முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -11

முதன்முதலில் விமானம் வைத்திருந்தவன் யார்? குபேரன். அதுவும் மிகப்பலர் ஏறிச் செல்லக்கூடிய விமானம். ஓட்டுநர் இல்லாத விமானம். இராவணன் தந்தை விச்சிரவசுவுக்கு நான்கு மனைவியர். விச்சிரவசுவுக்கும் தேவகன்னிக்கும் பிறந்தவன் குபேரன்; அவனுக்கும் கைகசிக்கும் பிறந்தவர்கள்

Updated On : 7 ஜூன், 2015 at 12:58 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:11 AM

முதன்முதலில் விமானம் வைத்திருந்தவன் யார்? குபேரன். அதுவும் மிகப்பலர் ஏறிச் செல்லக்கூடிய விமானம். ஓட்டுநர் இல்லாத விமானம். இராவணன் தந்தை விச்சிரவசுவுக்கு நான்கு மனைவியர். விச்சிரவசுவுக்கும் தேவகன்னிக்கும் பிறந்தவன் குபேரன்; அவனுக்கும் கைகசிக்கும் பிறந்தவர்கள் இராவணன், கும்பகருணன், வீடணன்; அவனுக்கும் உட்போத்கதைக்கும் பிறந்தவர்கள் மகோதரன், மாபெரும்பக்கன்; அவனுக்கும் கும்பிநசிக்கும் பிறந்தவர்கள் கரன், தூடணன், திரிசரன். இப்பகுதிச் சகோதரர்களுள் (half-brothers)  அண்ணன் குபேரனைத் தாக்கி அவனிடமிருந்து இலங்கையையும் புட்பக விமானத்தையும் இராவணன் கவர்ந்து கொண்டான் என்கிறது இராமாயணம்.

மேலும், "பஞ்சவடிப் பகுதியில் மாமுனிவர்கள் தவத்தால் சித்திபெற்று உடலை விட்டுப் புதிய உடலை ஏற்றுப் பகலவன் போல் ஒளிரும் விமானங்களில் ஏறித் துறக்க உலகு அடைந்தனர்' என்கிறார் வான்மீகி முனிவர்.

புறநானூற்றில் உறையூர் முதுகண்ணன் சாத்தனாரின் பாட்டில், "வலவன் ஏவா வானூர்தி'(27) பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கட்டியங்காரன் ஏமாங்கத நாட்டின் மீது படையெடுத்தபோது சச்சந்தன் மனைவி விசையை மயிற்பொறியில் ஏறி விண்வழியாகச் சென்று சுடுகாட்டில் சீவகனை ஈன்றாள் என்கிறது சீவகசிந்தாமணி.

Advertisement

இவற்றைக் கற்பனை என்று உதறவும் முடியவில்லை; முழுவதும் உண்மை என்று ஏற்கவும் முடியவில்லை. ஏனெனில், 20ஆம் நூற்றாண்டில் "ரைட்' சகோதரர்கள்தான் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்பது நாம் பள்ளியில் படிக்கும் அறிவியல் பாடம். ஓர்வில் ரைட், வில்பர் ரைட் என்னும் இருவரும் 1903ஆம் ஆண்டு திசம்பர் 17ஆம் நாள் விமானம் ஒன்றை உருவாக்கிப் பன்னிரண்டு விநாடி பறந்து சாதனை படைத்தார்கள் என்கிறது வரலாறு.

அவ்விமானம் பல்வேறு மாற்றங்களைப் பெற்று மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கும், சரக்குகளைக் கொண்டு செல்வதற்கும் போரில் எதிரிகளைத் தாக்குவதற்கும் பயன்படுகிறது. ஆயிரம் பேர் பயணம் செய்யக்கூடிய விமானங்கள் வந்துவிட்டன. வெவ்வேறு போர் விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றே Drone என்பது.

இது வடிவத்தில் மிகச் சிறியது. உளவு ஆராய்வதற்குப் பயன்படுகிறது. சில நாடுகளில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களை இதன் உதவியால் கண்டுபிடித்து அழித்திருக்கிறார்கள். இப்போது இதனை வணிக முறையிலும் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் வீட்டுக்கே அவர்கள் வேண்டும் பொருள்களை எடுத்துச்சென்று அளிப்பதற்கு இதனைப் பயன்படுத்தப் பெருவணிக நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

இதற்குரிய தமிழாக்கத்தைக் காண்பதற்கு முன் எம். எஸ். இரணியநாதன் எழுதியுள்ள ஒரு கருத்து சிந்தனைக்குரியது. ""அமெரிக்கர் இதனை உண்டாக்கியபோது ஈழ்ர்ய்ங் என்று பெயரிட்டனர். அப்படியிருக்க, நாம் மட்டும் அதன் காரண காரியங்களை உள்ளடக்கிய பொருளைத் தருவது போன்ற சொற்களைத் தேட வேண்டுமா? நம் மரபுக்கேற்பக் கூறலாமே'' என்று தெரிவித்துள்ளார். அவர் கருத்து முற்றும் சரியே. நம் மரபினைப் போற்றுவதே முறைமை.

ஈழ்ர்ய்ங் என்பதற்கு ஒலி என்றும் பொருள் இருப்பதனையொட்டி இம்மொலி ஊர்தி, மெல்லொலி வானூர்தி என்று குறிக்கலாம் என்று சிலர் எழுதியுள்ளனர். பகைவர் அறியா வகையில் செல்லும் இதனை அப்படிக் குறிப்பது பொருந்தாது. எம். எஸ்.இரணியநாதன், சுய இலக்கழிப்பான் என்றும், என்.ஆர்.ஸத்யமூர்த்தி குறிகொல் ஆளில் ஊர்தி, குறி அறி ஆளில் ஊர்தி என்றும் குறிக்கலாம் என்று கருதுகின்றனர். கோ. மன்றவாணன் புறநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டி, ஆளிலா வான்கலம் என்று குறிக்கலாம் என்கிறார்.

வடிவத்தில் சிறிதாகவும் விண்ணில் செல்வதாகவும் இருப்பதால் இதனைச் குறுவிண்கலம் என்று குறிக்கலாம் என்றும், அது நிலவை நெடுவெண்திங்கள் என்று குறிப்பது போன்று செறிவாக அமையும் என்றும் கருதியிருந்தேன். குறுகிய வடிவத்தைவிடக் குறியறிந்து செல்வதுதான் இவ்வூர்தியின் தனித்தன்மை. ஆதலின், அத்தன்மையினைக் காட்டுவதாகச் சொல் அமைதல் சிறப்பு.

ஆதலின், என். ஆர்.ஸத்யமூர்த்தி, கோ.மன்றவாணன் ஆகியோர் கருத்தையொட்டி, குறியறி விண்கலம் என்பது இன்னும் சிறப்பாக அமையும். இது வணிக முறையில் இலக்கு நோக்கிச் செல்வதையும் உள்ளடக்கியதாக அமையும்.

அடுத்த வாரத்திற்குரிய சொல்

Affluenza(அப்புளூயன்ஸா)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.