் அவருடைய பத்து கட்டளைகளை உறுதிமொழியாக எடுத்துக்கொள்ள வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்பதுதான் இன்றைய "கனவல்ல... எழுச்சி...' நிகழ்வின் நோக்கம் என்பதை தயவுசெய்து மறந்து விடாதீர்கள்!
இங்கிலாந்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. எழுதியிருப்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று, தற்போது மருத்துவரான அவருடைய மகனின் குடும்பத்துடன் மான்செஸ்டரில், தன் மனைவியுடன் வசித்து வரும் முனைவர் மா.செல்வராசன். இவருடைய மனைவி ஆ.அமிர்தகௌரி சென்னை ராணி மேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
பேரா.செல்வராசனின் பெயர்த்தி இயல் என்கிற 13 வயதுச் சிறுமி. அவர் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற "மென்சா' அறிவுத்திறன் தேர்வில் 161 புள்ளிகள் பெற்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன், "மைக்ரோசாப்ட்' பில்கேட்ஸ், கணிதமேதை ஸ்டீபன் ஹாக்கிங் ஆகிய மூவரையும் விஞ்சியிருக்கிறார்.
தமிழினத்துக்குப் பெருமை தேடித் தந்திருக்கும் இயலுக்குப் பாராட்டுகள். பேரா.செல்வராசனுக்கும், முனைவர் அமிர்தகெளரி அம்மையாருக்கும் தாழ்மையான வேண்டுகோள். இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் தினமணி நாளிதழின் இந்த ஆண்டுக்கான தமிழ் இலக்கியத் திருவிழாவில் நீங்களும் பங்குபெற வேண்டும். தமிழ்கூறு நல்லுலகுக்கு "இயல்' என்கிற உங்கள் செல்வத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும்!
சென்ற வாரம் பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த மௌரின் காட்ப்ரி என்கிற 67 வயதான ஆங்கிலோ இந்தியப் பெண்மணி, சென்னை பெசன்ட் நகரின் சாலையோர நடைபாதையில் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தார். அவருடைய உறவினர்கள் இறந்துவிட்டனர்; குழந்தைகள் கிடையாது; கணவரும் 15 ஆண்டுகளுக்கு முன்னால் காலமாகிவிட அனாதையான காட்ப்ரி எல்லாவற்றையும் இழந்து நடைபாதைக்கு வந்து விட்டிருந்தார்.
கிரெஸ்வெல் வெய்ட்மேன் என்கிற ஆங்கிலோ இந்தியர் "ஆங்கிளோஸ் யுனைடெட்' என்கிற முகநூல் பக்கத்தை நடத்தி வருகிறார். அவர், மௌரின் காட்ப்ரியின் புகைப்படத்துடன், அவரது பரிதாப நிலைமை பற்றித் தனது முகநூல் பக்கத்தில் செய்த பதிவு, காட்டுத் தீயாகப் பரவியது. இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 8,000 பேர் மௌரின் காட்ப்ரிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். இப்போது மௌரின் காட்ப்ரி, வியாசர்பாடியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்டு, நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.
இந்தச் செய்தி ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைப் பற்றி என்னைச் சிந்திக்கத் தூண்டியது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புகூட, சென்னை வேப்பேரி பகுதியில் பல ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் இருந்தன. இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் ரயில்வே ஊழியர்களாக, குறிப்பாக, ரயில் இஞ்சின் ஓட்டுநர்களாகப் பணியாற்றியவர்கள். டைப்பிஸ்ட், பெண் உதவியாளர் என்றால் உடனே கவுன் அணிந்த ஆங்கிலோ இந்தியர்களின் நினைவுதான் வரும்.
1931-இல் நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவிலிருந்த ஆங்கிலோ இந்தியர்களின் எண்ணிக்கை 1,38,895. இந்த எண்ணிக்கையில் பர்மாவிலிருந்த 19,200 ஆங்கிலோ இந்தியர்களும் அடங்குவர். சுதந்திரத்திற்குப் பிறகு ஏறத்தாழ லட்சம் பேர் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். இங்கே தங்கிவிட்டவர்கள் தங்கள் சுய அடையாளங்களைப் பொது ஜனத்திரளில் கலந்து இழந்துவிட்டபோதிலும், இச்சமூகம் தாய் மொழியாகிய ஆங்கிலத்தை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழ்கிறது.
1926-ஆம் ஆண்டு ஹெர்பர்ட் ஆலிக் ஸ்டார்க் என்கிற வங்காளக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் "ஹோஸ்டேஜஸ் டு இந்தியா' (ஏர்ள்ற்ஹஞ்ங்ள் ற்ர் ஐய்க்ண்ஹ) என்று ஆங்கிலோ இந்தியர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். தங்கள் சமூகத்தின் செவ்விலக்கியமாக இதை ஆங்கிலோ இந்தியர்கள் போற்றுவார்கள். இந்தப் புத்தகம் இப்போது ஜெ.நிர்மல்ராஜ், அனுராதா ரமேஷ் ஆகிய இருவரால் "இந்தியாவின் பிணைக்கைதிகள்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தப் புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன்.
இந்த வாரத்திற்கான கவிதையைத் தேர்ந்தெடுக்க நான் விதித்துக்கொண்ட நிபந்தனை, அது கலாம் சாருக்குப் பிடித்ததாகவும், அவரது கருத்துக்கு உடன்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். தமிழகத்தில் படித்து, வளர்ந்து இப்போது சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் கவிஞர் தியாக. இரமேஷின் "மரப்பாச்சிப் பொம்மைகள்' என்கிற கவிதைத் தொகுப்பில் இருந்து ஒரு கவிதை.
இறந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும்
மனக்குதிரையை ஓட்டாமல்
நிகழ்காலத்தில் பொருந்தி இருந்தால்,
காலம் நம் கட்டுக்குள் இருக்கும்
அப்போது உன் வெற்றியென்பது
மேகத்தால் மறைக்க முடியாத சூரியன்
காகிதத்தால் மூடமுடியாத நெருப்பு...