பக்திப் பனுவலாகவும் பைந்தமிழ் நூலாகவும் இலங்கும் திருவாசகம், அறவியல் கருத்துகளோடு அறிவியல் செய்திகளையும் உள்ளடக்கிய நூலாகும். திருவாசகத்தில் நான்காவது பதிகம் போற்றித் திருவகவல்! 225 அடிகளில், நிலைமண்டில ஆசிரியப்பாவாலான இப்பதிகம், இறைவனின் முதன்மையைப் போற்றுகிறது. அப் பதிகத்தின் முதற் பகுதி (வரி:12-27) உயிர்களின் உற்பத்தி பற்றிப் பேசுகிறது. அப்பகுதி இன்றைய மருத்துவத்தின் கருவியல் (Embriology) என்ற அறிவியல் கருத்துகளை ஒத்திருப்பது வியப்பு!
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊரலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தங்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் (அடி:13-25)
கரு உருவாவதும், தப்பிப் பிழைப்பதும் உயிரின் வினைக்கேற்ப நிகழும் என்பது சைவ சமயம் கூறும் தத்துவம். பெண்ணின் கருப்பையில் பெல்லோபியன் குழாய்ப் பாதையின் முதிர் அண்டம் விந்தணுவுடன் இணைந்து கருமுட்டை (Zygote) உண்டாகிறது. இதுவே கருவுறுதல் (Fertilization) எனப்படுகிறது. இக்கரு சிறிது சிறிதாக வளர்ந்து நிரம்பும் பருவுடம்புடன் பிறக்கும். இவ்வாறு வளர்ந்து பிறத்தற்கு இடையே உள்ள அழிவு நிலைகள் பலவுண்டு. மக்களாகப் பிறக்கும் உயிர்களும் அத்துணை அழிவுகட்கும் தப்பிப் பிழைத்தல் வேண்டும். "ஈனமில் கிருமி' எனக் குன்றுதல் இல்லாத பல அழிவுகளின் திறத்தைக் குறிப்பிடுகிறார் மணிவாசகர்.
கருவுற்ற முட்டை அடையும் வளர்ச்சிகளை - வளர்கருவின் நிலைகளை (Embryo) "ஒரு மதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும், இரு மதி விளைவின் ஒருமையின் பிழைத்தும்' என்ற வரிகள் சுட்டுகின்றன. தான்றிக் காயின் அளவில் 4 மி.மீ. அளவில் சிறிதாக இருக்கும். கருப்பையின் திசுச் சுவர்கள் ஆழமாகப் பதிந்து வளரத் தொடங்கும். அந்நிலையில் தாயின் அறியாமையால் அழிதல், தானே அழிவுறுதல் என இரு நிலைகளில் கருச்சிதைவு ஏற்படலாம். ஆகவேதான் மணிவாசகர், "இருமையிற் பிழைத்தும்' என்கிறார் போலும்.
இரண்டாம் மாதத்தில் கருவானது சுமார் முக்கால் அங்குலம் நீளமுள்ளதாகவும், மூலக்கரு முட்டையை விடச் சுமார் 40,000 மடங்கு பெரியதாகவும் அமையும். இந்நிலையில் உயிர்வளியானது (ஞஷ்ஹ்ஞ்ங்ய்) கருவிற்குச் செல்லும். விரல்கள், கண், செவி, நாசி, வாய் முதலிய உறுப்புகளின் ஆரம்பகால முளைகள் வெளிக்கிளம்புகின்றன; இரத்த ஓட்டமும் முழுமையடைகிறது என்ற கருவியல் நூல் செய்திகளை உள்ளடக்கி, இரு மாதங்களில் வளர்ச்சியையும் உள்ளடக்கி, "இருமை, ஒருமைகளினின்று பிழைத்து' எனக் குறிப்பாகச் சுட்டியுள்ளார்.
மூன்றாம் மாதத்தில் கருவுற்ற மங்கையர் புளிப்புப் பண்டம், மண் முதலியவற்றை உண்ணும் மசக்கை ஏற்படும். இச்செயலை "வயவுறு மகளிர் வேட்டுண்ணின் அல்லது பகைவருண்ணா வருமன் விடையே' (புறம் 20) என்று புறநானூறு பேசுகிறது. கருவைப் பற்றிய கவலையின்றி மண் முதலியவற்றை உண்ணும் மசக்கை (அம்மதம்) யிலிருந்து கரு அழியாமல் தப்ப வேண்டும்.
இரண்டாம் மாதம் வெளிக் கிளம்பிய கண்ணின் ஆரம்பகால முளைகள் ஈரிரு திங்களான நான்காம் மாதத்தில் நன்கு திறக்கும் என்பது கருவியல் செய்தி. இப் பார்வைப்புலத்தின் வளர்ச்சி பற்றிய எண்ணத்தை உள்ளடக்கி மணிவாசகர், "பேரிருள் பிழைத்தும்' எனக் கட்புலன் வளர்ச்சியைக் குறித்தாரோ? என்ன ஒப்புமை!
தாயின் வயிற்றில் இருக்கும் கருக் குழவி ஐந்தாம் மாதத்தில் சாவில் (முஞ்சுதல்) இருந்து பிழைத்தல் வேண்டும். மசக்கையில் மெலிவுற்ற கரு ஐந்தாம் மாதம் வளர்ச்சியின்றி புறக் காரணிகளால்
அழியும் நிலை ஏற்படலாம் என்பது அறிவியல், இறையருளால் "முஞ்சுதல் பிழைக்கும்' என்பது இறையியல்.
ஆறு, ஏழாம் மாதங்களில் கரு வளர்ச்சியில் நிகழும் தடைகளைச் சுட்டுமாறு, வளர்ச்சியைக் காட்டுவார் மாணிக்கவாசகர். பெண்களின் சினை முட்டையினைப் "பூ' எனக் குறித்தல் தமிழர் மரபு. "பூப்பின் புறப்பா டீராறு நாளும்' (தொல். பொருள் 185) எனத் தொல்காப்பியம் குறிப்பிடும். முழுவளர்ச்சி அடையாது - வளர்ந்து வரும் கருவைக் "காய்' என்பது பேச்சு வழக்கு!
உயிர்களின் கருப்பையினுள் தோன்றும் சினை முட்டையின் தோற்றத்தை, "தாயினது செந்நீரில் குமிழி போன்ற பொருள் உண்டு. அப்பொருள் பூவைப் போல அரும்பி, மலர்ந்து கூம்பும்' என்கிறது கருவியல்! அந்த அறிவியலை வெளிப்படுத்துமாறு "அலர்' (மலரின் ஒரு நிலை) எனத் திருவாசகம் சுட்டுவது எவ்வளவு பொருத்தம்?
ஏழாவது திங்களில் கருவானது நன்கு வளர்ச்சி அடைய வேண்டும். "சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும், குறளும், ஊமும் செவிடும் மாவும் மருளும்...' இன்றி, (புறம் 28) குழந்தை பிறத்தல் வேண்டும். ஆகவேதான் ஆறு மாதம் முடிந்து ஏழாம் மாதம் நடைபெறும் போது சீமந்தம், வளைகாப்பு முதலிய சடங்குகளைச் செய்கின்றனர்.
கருவின் இக்காலகட்டத்தில் (23 வாரங்களில்) கரு சூழ்ப்பை (Amnion) ஒரு திரை போன்று கருவினை மூடியிருக்கும். இத்திரை கருவினைக் குளிர், புவியீர்ப்பு, கேடு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும். "தாழ்புவி பிழைக்கும்' என்ற சொற் தொடரை முன்பின்னாக "புவிதாழ்' எனக்கொண்டு நிலத்தில் வீழ்வதினின்று தப்ப வேண்டும் என்ற பொருளைப் பெறலாம்.
இவ்வாறு மணிவாசகப் பெருமான் ஊரலர், தாழ்புவி முதலிய சொற்களின் வழி இறையருளால் பிழைக்க வேண்டும் என அறிவியல் கூறுகளைக் கொண்ட இறையியலைச் சுட்டுகிறார்.
நன்கு வளர்ச்சி பெற்ற கரு, கருப்பையோடு அசைதல் எட்டாம் திங்களில் நடைபெறும். அம்மெய் வருத்தத்தினின்றும் குழவி பிழைத்தலை "எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்' என்பது மணிவாசகம்! ஒன்பதாம் திங்களில் குழந்தை வெளிவரச் செய்யும் முயற்சியினின்றும் பிழைத்தல் வேண்டும் என்பதனை "வருதரு துன்பம்' என்கிறார். அதாவது எட்டு, ஒன்பது மாதங்களில் ஏற்படும் குறைப் பிரசவச் சூழல்களில் இருந்து விடுபட்டு வளர்தலைக் "கட்டமும் வருதரு துன்பமும்' பிழைத்து எனச் சுட்டுவது போற்றற்குரியது.
பெறுமவற்றுள் சிறப்புற்ற மக்கட்பேறு பத்தாம் மாத இறுதியில் நிகழும். இதனை, "தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தல்' வேண்டும் என்கிறார். நாளமில்லாச் சுரப்பிகளின் செயற்பாட்டால் இக்கருப்பை சீராகச் சுருங்கத் தொடங்கும். அதனால் கரு - குழந்தை வெளித்தள்ளப்படும். இக்கருப்பைச் சுருக்கத்தால் தாய்க்கு வலி (Labour Pain) ஏற்படுகிறது என்பது மருத்துவ நூல் தரும் செய்தி. வெளிவரும் குழந்தையும் இடநெருக்கடியால் துன்புறலாம். இத்துன்பங்களினின்று இறையருளால் தாயும் சேயும் பிழைத்தல் வேண்டும் என இறைமையைப் போற்றும் திருவாசகத் தொடர்கள், பழந்தமிழரின் மருத்துவ அறிவினையும் அல்லவா போற்றி நிற்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.